நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…!!
அன்றைய தினமே எனது உடைமைகளுடன் அந்தக் கிராமத்திற்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன்.
குருவியின் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய் போல இயக்கத்தில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே எனக்குத் தரப்பட்ட வேலை காரணமாக, எனக்குள் பயமும் கலக்கமும் ஏற்பட்டது.
அதனைச் சரியாகச் செய்து முடிப்பது பற்றிய தீவிர யோசனைகளும் ஏற்பட்டன. கிளாலி கடற்கரையில் மகளிர் முன்னணியால் மாவீரர் சந்திரநாயகியின் பெயருடன் ஒரு தும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது.
தென்னந்தோட்டங்களில் கிடைக்கும் பொச்சு மட்டையைச் சேகரித்து ஆறு மாதங்கள்வரை கடற்கரை மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
அதன்பின் அதனை அடித்துத் தும்பாக்கிய பின் கயிறு, தும்புத்தடி போன்ற பாவனைப் பொருட்களை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் நோக்கம் அந்தக் கிராமத்துப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தலாகும்.
அத்துடன் அந்தக் கிராமத்திற்குரிய இயக்க வேலைத் திட்டங்களையும் செய்ய வேண்டும்.
இப்படியானதொரு வேலைத் திட்டத்தைச் செயற்படுத்துவது எவ்விதமான முன் அனுபவங்களுமில்லாத எனக்கு ஆரம்பத்தில் மிகவும் கடினமான பணியாகவே தென்பட்டது.
ஆனாலும் அக்கிராமத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் ஆலோசனையுடன் ஒவ்வொரு பணியாக நிறைவேற்றியபோது எனக்குள் தன்னம்பிக்கையும் ஆர்வமும் மேலிட்டது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பத்துப் பெண்கள் வரை அத்திட்டத்தில் வேலை செய்தார்கள். மாதத்திற்கு மூவாயிரம் ரூபாவிற்கு உட்பட்டதாகத்தான் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படக் கூடியதாக இருந்தபோதிலும், அன்றைய சூழ்நிலையில் அவர்களுக்குப் பெரும் உதவியாகவே அத்திட்டம் இருந்தது.
அந்தக் கிராமத்தில் மகளிர் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் நிர்வாகத்தின் கீழ் சிறுவர்களுக்கான ஒரு முன்பள்ளியையும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் உருவாக்கினோம்.
அந்தக் கிராமத்தில், ஆண் போராளிகள் எவரினதும் உதவியின்றிப் பொதுமக்களது மனமுவந்த ஆதரவுடன் இரு பெண் போராளிகள் மட்டுமே இவ்வேலைத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
அதே காலப்பகுதியில் ஆனையிறவு மற்றும் பூநகரி பகுதிகளில் தங்கியிருந்த இராணுவத்தினர் கிளாலி ஊடாக யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறுவதற்கான நகர்வுகளை மேற்கொண்டால் அவற்றை முறியடிப்பதற்கான நோக்குடன் கிளாலி கடற்கரையோரமாக விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் நிலை கொண்டிருந்தன.
150 பேரைக் கொண்ட அந்த அணிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் தளபதி விதுஷா. அங்கேதான் அவரை வாழ்வில் முதன்முதலாகச் சந்தித்தேன்.
அடிப்படைப் பயிற்சிகள்கூட இன்னமும் பெற்றுக்கொள்ளாத புதிய போராளிகளான நாம் அந்தக் கிராமத்தில் சிரத்தையுடன் வேலை செய்வதும் மக்களுக்கும் எமக்குமான உறவில் இருந்த நெருக்கமும் விதுஷாக்காவுக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும்.
மாலை நேரங்களில் எம்மை அடிக்கடி கூப்பிட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார். கடற்கரையில் நடைபெறும் தனது அணியினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளில் எம்மையும் சேர்த்துக்கொண்டார்.
தனியாக விடப்பட்டிருந்த அரசியல் போராளிகளான எம்மீது அவர் மிகுந்த கரிசனையும் அக்கறையும் கொண்டிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் தீவிரமாகப் பரவிக்கொண்டிருந்த மூளை மலேரியா காய்ச்சலில் நானும் பாதிக்கப்பட்டபோது என்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து ஒரு மாதத்திற்கு மேலாக நான் சிகிச்சை பெற்றுக் குணமாகி வரும்வரையிலும் எனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர்.
இதன்பின்னர், நான் கிளாலியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டேன். நீதி நிர்வாகம் படிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட போராளிகளில் ஒருவராக என்னையும் தெரிவு செய்திருந்தனர்.
அப்போது மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி எம்மைச் சந்தித்தார். “அடிப்படைப் பயிற்சி எடுக்காத பிள்ளைகளை அண்ணை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சிக்கு அனுப்பச் சொல்லிப்போட்டார்.
ஆகவே இந்தப் பிள்ளைகளை முதலில் றெயினிங் அனுப்ப வேணும்” எனக் கூறியவர், கிளாலி சோதியா முகாமில் ஆரம்பமாகவிருந்த அணியுடன் பயிற்சி பெறுவதற்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த 52 பெண் போராளிகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சோதியா பயிற்சி முகாமில் 21ஆவது அணியில் பயிற்சி பெறுவதற்காக 1992 ஏப்ரல் மாதமளவில் நான் அனுப்பப்பட்டேன்.
அங்குப் பயிற்சி பெறுவதற்காக எனது தங்கையும் வந்திருந்ததைக் கண்டேன். என்னைப் பிரிந்ததால் எனது குடும்பத்தவர்கள் அடைந்த வேதனையைக் கதைகதையாகக் கூறினாள்.
என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படியும் எனக்காகத் தான் இயக்கத்தில் இருப்பதாகவும் கூறி அழத் தொடங்கினாள். நான் தங்கையைத் தேற்றினேன்.
எம்மைப் போல எத்தனையாயிரம் பேர் போராளிகளாக இருக்கிறார்கள்? அநியாயமாகச் செத்துப் போவதைவிட மக்களுக்காகப் போராடிச் சாவதுதான் நல்லது என்பதை விளங்கப்படுத்தினேன்.
நானும் அவளும் சகோதரிகள் என்பதைப் பயிற்சி முகாம் பொறுப்பாளர் உட்பட பயிற்சி ஆசிரியர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். எனவே நாமிருவரும் சேர்ந்து கதைப்பதும், ஒன்றாக இருப்பதும் இயக்கத்தின் நடைமுறைகளுக்குச் சரியானதல்ல என்பதைத் தங்கைக்கு எடுத்துக் கூறினேன்.
எம்மைப் போன்றே உறவுகளைப் பிரிந்திருந்த ஏனைய போராளிகளது உணர்வுகள் எங்களால் புண்படக் கூடாது என்பதை எனது தங்கையும் புரிந்துகொண்டாள்.
அதன் பின்னரான பயிற்சிக் கால நாட்களில் தங்கையுடன் பேசுவதையும், அவளைப் பார்ப்பதையும்கூடத் தவிர்த்துக்கொண்டேன்.
எனது கண் முன்பாக அவள் கடின பயிற்சியினால் வருந்துவதையோ பயிற்சி ஆசிரியர்களிடம் தண்டனை பெறுவதையோ நான் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
எனது தங்கை பயிற்சிகளிலும் ஏனைய பண்புகளிலும் சிறப்பாகச் செயற்பட்டுப் பயிற்சியணியின் தலைவியாகவும் முன்னேறியிருந்தாள்.
எமது பயிற்சி முகாமில் இருநூற்று அறுபது பேரளவில் பயிற்சி எடுத்திருந்தோம். அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த போராளிகளும் இருந்தார்கள்.
வயது குறைந்தவர்களும் இருந்தனர். எமது பயிற்சி ஆசிரியர்கள் மைதானங்களில் மிகக் கடுமையானவர்களாக நடந்துகொண்டபோதிலும் ஒவ்வொரு போராளிகளினது தனிப்பட்ட விடயங்களிலும் மிகுந்த கவனமும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
காலை ஆறு மணிக்குத் தொடங்கும் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி ஒன்பது மணிக்குத்தான் முடியும். அதன் பின்னர் ஒரு மணி நேர இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்று உணவும் தேநீரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மீண்டும் 10மணி தொடக்கம் 12மணிவரை ஆயுதவகுப்புகள் நடைபெறும். அதன்பின் சரியாக மத்தியானம் பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஒருமணி வரை உச்சி வெயிலில் கொதிக்கும் மணலில் நிலையெடுத்தல் பயிற்சிகள் நடத்தப்படும்.
வியர்வை ஆறாகப் பாய ஆயுதத்துடன் வேகமாக நிலையெடுத்துப் பழக வேண்டும். இந்திய இராணுவத்தினர் பயன்படுத்திய எஸ்.எல்.ஆர். துப்பாக்கி மிகவும் நீளமானது.
அதுதான் எமது பயிற்சி ஆயுதம். இரவு பகல் இடைவிடாத தொடர் பயிற்சிகள் போராளிகளை வாட்டியெடுத்தது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வும் இரவில் கலை நிகழ்வுகளும் நடாத்தப்படும். எமக்கு மகளிர் படையணியின் முதலாவது அணியைச் சேர்ந்த ஒரு அக்கா பிரதான பயிற்சியாளராக இருந்தார்.
ஏனைய பயிற்சி முகாம்களைப் போலப் பயிற்சி பெறுவோரை அடித்தல், கடின தண்டனை என்பன எமது முகாமில் அதிகமிருக்கவில்லை.
மாறாக அவர் அதிக நேரம் பயிற்சி பெறுவோருடன் செலவழிப்பார். அவரைக் கண்டாலே பயப்படும்படி நடந்துகொண்டாரே தவிர, அவரது தனிப்பட்ட அணுகுமுறைகள் மூலம் போராளிகளை ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
அவரிடம் தனித்துவமான வழிநடத்தும் ஆளுமை இருந்தது. மூன்றுமாதப் பயிற்சிகள் முடிவடைந்தவுடன் பின்னணிக்களமுனைகளுக்கான மேலதிக பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டோம்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதிகளில் பெண் போராளிகள் நிலை கொண்டிருந்தனர்.
அந்தப் பகுதிகளுக்கான நீண்ட நகர்வு அகழிகளையும் சாதாரண பதுங்குக் குழிகளையும் அமைப்பதற்காக எனது தலைமையில் 50பேர் கொண்ட அணி அனுப்பப்பட்டிருந்தது.
நாம் அங்கே பணி செய்து கொண்டிருந்த வேளையில் என்ன காரணத்தாலோ எமக்கான உணவு இரண்டு நாட்களாக அனுப்பப்படவில்லை.
கடினமான பதுங்குக்குழி அமைக்கும் வேலைகளைச் செய்த போராளிகள் மிகவும் களைத்துச் சோர்ந்து போயிருந்தார்கள்.
அது பனம் பழங்கள் பழுத்து விழும் காலமாக இருந்தபடியால் அருகிலிருந்த காணிகளுக்குள் பனம் பழங்களைத் தேடிப் பொறுக்கியெடுத்துச் சூப்பத் தொடங்கினார்கள்.
இரண்டாம் நாள் மத்தியானம் ஒரு சிறிய வாளியில் உணவு வந்திருந்தது. தாங்க முடியாத பசியிலிருந்தவர்கள் அந்த வாளியின் அளவைப் பார்த்ததும் அழத் தொடங்கிவிட்டனர்.
ஏனென்றால் அந்த உணவின் அளவு பத்துப் பேருக்குக்கூடப் போதாமலிருந்தது. அதனைக் குழையலாக்கி ஒவ்வொருவரும் ஒரு பிடி சோறு மட்டும் உண்டோம்.
முழுவதுமாக ஆறு மாதங்கள் பயிற்சிகள் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் நான் அரசியல் பணிக்கே அனுப்பப்பட்டேன்.
எனது தங்கை சிறுத்தைப் படைப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அதன்பின் எனது தங்கையை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே நான் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
என்னுடன் பயிற்சி பெற்ற தோழிகள் களமுனையில் வீரச்சாவடையும் செய்திகளை அறியும்போது, அவர்களோடு நானும் யுத்தக் களத்திற்குப் போக வேண்டும் என்ற உணர்வு மனதிற்குள் வதைத்துக்கொண்டிருக்கும்.
யாழ்ப்பாணம் நடுவப் பணியகத்திலிருந்து அரசியல் போராளிகள் வேலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தனர்.
என்னைத் தனியாக அழைத்த பொறுப்பாளர் ஒரு விவசாயப் பண்ணைக்குப் பொறுப்பாகப் போகும்படி பணித்தார்.
புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு நீதி நிர்வாகப் பிரிவை ஆரம்பித்திருந்தது. ஆனால் நீதி மன்றங்களை ஆரம்பித்திருக்கவில்லை.
காவல்துறையும் தனது பணிகளை விரிவாக்கியிருக்கவில்லை. இக்காலப் பகுதியில், சமூகத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை அந்தப் பகுதி அரசியல் பொறுப்பாளர்களே விசாரித்துத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தனர்.
சில குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தண்டனை கொடுக்கப்பட்ட பெண்களைத் தடுத்து வைப்பதற்காகவே இப்பண்ணைகள் உருவாக்கப்பட்டு இருந்தன.
புன்னாலைக்கட்டுவன் ‘மஸ்கன் பாம்’ நிறுவனத்திற்குரிய பெரிய வளாகம் பெண்களுக்கான நன்னடத்தைப் பண்ணையாக விடுதலைப் புலிகள் மகளிர் முன்னணியால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இந்த இடத்திற்கே நான் பொறுப்பாக அனுப்பிவைக்கப்பட்டேன். நன்னடத்தைப் பண்ணைக்கு நான் பொறுப்பாகச் சென்ற போது அங்குச் சுமார் முப்பது பெண்கள் இருந்தனர்.
அவர்கள் விடுதலைப் புலிகளால் பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டுத் தங்கவைக்கப்பட்டிருந்தனர். புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களால் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்ட அவர்கள் நீதி நிர்வாகப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு, தண்டனைக் காலம் நிர்ணயிக்கப்பட்டு, கைதிகளாகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
கசிப்புக் காய்ச்சுதல், களவு, சிசுக் கொலை, பாலியல் தொழில் என அவர்கள் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.
வளமான செம்மண்ணைக் கொண்ட அந்தப் பெரிய தோட்டத்தில் அவர்களுக்கான வேலைகள் கொடுக்கப்பட்டிருந்தன. நான் பொறுப்பெடுத்துச் சென்ற பின்னர் அவர்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் மனம் விட்டுப் பேசினேன்.
சமூகத்தினால் மூடி மறைக்கப்படும் மனித வக்கிரங்களும் பெண்களை மட்டுமே குற்றவாளியாக்கும் எமது சமூக மனப்பாங்கும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
சமூகத்தில் பெண்களின் பிரச்சனைகளை நான் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு அந்தப் பெண்களின் கண்ணீர்க் கதைகள்தான் ஆரம்பப் பாடங்களாக இருந்தன.
எனது குடும்பம் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்தபோதும் தோட்டப் பயிர்ச் செய்கை பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
இணுவில் பகுதியிலிருந்த அனுபவம் வாய்ந்த ஒரு பெரியவரை அணுகிச் சென்று அவருடைய ஆலோசனைகளைப் பெறத் தொடங்கினேன். அவர் தனது ஓய்வு நேரங்களை மிகவும் உற்சாகமாக எமது தோட்டத்தில் கழிக்கத் தொடங்கினார்.
என்னென்ன காலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டும், எப்படி நீர்ப் பாசனப் பாத்திகள் அமைய வேண்டும், எப்படியான உர, மருந்து வகைகளைப் பாவிக்க வேண்டும் என எமது தோட்டம் செழித்து வளர்ந்தது.
அதேவேளை அங்கிருந்த பெண்களும் தோட்டப் பயிர் செய்கைப் பயிற்சியை நல்லமுறையில் பெற்றுக்கொண்டிருந்தனர். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளைச் சுன்னாகம் சந்தையில் மொத்தமாக விற்பனை செய்தோம்.
அந்த வருமானத்தைக் கொண்டே அந்தப் பண்ணையில் உள்ளவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. மகளிர் முன்னணியின் நிதிப் பிரிவுக்குக் கணக்குக் காட்ட வேண்டும்.
அந்த வருமானத்தின் மூலமே அங்கிருந்து வெளியேறும் பெண்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டியிருந்தது.
மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என அவர்களுக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்த தண்டனைக் காலங்கள் முடிந்ததும் வாழ்வாதாரமாக 5,000 ரூபாய் பணமும், அரிசி, மா, சீனி, பருப்பு என எல்லாமுமாக 25 கிலோ பெறுமதியான உணவுப் பொருட்களும் கொடுத்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
அப்பெண்கள் நன்னடத்தைப் பண்ணையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுடைய குடும்பங்களை மாதமொருமுறை சென்று கண்காணித்து மகளிர் முன்னணிப் பொறுப்பாளருக்கு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தக் குடும்பத்தின் தேவைகளை, குறிப்பாகக் குழந்தைகளுக்கான தேவைகளை அந்தப் பிரதேசப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்து உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அதேவேளை அந்தப்பெண்கள் விடுதலையாகி வீடு சென்ற பின்னரும் தெ
ாடர்ச்சியாக மூன்று மாதங்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்ற நிலைமைகளை ஆராய்ந்து தேவைகளை நிறைவு செய்யவேண்டும்.
உண்மையில் இந்தப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட நான்கு உறுப்பினர்களிடமும் ஆளுக்கொரு சைக்கிள் வண்டியைத் தவிர வேறு எந்த வசதிகளும் இருக்கவில்லை.
வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.
Average Rating