தமிழக தேர்தல் – 74% வாக்குப்பதிவு – முழு விபரம் இதோ…!!
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நேற்று (16) நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 78 சதவீத வாக்குகளும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீத வாக்குகளும் பதிவாகின.
கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் வாக்கு சதவீதம் சற்று குறைந்துள்ளது.
காரணங்கள் என்ன? பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குகள் அதிகளவு பதிவாகவில்லை எனவும், நகரப் பகுதிகளை விட, ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகின எனவும் தெரியவந்துள்ளது. சென்னை உள்பட நகரப் பகுதிகளில் குறைவான வாக்குகள் பதிவானதாலும், திருச்சி-கோவை உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாகவும் இந்தத் தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து 232 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே, பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் காலை 6.30 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முக்கியப் பிரமுகர்கள்: சட்டப் பேரவைத் தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் பலரும், காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிஷங்களில் திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வாக்கைச் செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இதேபோன்று, பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
பெரிய அசம்பாவித சம்பவங்கள் இல்லை: வாக்குப் பதிவு தொடங்கியவுடன் சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான இயந்திரம் சென்னை அண்ணாநகர் உள்பட 17 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களிலும் சிறிது கோளாறு ஏற்பட்டது. இதன்பின், அது சரிசெய்யப்பட்டது.
எந்த இடத்திலும் பெரிய அளவுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
Average Rating