ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே..!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு இணங்கி ஆட்சி செய்வதற்காக தேசிய அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக இருகட்சி ஒருமைப்பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றோம் என சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் அனைத்துக்கும் இனவாத கொள்கைகளை கடைப்பிடிக்க அதிகாரம் உள்ளது. ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினுல் உள்ள எவரும் இனவாத போக்கில் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் ,மஹிந்த ராஜபக்ஷவும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது அவர்கள் போட்டியிட்டாலும் சட்ட மீறலாகும். எனவே அடுத்த தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கும் நோக்கிலேயே சுதந்திர கட்சி பயணிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஒரு பிரச்சிணை தேசிய பிரச்சினையாக உருவெடுக்கும் போது அதற்கு அதிக தடவைகள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே தீர்வு கண்டுள்ளது. தற்போது எமது நாட்டில் நல்லிணக்கம் இல்லாமையே தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதற்கு தீர்வு காண்பதற்கு சுதந்திர கட்சி என்ற வகையில் பல்வேறு முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கமைய உலக நாடுகள் மத்தியிலும் சகலரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அரசியலமைப்பை பின்பற்றி நடக்கும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். அதனால் அவருக்கு ஜீ.7 மாநாட்டில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் இந்தியவிற்கான விஜயம் மேற்கொண்டிருந்த போது இராஜதந்திர முறையில் இந்தியாவுடனான சில சிக்கல்களை களைந்தார் இந்நிலையில் சர்வதேச தரவரிசையில் இடம்பெறும் நாடுகள் பலவற்றுடனும் எமக்கு உள்ள சிக்கல்களை இராஜதந்திர ரீதியில் அணுகி தீர்வை பெற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது.
இலங்கையின் மீது தற்போது பல்வேறு நாடுகளும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளன. எனவே இவ்வாறான நாட்டின் ஒற்றுமைக்கு பாலமாகவுள்ள தலைவரின் கீழ் சுதந்திர கட்சியை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனால் எமது கட்சி எந்த ஒரு தனி நபரின் பின்னாலும் செல்லாது என்பதில் மாற்றுக்கொள்கை இல்லை.
எமது கொள்கைகளை மக்கள் ஆதரிக்கின்றனர். காலி கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களும் கிருலப்பணை கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களேயாவர். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு எதிரானவர்கள் எனவே இந்த இருதரப்பும் ஒன்றிணையம் பட்சத்தில் கெம்பல் மைதானத்தில் நிறைந்த கூட்டத்தில் விடவும் பல மடங்கு அதிகரித்துவிடும். அதனால் தற்போது எமது ஆதரவாளர்கள் கற்பித்துள்ள பாடத்தின் பின்னராவது இணைந்து செயற்பட வேண்டும்.
அவ்வாறு ஒன்றிணைந்து செல்லும் பட்சத்தில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எவரும் இனவாத போக்கில் பயணிக்க முடியாது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகள் எவரும் இனவாதம் பேசலாம். அதற்கு எந்த வித தடையும் இல்லை அது அவர்களின் தனிபட்ட் சுதந்திரம்.
இந்நிலையில் தற்போது நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இணக்கப்பாட்டு அரசியல் செய்து வருகின்றோம். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியினதும் சுதந்திர கட்சியினதும் கொள்கைகள் ஒன்றென ஆகிவிடாது. எனவே தற்போது எமது நாட்டில் நல்லிணக்கம் இல்லாமை தேசிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது. அதற்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவே ஐக்கிய தேசிய கட்சியுடன் இணக்கப்பாட்டு அரசியல் செய்கின்றோம்.
ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி செய்தால் நாட்டில் குழப்ப நிலைகள் ஏற்படலாம் அந்த நிலை ஏற்படாமல் இருக்கும் வண்ணம் பாதுகாகப்பதற்கும் நாம் இவ்வாறு இணக்கப்பாட்டு அரசியல் செய்கின்றோம். சகலருக்கு நீதியானதாக அமையும் தேர்தல் முறையொன்றை உருவாக்கவும் இதனால் மாத்திரமே முடியும். சுதந்திர கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் வரையில் இணக்கப்பாட்டு அரசியல் தொடரும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை குறைத்துக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் மேலும் சில அதிகாரங்களை குறைக்கவுள்ளோம். 19 ஆது திருத்தத்தின் மூலம் இந்த அதிகார குறைப்புச் செய்யப்பட்டது. அத்துடன் 5 வருட பதவிகாலத்துடன் இரு முறை ஒருவர் ஜனாதிபதியாக தெரிவாகலாம் என்றும் சட்டம் திருததம் செய்யப்ப்ட் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக முடியாது.
அடுத்த ஜனாதிபதி தேர்ததில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே உள்ளார். சுதந்திர கட்சியில் இரண்டாம் நிலை தலைமைத்தும் ஒன்று உருவாக்கப்படாமையினாலேயே இந்த நிலை தோன்றியுள்ளது.
கடந்த ஆட்சியில் கட்சியின் முதலாம்,இரண்டாம் , மூன்றாம் நிலைகளில் ராஜபக்சக்களே இருந்தனர். அதனால் சரியான தலைமைத்துங்கள் உருவாகவில்லை. எனவே எதிர்காலத்தில் 2 ஆம் நிலை தலைமைத்துவங்களை உருவாக்குவதிலும் அவதானம் செலுத்தவுள்ளோம்.
மஹிந்தவின் உகண்டா விஜயம்
உகண்டா நாட்டில் 6 வருடங்களாக சர்வாதிகார ஆட்சி இடம்பெறுகின்றது. அதேபோல் சூடான் நாடும் தற்போது பிளவடைந்துள்ளது. அந்த நாடுகளின் தலைவர்களை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு விஜயம் மேற்கொண்டிருந்தமை ஏற்புடையதல்ல.
அவருடன் இருக்கின்ற ஆலோசகர்கள் அவரை கட்டாயத்தின் பேரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை இல்லாது செய்யும் ஐக்கிய தேசிய கட்சியிள் திட்டத்திற்கு துணைபோயுள்ளனர். அதனால் அவர் உகண்டா செல்வதற்கான செலவை அரசாங்கம் வழங்கியது ஆனால் சென்ற பின்னர் இவ்வாறான மேசாமான அரசியல் சூழல் உள்ள நாட்டுக்கு மமஹிந்த சென்றுவிட்டார் என்று சாடுகின்றனர்.
கடந்த காலங்களில் கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய விமல் வீரவன்சவுக்கும் குமார் குணரத்தினத்திற்கும் ஒரே குற்றச்சாட்டே உள்ளது. தற்போது குமார் குணரட்னம் சிறையில் இருக்கின்றார் ஆனால் விமல் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார். அவர் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் சுதந்திர கட்சியை உடைக்கும் சூழ்ச்சியின் பங்குதாரர் ஆகியுள்ளார் அதனாலேயே அவருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்றார்.
Average Rating