இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்…!!
இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள்.
இஞ்சியைப் பயன்படுத்தி செய்யும் தேநீரையும், அதிலுள்ள விசேஷ குணங்களையும் கொஞ்சம் பார்ப்போமா?
முதலில் ஒரு பொருளை உணவில் சேர்ப்பதற்கு முன் அதில் என்னென்ன சத்துக்கள் உள்ளதென தெரிந்துகொள்ளுங்கள் . இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா என உங்களை நீங்களே எடைப் பார்த்துக் கொள்ள முடியும்.
இஞ்சியில் உள்ள சத்துக்கள்:
இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற கனிம சத்துக்களும் உள்ளன.
இஞ்சி டீ செய்யும் முறை:
இஞ்சியை நிறைய சமையல் ரெசிபியில் சேர்த்துக் கொண்டாலும், இஞ்சி டீ மிகவும் சிறந்ததாகும்.
தேவையானவை:
4-6 தோலை நீக்கிய மெலிதான இஞ்சித் துண்டுகள்
1.5-2 கப் குடிநீர்
சில துளிகள் எலுமிச்சை சாறு
1-2 தேக்கரண்டி தேன்
இஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கவும். மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள். அதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும். உங்களுக்கு சில்லென ஐஸ் டீ குடிக்க வேண்டுமென்றால்,இந்த டீ யை 30 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.
இஞ்சி டீ குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்:
ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது:
இஞ்சி டீ ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மற்ற சத்துக்களையும், ஆக்ஸிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்ல உதவி புரிகிறது. செல் வளர்ச்சியை தூண்டுகிறது.
சிறந்த வலி நிவாரணி:
‘ஜிஞ்சரால்’ என்ற பொருள் இஞ்சியில் உள்ளது. அது சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. நம் உடலில் காக்ஸ்-2 என்ற என்ஸைம் தான் வலியைத் தருகிறது. அதன் செயலை தடுக்க இஞ்சி உதவி புரிந்து வலியை குறைக்கச் செய்கிறது.
தொடர்ந்து இஞ்சி டீயை எடுத்துக் கொள்ளும் போது, எலும்பு சம்பந்தமான வியாதிகளான, ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், முடக்கு வாதம், கீல்வாதம் ஆகியவற்றால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மைக்ரைன் எனப்படும் நாள்பட்ட ஒற்றை தலைவலி, டென்ஷனினால் வரக் கூடிய தலைவலி ஆகியவைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மாத விடாய் பிரச்சனைகளுக்குத் தீர்வு :
தொடர்ந்து இஞ்சியை உட்கொள்ளும்போது, ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிறது என 2014 ம் ஆண்டில் ISRN (Obstetrics and Gynecology) என்ற இதழ் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது. மாதவிடாயின் போது வெதுவெதுப்பான இஞ்சி டீ குடிப்பதனால், தசைகளுக்கு ஓய்வு தந்து, வயிற்றில் ஏற்படும் பிடிப்புகளை போக்கி இதம் அளிக்கிறது.
வாந்தியா?வயிற்று வலியா?இஞ்சி டீ இருந்தால் கவலையில்லை:
இஞ்சியில் இருக்கும் ஃபீனால் மற்றும் வோலடைல் ஆயில் ஆகியவை நரம்பு மண்டலத்தை தூண்டி, வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை போக்குகிறது. குமட்டல், வாந்தியை தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு அருமையான மருந்தாகும், வாய்வினைப் போக்கும். ஜீரணத்தை தூண்டும். கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதத்தில் வரக் கூடிய வாந்தியினை இஞ்சி டீக் கொண்டு தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. தொற்றுக்களை அகற்ற உதவி புரிகிறது. உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சுவாசத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுதலை:
இஞ்சி மார்பில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும். ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும். சாதாரண சளி, இருமல்,வறட்டு இருமல், மற்றும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் தொற்றிற்கும் நிவாரணம் அளிக்கிறது.
கொழுப்பினை கரைக்கிறது:
உடலின் குடலில் படியும் கொழுப்பினை இஞ்சி வெகுவாக குறைக்கிறது. பைல் அமிலத்தின் சுரப்பினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் கொழுப்பு உடலிலேயே தங்காமல் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. உடல் பருமனை குறைக்கும்.
இஞ்சி டீ அதிகமாக உட்கொண்டாலும் பக்க விளைவுகள் :
இஞ்சியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது குமட்டல் வாந்தி வரலாம். இது அமிலத்தன்மை கொண்டுள்ளதால், அசிடிட்டி அதிகரிக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதய நோய் உள்ளவர்கள், பித்தப்பை கற்கள் உள்ள நோயாளிகள், மற்றும் ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
Average Rating