ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது, புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 74) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன.
யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர்.
அச் சமயம் கண்ணி வெடிகள் வெடித்தன. அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பி விட்டார்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். புதைத்து வைத்த கண்ணிவெடிதான் வெடித்தது.
தற்செயலாக அமுக்கப்பட்டதா, அல்லது வேண்டுமென்றே வெடிக்க வைத்தார்களா என்பது தெரியவில்லை.
ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்-மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் சிலர் அதனை தமது திட்டமிட்ட நடவடிக்கை என்றே இயக்கத்திற்குள் பிரசாரம் செய்தனர்.
தம்மை புலிகளுக்கு எதிரான அதிதீவிரவாதிகளாக காண்பிப்பதுதான் அவர்களின் நோக்கம்.
டக்ளஸ் தேவானந்தா அணியினர் புலிகளோடு இரகசியமாகத் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்தவர்கள்தான் அந்த உறுப்பினர்கள்.
அவர்களில் ஒருவர் தர்ஷன். யாழ்-பிராந்தியக் கமிட்டி உறுப்பினர். புலிகளுக்கு எதிரான பிரசாரத்தில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவராக காட்டுவதற்று மிகச் சிரமப்பட்டார்.
தமது இயக்கத்தின் பலம், பலவீனம் தெரியாமல் வெறும் வாய்வீச்சுக்களில் இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஆயுதம் கேட்டார்
இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலாளர் நாயகம் பத்மநாபா தம்மிடம் ஆயுதம் கேட்பதாக பிரபாகரனிடம் சொன்னார்கள் இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ அதிகாரிகள் சிலர்.
சொன்னவர்கள் அத்தோடு நிறுத்தவில்லை. “பத்மநாபா ஏன் ஆயுதம் கேட்டார் தெரியுமா?” என்று கேட்டனர். “ஏன்?”.
“உங்கள் இயக்கத்தால் பிரச்சனை வரலாம். உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்க ஆயுதம் தேவை என்று கேட்கிறார்” என்றனர் அதிகாரிகள்.
பத்மநாபா
அதிகாரிகள் சொன்னதை வைத்து யோசித்தார் பிரபாகரன். ‘ஈ.பி.ஆர்.எல்.எஃப். முந்துவதற்கு முன்பாக நாம் முந்திக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்திருப்பார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டுவுக்கு தகவல் வந்துவிட்டது. “நாபா றோவிடம் ஆயுதம் கேட்கிறார். வசதியைப் பார்த்து ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பையும் கவனிக்கலாம்.” என்று உத்தரவு வந்துவிட்டது.
டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டுக்குச் சென்றபின்னர், பத்மநாபா அணியினரின் நடவடிக்கைகள் தொடர்பாக கிட்டுவுக்கு கடும் கசப்பு ஏற்பட்டிருந்தது.
ரமேஷை சந்தித்த கிட்டு தனது கசப்பை தெரிவித்தார். இப்போது நடைபெறும் இயக்க நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆட்களுக்கும் (டக்ளஸ் தேவானந்தா ஆட்களுக்கு) ஒரு தெடர்புமில்லை என்று கூறிவிட்டார் ரமேஷ்.
இரண்டாவது முத்திரை
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈழம் முத்திரை வெளியிட்டது பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். டேவிற்சன், ரமேஷ் ஆகியோர் முன்னின்று செய்த ஏற்பாடுதான் அது.
அதனால், மற்றுமொரு முத்திரையை வெளியிட்டனர் பத்மநாபா அணியினர். அந்த வெளியீட்டு விழாவும் நல்லூர் நாவலர் மண்டபத்தில்தான் நடைபெற்றது.
பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றியவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
முத்திரை வெளியீட்டு விழா உரைகள் யாவுமே புலிகளை அராஜகவாதிகள் என்று சாடுவதாகவே இருந்தன.
இறுதியாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் ஒரு கட்டத்தில் சொன்னது இது: “விஜிதரனை யார் கடத்தினார்கள் என்பது எமக்குத் தெரியும். அராஜக வாதிகளை நோக்கி எமது ஆயுதங்கள் திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.”
சுரேஸ் பிரேமச்சந்திரனின் உரையால் உற்சாகம் கொண்ட யாழ்-பிராந்தியக் கமிட்டி மற்றொரு புலி எதிர்ப்புக்குத் தயாரானது.
நெருப்பு தினம்
யாழ்ப்பாணத்தில் நெருப்பு தினம் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அராஜகம் ஒழிக என்பதுதான் பிரதான கோஷம். தீப்பந்தங்களுடன் ஊர்வலத்தினர் செல்வார்கள். இறுதியாக பொதுக்கூட்டமும் நடைபெறும்.
அதற்கு முன்னரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர் நெருப்பு தினம் நடத்தியிருந்தனர். அந்தநெருப்பு தினத்தின் நோக்கம்-இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்துவது.
அந்த நெருப்பு தினம் முடிவடைந்த மறுநாள்தான் அரியாலையில் இரண்டு புளொட் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர்.
இப்போது இரண்டாவது நெருப்பு தினம்.
மிகச் சிறப்பாக ஊர்வலத்தை நடத்தினார்கள். ஊர்வலத்தில் பெருந்தொகையான பெண்களும் கலந்துகொண்டனர். ‘அராஜகவாதிகள் ஒழிக’ என்ற கோஷம் விண்முட்ட எழுந்தது.
புலிகளும் அந்த ஊர்வலத்தை பார்வையிடத் தவறவில்லை.
ஊர்வல இறுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேசியவர்கள் வீசியவார்த்தைகளும் நெருப்புத் துண்டுகள்தான்.
கூட்டத்தில் உரையாற்றி பெண்களும் காரமாகவே பேசினார்கள். ஈ.பி.ஆர்.எல்.எஃப். பெண்கள் அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக இயங்கியவர்களில் ஒருவர் ‘ராஜி அக்கா.’
அவரும் கூட்டத்தில் உரையாற்றினார். “அராஜகவாதிகளுக்கு பெண்கள் பாடம் புகட்ட வேண்டும். அவர்களது முகாம்களை முற்றுகையிட வேண்டும்.” என்றார்.
இன்னொரு பெண் உறுப்பினர் (பெயர் ஞாபகமில்லை) பேசுகையில் “அராஜகவாதிகளுக்கு எதிராக பெண்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்: வேறு வழியில்லை.” என்றார்.
நெருப்பு தினம் நடந்து முடிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் போக்கைப் பார்த்தவர்கள் ‘புலிகளுக்கு சமமான அமைப்பாகத்தான் இருக்கிறார்கள்’ என்று நினைத்தார்கள்.
முற்றுகை
நெருப்பு தினத்துக்கு மறுநாள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்கள் புலிகளால் முற்றுகையிடப்பட்டன.
யாழ் நகரில் எந்தவொரு முகாமிலிருந்தும் புலிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவில்லை. ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். பதில் நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று எதிர்பார்த்து புலிகள் முகாம்களை சுற்றிவளைத்து சரமாரியாக வேட்டுக்களைத் திர்த்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இராணுவப்பிரிவில் பாழ் மாவட்டத்தில் பொறுப்பாக இருந்தவர்கள் பலர் முன்கூட்டியே ஒரு முடிவு செய்திருந்தனர்.
“புலிகள் தாக்கினால் திருப்பித் தாக்குவதில்லை. எமது இயக்கத்திலும் பிரச்சனை. நாம் எதற்கு வீணாக அடிபட்டுத் தோழர்களை பறிகொடுக்க வேண்டும்?” என்பது அவர்களது வாதம்.
யாழ்ப்பாணத் தொகுதிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈஸ்வரன். அவரும், அவரோடு இருந்தவர்களும் ஆயுதங்களை தலைமையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிச் செல்லப்போவதாக கூறினார்கள்.
டக்ளஸ் தேவானந்தா விரைவில் திரும்பி வருவார். எனவே ஒப்படைக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதால் ஈஸ்வரன் உட்பட பல பொறுப்பாளர்கள் காத்திருந்தனர்.
அப்படியிருந்தும் சில பொறுப்பாளர்கள் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிச் சென்றனர். முகாம்களுக்கு முன்பாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் அகற்றிவிட்டனர்.
இவ்வாறான சூழலில் புலிகள் தாக்கியபோது திருப்பித் தாக்கும் முயற்சியே நடைபெறவில்லை.
புலிகளுக்குக்கூட அது ஆச்சரியமாகவே இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களை தாக்குவது: சண்டை கடுமையாகி நீடித்தால் பேச்சுவார்த்தை நடத்தி நிறுத்திவிடுவது என்றுதான் கிட்டு திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ஒரு இரவுக்குள் யாழ்ப்பாணத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்கள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டில வந்துவிட்டன.
புலிகளை எதிர்ப்பதில் முன்னணியில் நின்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள்தான் முதலில் புலிகளிடம் சரணடைந்தார்கள். அவர்களில் தர்ஷனும் ஒருவர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்-மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கபூரை தேடினார்கள் புலிகள். அவர் சாவகச்சேரியில் இருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா திரும்பி வந்ததும் தனக்கு ஆபத்து இருக்கிறது என்று சக தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கபூர்.
யாழ் மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாம்களில் இருந்த ஆயுதங்களை சேகரித்து சாவகச்சேரியில் இருந்த முகாம் ஒன்றில் கொண்டு சென்று மறைத்து வைத்தார் கபூர்.
‘புலிகள் எந் நேரமும் தாக்கக் கூடும். அதனால் ஆயுதங்களை ஆங்காங்கே உதிரியாக இருப்பதைவிட ஒரே இடத்தில் இருப்பதுதான் சரி’ என்று காரணம் சொன்னார்.
உண்மையான காரணம் அதுவல்ல. டக்ளஸ் தேவானந்தா அணியினரின் பலத்தை குறைப்பதுதான் அவரது சாமர்த்தியமான திட்டம்.
சாவகச்சேரியிலும் புலிகள் தாக்கினார்கள். உறுப்பினரின் வீடொன்றுக்குள் சென்று கபூர் மறைந்து கொண்டார்.
இதேநேரம் சென்னையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். வட்டாரத்தில் இயக்க மோதல் தொடர்பாக கேட்கப்பட்டது. “சண்டை நடக்கிறது. கபூர் களத்தில் நிற்கிறார்” என்று சொன்னார்கள்.
கபூர் கைது
அதே நேரம் சாவகச்சேரியில் கபூர் புலிகளால் கைதுசெய்யப்பட்டார். கபூர் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளரான பின்னர்தான் முரண்பாடுகள் அதிகரித்தன. கபூரை நேரடியாக கிட்டுவுக்கு தெரியாது.
‘கபூரைப் பிடித்துவிட்டோம்’ என்று கிட்டுவுக்கு வோக்கியில் தகவல் கொடுத்தார் சாவகச்சேரி புலிகள் இயக்கப் பொறுப்பாளர் கேடில்ஸ்.
உடனே யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரச் சொன்னார் கிட்டு.
‘கபூரை போடுவது’ என்று கிட்டு முடிவு செய்துவிட்டார். அதனால் தனியான அறை ஒன்றை ஒதுக்கி கபூரை வைத்திருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் தம்மிடம் சரணடையுமாறு புலிகள் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துச் சென்றனர்.
ஏராளமான உறுப்பினர்கள் புலிகளது முகாம்களில் சரணடைந்தனர்.
அனைவரையும் புலிகளது உளவுப்பிரிவு விசாரித்தது. இதில் ஒரு விடயம் என்னவென்றால், ரெலோ தடைசெய்யப்பட்டபோது, ரெலோ உறுப்பினர்கள் புலிகளால் கடுமையாக தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் அவ்வாறு மோசமாகத் தாக்கப்படவில்லை.
சரணடைந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தாம் ‘இயக்கத்தில் இருந்து முரண்பாடு காரணமாக ஒதுங்கியிருப்ப்’தாக தெரிவித்தனர்.
“என்ன முரண்பாடு?” என்று கேட்கப்பட்டது.
“நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள். ரமேஷ் கடத்தப்பட்டதோடு இயக்கத்தை விட்டு ஒதுங்கிவிட்டோம்!” என்றனர். “அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்.” என்று விட்டார் கிட்டு.
“நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள்” என்று சொன்னவர்களில் பத்மநாபா அணியினர் சிலரும் இருந்தனர்.
நெருப்பு தின ஊர்வலத்தில் முன்னணியில் நின்று அடையாளம் காணப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் சில பகுதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும் தொடர்ந்து தாக்குப் பிடிக்கக் கூடிய ஆயுதபலம் அவர்களிடம் போதியளவில் இருக்கவில்லை.
மன்னாரில் புலிகள் செய்த தந்திரம் (புலிகளின் போட்ட வலை)
இதேவேளை மன்னாரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பொறுப்பாளர் ஒருவரை புலிகள் பிடித்தனர். அவரது பெயர் மார்ட்டின்.
அவர் மூலமாக தமிழ்நாட்டுக்கு செய்தி அனுப்பினார்கள். “மன்னாரில் நாம் நிற்கிறோம். உடனடியாக ஆயுதங்கள் தேவை. அனுப்பிவைத்தால் இங்கு புலிகளை சமாளிக்க முடியும்.” என்று மார்ட்டின் மூலம் பத்மநாபாவுக்கு தகவல் அனுப்பினார்கள்.
உடனே ஆயுதங்கள் சகிதம் படகு ஒன்றில் முக்கிய உறுப்பினர்களையும் மன்னாருக்கு அனுப்பிவைத்தார் பத்மநாபா.
படகு வருவதை எதிர்பார்த்து மன்னார் கடற் கரையில் காத்திருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.
படகு கரைக்கு வந்தது. புலிகள் முற்றுகையிட்டனர். படகில் இருந்த உறுப்பினர்கள் அதனை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போயினர். அவர்களை கைது செய்தனர் புலிகள்.
மலையகத்தில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் இணைந்தவர்களில் முக்கியமான ஒருவர் அன்பரசன். சிறந்த போராளி.
படகில் கைது செய்யப்பட்டவர்களில் அன்பரசனும் ஒருவர். கைது செய்யப்பட்டவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆயுதங்களையும், படகுகளையும் புலிகள் கைப்பற்றினர். தமிழகக் கரையில், படகு மன்னாரில் சேர்ந்த செய்தியை அறிய தொலைத் தெடர்பு சாதனம் அருகே காத்திருந்தனர்.
மன்னாரில் இருந்து புலிகள் தொடர்பு கொண்டனர். “உங்கள் கையிலிருந்து நழுவிய ஆயுதங்களை நாங்கள் எந்திக் கொண்டோம்” என்று சொன்னார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் பெண்களுக்காக வெளியி;ப்பட்ட சஞ்சிகை ‘செந்தணல்’. அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருந்த கவிதை வரிகளைத்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கே திருப்பிச் சொன்னார்கள் புலிகள்.
தமக்கு ஒத்துழைப்புக் கொடுத்தமைக்காக ஈ.பி.ஆர்.எல்.எஃப். மன்னார் பொறுப்பாளர் மார்ட்டினை பின்னர் விடுதலை செய்தனர் புலிகள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று, அங்கிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்று விட்டார்.
ரமேஷ், செழியன், இப்ராகீம், தாஸ் ஆகியோரும் கொழும்பு சென்று தமிழ்நாட்டுக்குச் சென்றனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் சிலர் ஈரோசிடம் சென்று தமக்குப் பாதுகாப்பு தருமாறு கேட்டனர்.
அப்போது பாலகுமார் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார். ‘அடுத்தது தம்மையும் புலிகள் தடை செய்து விடுவார்களோ’ என்று பாலகுமாருக்கு யோசனை.
அதனால் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையை சூசகமாக உணர்த்திவிட்டார். அதே சமயம் முகாமுக்கு சென்றுவிட்டவர்களை பராமரிக்வும் தவறவில்லை.
மற்றொரு தடை
1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தை தடை செய்த சூட்டோடு புலிகள் மற்றொரு அறிவித்தலை வெளியிட்டனர்.
தம்பாபிள்ளை மகேஸ்வரன் தலைமையிலான ‘தமிழீழ இராணுவத்தை (TEA) தடை செய்து விட்டதாக அறிவித்தனர்.
தமிழீழ இராணுவத்தினர் மறுபேச்சே பேசவில்லை. தம்மிடமிருந்த சொற்ப ஆயுதங்களையும் புலிகளிடம் ஒப்படைத்து விட்டனர்.
‘தமிழீழ இராணுவ உறுப்பினர்கள் பலர் புலிகள் இயக்கத்தில் இணைந்து விட்டனர். ஏனையோரும் வந்து சேரலாம்’ என்று புலிகள் அறிவித்தனர்.
அதனையடுத்து ஏனைய சிறு குழுக்களின் உறுப்பினர்களும் தாமாகவே செயலிழக்கத் தொடங்கினார்கள்.
இறுதியில் மிஞ்சியது ‘ஈரோஸ்’.
இக்கட்டத்தில்தான் மன்னாரில் புலிகள் இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விக்ரர்.
மன்னாரில் இராணுவத்தினருக்கும், புலிகள் இயத்தினருக்கும் இடையே கடும் சமர் ஒன்று ஏற்பட்டது.
மன்னார் சமரும், கிட்டு-கோட்டை முகாம் இராணுவ அதிகாரி கொத்தலாவலயுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாகவும் வரும் வாரம் சொல்கிறேன்.
Average Rating