வாக்குப்பதிவின் போது விபத்து: வாக்குச்சாவடியில் தென்னை மரம் விழுந்து 21 பேர் படுகாயம்..!!
திருக்காட்டுப்பள்ளி அருகே வாக்குப்பதிவின் போது தென்னை மரம் விழுந்து 21 பேர் படுகாயம் அடைந்தனர். தேவகோட்டையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது பழமார்நேரி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் நேற்று மழை பெய்த போதிலும், இந்த வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து கொண்டிருந்தனர்.
மதியம் 1.45 மணி அளவில் வாக்குச்சாவடியின் முன்பகுதியில் நின்ற தென்னை மரம் வேரோடு சாய்ந்து வாக்குச்சாவடி கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து வாக்களிக்க வரிசையில் நின்றவர்கள் மீது விழுந்தது.
இதில் பழமார்நேரி கிராமத்தை சேர்ந்த 21 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே வாக்குச்சாவடி மையத்தில் பணியில் இருந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் பழமார்நேரி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அந்த பள்ளியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அருகே இருந்த மற்றொரு பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
உதவி தேர்தல் அலுவலர் முருகவேள், மண்டல அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் புதிய இடத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதைப்போல சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய கட்டிடம் கட்டுவதற்காக அதன் மேல் ஓடுகள் பிரிக்கப்பட்டன.
எனினும் நேற்றைய வாக்குப்பதிவிற்காக இந்த பணிகள் நிறுத்தப்பட்டு கட்டிடம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. இங்கு காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளி கட்டிடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்தது.
இதில் கோட்டூர் காலனியைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை உதவி கலெக்டர் ஆல்பிஜான்வர்கிஸ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
பின்னர் பொதுமக்கள் வாக்களிக்க செல்லும் வழியினை மாற்றி அமைத்து வாக்குப்பதிவுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
Average Rating