குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்!
இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு லெபனானின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. லெபனானில உள்ள ஐ.நா அலுவலகங்களை¬முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான லெபானியர்கள் அந்த அலுவலங்களை அடித்து நொறுக்கினர். நிலைமை மோசமாவதை உணர்ந்த லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தொலைக்காட்சி மூலம் கோரிக்கை விடுத்தார். ஹிஸ்புல்லா அமைப்பினரும் மக்கள் அமைதி காக்குமாறு கோரியுள்ளனர்.
எங்களது மக்களை சின்னாபின்னப் படுத்துவதற்காக இஸ்ரேலுக்கு குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் அனுப்பி வருகிறார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால் எங்களது உடலில் இருந்து சிதறும் ஒவ்வொரு துண்டும் உயிர்த்தெழுந்து அவர்களுக்கு எதிராக போராடும் என்பதை அவர் நினைவில்கொள்ள வேண்டும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
இந் நிலையில் , இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து,கோஸ்டாரிகா உள்ளிட்ட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலைக் கண்டித்து பெய்ரூட், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், கராச்சி உள்ளிட்ட நாடுகளில் பிரமாண்ட கணடனப் பேரணிகள் நடந்தன.
டுனீஷியா3 நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. வாடிகனிலும் இந்த கண்டனம் எதிரொலித்தது. அங்கு நடந்த பிரார்ததனைக் கூட்டததில் லெபனானில் அமைதி திரும்ப உருக்கமான பிரார்த்தனை நடத்தப்பட்டது. போப்பாண்டவரும் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தபபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
க்வானா படுகொலைகளுக்கு ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் கொடூரமான போர் குற்றம் என அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் போக்கு ஈராக்கையும், அதன் பிராந்திய நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என ஈராக் துணைப் பிரதமர் பர்ஹாம் சலா கூறியுள்ளார். இதுதவிர பல்வேறு அரபு நாடுகளும்,¬முஸ்லீம் நாடுகளும் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரைஸ் கண்டனம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் இந்த கொடூர சம்பவம் குறித்துக் கூறுகையில், அப்பாவி மக்கள் 54 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி மக்களைத் தாக்குவதை இஸ்ரேல் தவிர்க்க வேண்டும். போரை நிறுத்த இஸ்ரேல் பரிசீலிக்க வேண்டும். அதேசமயம், போரை நிறுத்துவதன் மூலம் எதையும் விட்டுக்கொடுக்கிறோம் என்று இஸ்ரேல் நினைக்கத் தேவையில்லை.
ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் கருத்து மாற்றத்திற்கும் இடமில்லை. லெபனான் எல்லையில் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் கருத்தை இன்னமும் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றார் ரைஸ்.
முன்னதாக ஜெருசலேம் நகரில், இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட்டை ரைஸ்சந்தித்துப் பேசினார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பிளைன் ரெத்மியர் கூறுகையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். ஹிஸ்புல்லா விஷயத்தில் அமெரிக்காவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இஸ்ரேல் தனத பிராந்தியத்தைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது என்றார் அவர்.