தமிழ்நாட்டில் ஈழப்போராளிடம் ஆயுதம் பறிமுதல், பிரபாகரனும் கைது!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 75) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
“தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா??
மன்னாரில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக குறிப்பிடுவதற்கிடையில் சென்னையில் நடைபெற்ற சில சம்பவங்களை கூறியாக வேண்டும்.
1986 நவம்பர் 15-16-17ம் திகதிகளில் பெங்களூரில் சார்க் மாநாடு நடைபெற இருந்தது. சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் வருகிறார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.
ஜே,ஆர். உயிருக்கு தமிழ்நாட்டில் உள்ள போராளிகளால் ஆபத்து நேரலாம் என்று பயந்தார் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி.
இந்திய மத்திய உள்துறையிலிருந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு இரகசியத் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள போராளிகள் பெங்களூர் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தது அத்தகவல்.
எம்.ஜி.ஆர். உத்தரவு
அப்போது தமிழ்நாட்டில் உளவுத்துறைக்கு பொறுப்பாக இருந்தவர் மோகனதாஸ். அவரை அழைத்துப் பேசினார் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் போட்ட கட்டளையைக் கேட்ட மோகனதாசுக்கு ஆச்சரியமாக இருந்தது.
எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்: “தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள்.
சார்க் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனால் பிரதமரே நேரடியாக என்னிடம் அதனைச் சொல்லியிருக்கிறார்.” என்றார் எம்.ஜி.ஆர்.
அதனால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படலாமே என்று மோகனதாஸ் தயங்கியபோது “பிரதமருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எப்படியாவது செய்தேயாக வேண்டும்” என்று கண்டிப்பாக கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.
நவம்பர் 8ம் திகதி அதிகாலையில் சென்னையில் உள்ள சகல போராளி முகாம்களும், அலுவலகங்களும் தமிழகப் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டன.
போராளிகளுக்கு முதலில் அதிர்ச்சி. தமிழக பொலிசாரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் ‘யார் உத்தரவு?’ என்று கேட்டார்கள்.
“பிரதமரின் விருப்பம். ஆயுதங்களை ஒப்படையுங்கள். சார்க் மாநாடு முடிந்ததும் தந்துவிடுவோம். ஒரு பிரச்சனையுமில்லை” என்றார்கள் பொலிஸ் அதிகாரிகள்.
பிரபாகரனும் கைது செய்யப்பட்டார். ரெலோ தலைவர் செல்வமும் கைது செய்யப்பட்டார். புளொட் இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன் அப்போது டெல்லியில் இருந்தார்.
அவரை தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறாமல் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் வைத்தனர் டெல்லி பொலிசார்.
கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் பெறுமதியான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
பொலிஸ் நிலையத்தில் பிரபாகரனை அவமானப்படுத்தும் வகையில் பொலிசார் நடந்து கொண்டனர். புகைப்படம் எடுத்தனர்.
‘சார்க்’ மாநாடு முடியும்வரை போராளிகள் இயக்க தலைவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்பியது தமிழக அரசு.
பிரபாகரனுடன் அப்போது எம்.ஜி.ஆர். நெருக்கமாக இருந்தார். தமிழக பொலிசார் நடந்து கொண்ட விதத்தால் பிரபாகரனும் ஏனைய இயக்கத் தலைவர்களும் அதிருப்தி கொண்டனர்.
பெங்களூர் பேச்சு
இதேவேளை சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜே.ஆருக்கும், பிரபாகரனுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஒழுங்கு செய்தார் ராஜிவ் காந்தி.
இந்திய விமானப்படையின் தனி விமானம் ஒன்றில் சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார் பிரபாகரன். அவருடன் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் கூடச் சென்றிருந்தார்.
பெங்களுர்ர் பேச்சுவார்த்தைக்கு செல்ல பிரபாகரன் விரும்பவில்லை. தம்மிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேறு நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு தயங்காது என்பதை பிரபா புரிந்து கொண்டார்.
மறுத்துப் பேசுவதைவிட பேச்சுக்குச் சென்றுவிட்டு முறித்துக்கொண்டுவரலாம் என்றுதான் பிரபா புறப்பட்டுச் சென்றார்.
ஏனைய இயக்கங்களை ஒதுக்கிவிட்டு பிரபாகரனை மட்டுமே பெங்களூருக்கு அழைத்துச் சென்றது இந்திய அரசு. பெங்களூர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சென்னை திரும்பினார் பிரபாகரன்.
சென்னை திரும்பிய பிரபாகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தமிழக அரசு. புலிகளிடம் இருந்த தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிசார் கைப்பற்றினார்கள்.
எம்.ஜி.ஆர். உத்தரவுப்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமிழக உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் கூறியிருந்தார்.
“தமிழ்நாட்டில் நடைபெற்ற தொலைத் தொடர்பு சாதன பறிப்பு விடயத்தில் தமிழக அரசு மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” என்று அறிவித்தார் மத்திய உள்துறை இணை அமைச்சர் ப.சிதம்பரம்.
அமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பு தமிழக அரசை சங்கடத்தில் ஆழ்த்தியது.
உண்ணாவிரதம்
அதேவேளை பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் உள்ள தமது அலுவலகத்தில் ஆரம்பித்தார்.
பிரபாகரன் நடத்திய முதலாவது சாத்வீகப் போராட்டமும் அதுதான். பிரபாகரன் பிடிவாதகுணமுடையவர் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆரும் அவ்வாறு பிடிவாத குணமுடையவர்தான். அதனால் தான் பிரபாகரன்மீது எம்.ஜி.ஆர். தனி விருப்பம் கொண்டார் என்றும் ஒரு கருத்து உண்டு.
சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தபோது யாழ்ப்பாணத்தில் அதற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர் புலிகள்.
சென்னையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம்-7வும் இருந்ததாக புத்திசாலித்தனமாக பிரசாரம் செய்ய வைத்தார் கிட்டு.
சாம் 7 வாங்குவதற்காக என்று புலிகள் முன்பு நிதிதிரட்டினார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. அதனை வாங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன.
பார்த்தார் கிட்டு. இதுதான் சந்தர்ப்பம் என்று சாம் 7 ஐயும் கைப்பற்றிவிட்டர்கள் என்று சொல்லவைத்துவிட்டார்.
யாழ்-குடாநாடெங்கும் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்களில் புலிகள் எழுப்பிய கோஷங்களில் ஒன்று:
“தமிழக அரசே! எடுத்த சாம் 7ஐ திருப்பிக்கொடு!”
பிரபாகரனின் உண்ணாவிரதத்தை அடுத்து எம்.ஜி.ஆர். மனம் மாறினார். தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தாருங்கள் என்றுதான் பிரபாகரன் உண்ணாவிரதமிருந்தார்.
எம்.ஜி.ஆர். என்ன செய்தார் தெரியுமா? சார்க் மாநாடு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் திருப்பிக் கொடுத்துவிடுமாறு உத்தரவு போட்டுவிட்டார்.
சென்னையில் ஈழப் போராளி அமைப்புக்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை இந்தியாவெங்கும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டது.
பத்திரிகைகள் சாடல்
பத்திரிகைகள் சில வரவேற்றன. வேறு சில எதிர்த்துக் கருத்து வெளியிட்டன. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ‘தேடலைத் தொடர்க’ என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கமே எழுதியிருந்தது. அதில்
முக்கிய பகுதி இது:
“தமிழ் நாட்டிலுள்ள இலங்கைப் போராளிகள் மீதான சென்றவார அதிரடி முற்றுகை ஆச்சரியம் தருகிறது. போராளிகள் வருத்தப்பட்டார்கள்.
கொழும்புக்குத் திருப்தி. தம் மத்தியில் கொலைகார ஆயுதங்களுடன் திரிந்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை மக்களுக்கு நிம்மதியைத் தந்தது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு காவல்துறையால் நடத்தப்பட்டிருந்தாலும், டெல்லிக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் போராளிகளது எதிர்ப்பை நிறுத்திவிடலாம் என்று பொழும்பு நினைத்தால் அது புத்திசாலித்தனமல்ல. யதார்த்த நிலைகளைக் கருதி கொழும்பு ஆவன செய்ய வேண்டும்.”
‘இந்து பத்திரிகையும் ஒரு தலையங்கம் எழுதியது. அது இதுதான்:
“இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்திய இரசின் கொள்கை நாளுக்கு நாள் குழப்பமாகிக் கொண்டு வருகிறது. அதன் காரணங்கள், நோக்கங்கள் எவை என்பது இப்பொழுது வெளிப்படையாகி வருகிறது.
இலங்கை தீவிரவாத அமைப்புக்கள் மீது தமிழ்நாட்டு காவல்துறை பெரியளவில் வேறுபாடு காட்டாத ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த இயக்கங்களின் முன்னணித் தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அண்டை நாட்டு இனப்பிரச்சனையில் முதலில் ‘புலி வேட்டை’ என்று அழைக்கப்பட்டு, பிறகு ‘ஆயுதம் களைந்து அவமானப்படுத்தல்’ என்ற பெயரிடப்படாத இந்த நடவடிக்கை முழுக்க, முழுக்க தமிழ்நாட்டு காவல்துறையினரால் மட்டுமே எடுக்கப்பட்டது.
தெளிவில்லாத ஒரு முன் தகவல் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டது என்பது இப்போது தெரியவருகிறது.
…இந்த ஆயுதம் களைதல் நடவடிக்கை உலகளாவியரீதியில் ஒரு உணர்ச்சிமயமான ஊக விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது:
அதாவது போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படுகின்றன.
அவை தமிழ்நாட்டில் குவிக்கப்படுகின்றன. அவை இலங்கை அரசுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை இந்திய அதிகார மட்டங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.
இதே நிலை தொடருமா! தமிழ்நாட்டு காவல் துறையினர் நடிவடிக்கை எதனை உணர்த்துகின்றது என்று தெரியவில்லையே.
இந்திய அரசின் இலங்கைக் கொள்கையைத் தடம் புரளாமல் திருத்தி அமைப்பதில் பிரதமர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்!”
‘டைம்ஸ் ஒஃப் இந்தியா’ பின்வருமாறு சாடியது. “இந்த நடிவடிக்கை எதேச்சாதிகாரமானது. அவமானப்படுத்தக்கூடிய அளவு கொடுமையானது என்று விடுதலைப் புலிகள் குறிப்பிட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த வார்த்தைகள் கடுமையானவையாக இருந்த போதும் இது மிகவும் தேவைப்பட்டது.”
சரியான செயல்பாடு என்ற தலைப்பில் போடு இந்துஸ்தான் டைம்ஸ் எழுதிய தலையங்கத்தில் ஒரு பகுதி:
“பெங்களூரில் இரண்டாவது சார்க் உச்சி மாநாடு நடைபெற சில நாட்களே இருந்த வேளையில், சென்றவார இறுதியில் இலங்கைப் போராளிகள்மீது தமிழ்நாடு அரசு எடுத்த ஆயுதம் களைதல் நடவடிக்கை மிகவுத் சரியானதே.
மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு இந்த முனைவில் இறங்கியிராது என்பது தெளிவு.
பார்க்கப்போனால் இந்த நடவடிக்கைக்கு சற்று முன்னதாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். புது டெல்லி சென்றிருந்தார்.”
பாய்ந்தது பதினாறடி
ஈழப்போராளிகளிடம் ஆயுதம் களையும் நடவடிக்கை எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் நடந்த ஒன்றல்ல. ஆனால் உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் எம்.ஜி.ஆர். எட்டடி பாயச் சொன்னால் பதினாறு அடி பாய்ந்து விட்டார் என்பதே போராளி இயக்கங்களின் கருத்தாக இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஈழப்போராளிகள் அமைப்புக்கள்மீது மோகனதாசுக்கு பிடிப்புக் கிடையாது. அவர்மீதும் போராளி அமைப்புக்களுக்கு சந்தேகம் இருந்தது.
மோகனதாசின் கடுமையான போக்கின் விளைவாகத்தான் ஆயுதங்களை கைப்பற்றும் நடவடிக்கை பகிரங்கமாக்கப்பட்டது. இயக்கத் தலைவர்களும் அவமானத்திற்கு உள்ளானார்கள்.
கைப்பற்றிய ஆயுதங்களை திருப்பிக் கொடுக்குமாறு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டது மோகனதாசுக்கு உடன்பாடாக இருக்கவில்லை.
பதவியில் இருந்து ஓய்வுபெறப்போகிறேன் என்று எம்.ஜி.ஆரை மறைமுகமாக மிரட்டிப்பார்த்தார். எம்.ஜி.ஆர். அசைந்து கொடுக்கவில்லை. மோகனதாஸ் விடுப்பில் வீடு சென்றுவிட்டார்.
தமிழக உளவுத்துறை அதிகாரியாகவும், தமிழக பொலிஸ் டி.ஜி.பி யாகவும் முக்கிய பதவிகள் வகித்த மோகனதாஸ் இலங்கை அரசின் அதிகாரிகளை இரகசியமாக சந்திப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
‘இலங்கை உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை தான் விரும்பவில்லை’ என்று ஓய்வு பெற்ற பின்னர் கூறினார் மோகனமாஸ்.
அவர் அதற்கு சொன்ன நியாயம் இது: “இன உணர்வு அல்லது வேறு காரணங்களினால் இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை.
இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு பஞ்சாப், காஷ்மீர் மாநிலத் தீவிரவாதிகளுக்கு உதவிவரும் பாகிஸ்தானைக் கேள்விகள் கேட்கும் உரிமை இல்லை.”
ஓய்வுபெற்ற பின்னர் அதனை பகிரங்கமாக தெரிவித்த மோகனதாஸ், பதவியில் இருந்தபோது தனது நடவடிக்கைகள் மூலம் தனது நிலைப்பாட்டை மறைமுகமாக காட்டியிருந்தார்.
ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்ட போதும் பிரபாகரன் சமாதானமாகவில்லை. இனிமேலும் தமிழ் நாட்டில் தங்கியிருப்பது நல்லதல்ல. நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்பட வேண்டியும் ஏற்படலாம். அதனால் யாழ்ப்பாணம் சென்றுவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் பிரபாகரன்.
லெப் கேணல் விக்டர்
மன்னார் மோதல்
மன்னாரில் அடம்பனில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மன்னார் பிராந்தியத்திற்கு பொறுப்பாக இருந்தவர் மறுசீலன் என்னும் விக்டர்.
மோதலில் விக்டர் கொல்லப்பட்டார். இராணுவத்தினர் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இருவர் கைது செய்யப்பட்டனர்.
இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிச் சென்றனர். இராணுவத்தினரிடம் கைப்பற்றிய ஆயுதங்கள், கொல்லப்பட்ட இராணுவத்தினரது உடல்கள், கைதான இராணுவத்தினர், விக்டரின் உடல் அனைத்தும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டன.
கந்தசாமி கோவில் அருகே கண்காட்சி
இயக்கங்கள் தமக்குள் மோதுவதையிட்டு யாழ்ப்பாணமக்களிடம் வருத்தம் நிலவியது. ரெலோ உறுப்பினர்கள் பலர் வீதிகளில் எரிக்கப்பட்ட காட்சிகளை நேரில் கண்ட பலர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
அவற்றையெல்லாம் சுத்தமாக துடைத்தெறியும் வகையில் மன்னார் மோதல் வெற்றியை பெரியளவில் கொண்டாடத் திட்டமிட்டார் கிட்டு. நல்லூர் கந்தசாமி கோவிலருகில் கண்காட்சியும், அஞ்சலியும் ஒன்றாக நடத்தப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு காண்பிக்கப்பட்டனர்.
இராணுவத்தினரை புலிகள் பிடித்து வந்தமை மக்களுக்கு ஆச்சரியம். பெருந்தொகையான மக்கள் சென்று பார்வையிட்டனர்.
மூத்த தளபதி லெப் கேணல் விக்டர்
விக்டரின் மரணச் சடங்கிலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
விக்டர் அஞ்சலிக்காக கிட்டு தெரிவித்த கருத்து விஷயமறிந்தவர்களை புருவம் உயர்த்த வைத்தது.
கிட்டு சொன்னது இதுதான்: “புலிகள் அனைவரும் விக்டரை விரும்புகிறார்கள். தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களுடன் களத்தில் நிற்க வேண்டும்.” என்றார் கிட்டு.
கிட்டு சொன்னது மறைமுகமாக பிரபாகரனுக்குத்தான் என்று பேசப்பட்டது. பிரபாகரன் அப்போது தமிழ் நாட்டில் இருந்தார்.
புலிகளிடம் உள்ள தமது இரண்டு வீரர்களையும் விடுவிப்பது தொடர்பாக ஒரு இராணுவ அதிகாரி கிட்டுவுடன் தொடர்பு கொண்டார்.
அவர்தான் கெப்டன் கொத்தலாவல. யாழ் கோட்டை இராணுவ முகாமில் இருந்த கொத்தலாவலக்கும் புலிகளுக்கும் இடையே தொலைத் தொடர்பு சாதனம் மூலமாக தொடர்பு ஏற்பட்டது.
அதேநேரம் புலிகளது முக்கிய உறுப்பினர்கள் இருவர் இராணுவத்தினரிடம் இருந்தனர்.
தமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டிருந்த புலிகளின் படகு ஒன்றை கடற்படையினர் துரத்திச் சென்று தாக்கினார்கள்.
படகில் இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் உயிர் தப்பினார்கள். ஒருவர் அருணா. இன்னொருவர் காமினி.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்று கூறிவந்தமையால், தமது உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை வெளியே கூறுவதில் புலிகளுக்கு தர்மசங்கடமாக இருந்;தது.
அருணா கிட்டுவுக்கு நெருக்கமானவர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அருணாவை வெளியே கொண்டுவந்து விடலாம் என்று நினைத்தார் கிட்டு. இரண்டு இராணுவத்தினரை விடுதலை செய்வதற்குப் பதிலாக, தமது உறுப்பினர்கள் இருவரையும் விடுவிப்பதுதான் கிட்டுவின் நோக்கம்.
கோட்டை முகாமுக்கும், புலிகளது காவலரணுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிட்டுவும் கொத்தலாவலயும் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.
கொத்தலாவலவுடன் கொழும்பில் இருந்து சென்ற பிரிகேடியர் ஆனந்த வீரசேகராவும் சந்திப்பில் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
கிட்டு தனது மெய்ப்பாதுகாவலர்களுடனும், தனது மெய்ப்பாதுகாவலராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கிய ரஹீம் என்னும் கனகரெத்தினத்துடனும் கொத்தலாவலயை நோக்கிச் சென்றார்.
மறுபுறம் ஒரு மாமிச மலைபோன்ற தோற்றத்துடன் கொத்தலாவல வந்து கொண்டிருக்கிறார்.
Average Rating