தமிழக தேர்தல் முடிவுகள் முழு விபரம் – மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா..!!

Read Time:7 Minute, 4 Second

timthumb (2)234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. 227 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 7 பேரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.

தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 174 தொகுதிகளிலும், காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிட்டன. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. அணி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. தேசிய கட்சியான பாரதீய ஜனதா சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட்டன. இதனால் இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவியது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளின் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால், மற்ற 232 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 68 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மாறி மாறி முன்னணியில் இருந்து வந்தனர். அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வேட்பாளர்கள் மாறி மாறி முன்னணியில் இருந்ததால், யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத இழுபறியான நிலை இருந்தது. இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

என்றாலும் நேரம் செல்லச் செல்ல முடிவுகள் வெளியாக தொடங்கின. வாக்குப்பதிவு நடந்த 232 தொகுதிகளில் அ.தி.மு.க. 134 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்களும் வெற்றி பெற்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் போட்டியிட்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றார்.

தி.மு.க. கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க.வுக்கு 89 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை), முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு), துரைமுருகன் (காட்பாடி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி,-த.மா.கா. அணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த அணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளிலும், வைகோவின் ம.தி.மு.க. 29 தொகுதிகளிலும், ஜி.கே.வாசனின் த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இதேபோல் 233 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 156 தொகுதிகளில் போட்டியிட்ட பாரதீய ஜனதா, 234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே முதல் முறை ஆகும். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அ.தி.மு.க. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள்.

அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் முன்பும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லத்தின் முன்பும் கூடிய அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார். தி.மு.க. கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. பா.ம.க. மற்றும் விஜயகாந்த் அணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய்..!!
Next post மின்தடை தொடர்பாக 1987 இற்கு அழைக்கவும்..!!