மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம்: ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்…!!
நீலாங்கரை அருகே மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம் என கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீலாங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது வீட்டில் சமீபத்தில் நகை – பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் ஸ்டீபனிடம் வேலை பார்த்து நின்ற அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, ஸ்டீபன் வீட்டில் நகை – பணம் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் மேலும் விசாரித்த போது ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்டீபன் 3 பேரை விஷ ஊசி போட்டு கொன்ற பரபரப்பு தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்டீபனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழவிடாமல் தடுத்த மைத்துனர் ஜான் பிலோமினன், தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களின் கணவர்கள் உத்திரமேரூர் ஸ்ரீதர், மடிப்பாக்கம் ஹென்றி ஆகிய 3 பேரை விஷஊசி போட்டு கொன்றது தெரியவந்தது.
ஊசியில் பொட்டாசியம் சயனைடு என்ற விஷத்தை ஏற்றி அதை குடையின் மேல் பகுதியில் உள்ள முனையில் இணைத்து சாலையில் சென்ற போது 3 பேரை குடையால் குத்துவது போல் செய்து விஷஊசியை போட்டு கொன்றுள்ளனர். இதற்கு சதீஷ்குமார், பாலாஜி, முருகானந்தம் ஆகிய 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்த போது அவர்கள் நெஞ்சு வலியால் இறந்ததற்கான அறிகுறியே தென்பட்டது. இதனால் அப்போது, இந்த வழக்குகளை சாதாரண வழக்குகளாகவே போலீசார் பதிவு செய்தனர். தற்போது கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
இதையடுத்து 3 பேர் கொலை தொடர்பாக ஸ்டீபன், சதீஷ்குமார், பாலாஜி, முருகானந்தம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட 4 பேரையும் போலீசார் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது விஷஊசியை போட்டு 3 பேரையும் கொலை செய்யும் முன்பு அதை மனநோயாளி ஒருவர் மீது போட்டு பரிசோதித்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஸ்டீபன் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
எனது மைனத்துனர் ஜான் பிலோமினன், கள்ளக் காதலிகளின் கணவர்கள் ஸ்ரீதர், ஹென்றி ஆகியோரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். போலீசாரிடம் சிக்காமல் நூதனமாக கொலை செய்வது எப்படி என்று இணையதளம் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன். விஷஊசி போட்டு கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்கான விஷத்தை மும்பையில் இருந்து வாங்கினேன்.
குடையின் நுனியில் விஷஊசியை வைத்து செலுத்தும்போது அது சரியாக செயல்படுகிறதா? என்பதை பரிசோதிக்க முடிவு செய்தேன்.
இதற்காக தெருக்களில் சுற்றித்திரிந்த நாய்களின் மீது விஷஊசியை போட்டேன். ஊசி போட்ட சில நிமிடங்களில் நாய்கள் இறந்தன. இதையடுத்து மனிதர் மீது ஊசியை போட்டு பரிசோதிக்க முடிவு செய்தேன். அதன்படி நான் வசிக்கும் பகுதியில் ஆதரவற்று சுற்றித்திரிந்த மனநோயாளி மீது குடையின் நுனியில் விஷ ஊசியை வைத்து செலுத்தினேன். இதில் அவர் ஓரிரு நிமிடங்களிலேயே துடிதுடித்து இறந்ததை பார்த்தேன். அதன்பிறகே ஜான் பிலோமினன், ஸ்ரீதர், ஹென்றி ஆகிய 3 பேரையும் விஷஊசி போட்டு கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட மனநோயாளி யார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் ஜான் பிலோமினன், ஸ்ரீதர், ஹென்றி ஆகியோரின் உடல்களை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களது உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யும் பட்சத்தில் இந்த கொலை தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்களும், தடயங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating