இன்று சம்பந்தனிடம் கையளிக்கப்படும்; “தற்கொலை அங்கியுடன் பிறந்த”, வட மாகாண சமஷ்டி பிரேரணை..! -எம்.எஸ்.எம்.ஐயூப்
வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்கால சுயாட்சி அதிகாரசபையும் (Interim Self-Governing Authority- ISGA) ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க முடியாது.
வரதராஜப் பெருமாள், தமது பிரேரணையின் மூலம் அரசாங்கத்திடம் 19 கோரிக்கைகளை சமர்ப்பித்து, அவற்றை அரசாங்கம் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், ஒரு வருடத்தில் அதாவது 1991ஆம் ஆண்டு மாரச் மாதம் 1ஆம் திகதி, வடக்கு, கிழக்கில் சுதந்திரப் பிரகடனம் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
இந்த 19 கோரிக்கைகள், நாட்டின் இறைமையையோ அல்லது நாட்டின் பாதுகாப்பையோ பாதிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை. ஆனால், பெருமாளின் பிரிவினைக்கான எச்சரிக்கை காரணமாக, அந்த 19 கோரிக்கைகளும் மூடி மறைக்கப்பட்டு, அந்த எச்சரிக்கையும் எச்சரிக்கையாகவன்றி தனிநாட்டுப் பிரகடனமாகவே திரிபுபடுத்தப்பட்டு, இன்று வரை அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
2003ஆம் ஆண்டு புலிகள் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாகத்துக்கான பிரேரணை என்றால், மிகத் தெளிவாகவே தனித் தமிழ்நாட்டை, அரசாங்கத்தின் இணக்கத்தில் சட்டபூர்வமாகவே பெற்றுக் கொள்ளும் தந்திரமாக அமைந்திருந்தது.
ஆனால், அப்போதைய அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், புலிகளால் ஒரு தலைப்பட்சமாக இடைநிறுத்தப் பட்டிருந்தமையினாலும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் விடயம் இழுபறியில் இருந்தமையினாலும், அந்த ஆலோசனை ஆராயப்படாமலே காலத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
இப்போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள பிரேணையானது, அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கான ஆலோசனையொன்று மட்டுமே. அதற்காக அது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
அதைத் தவிர, அது தொடர்பில் மாகாண சபையினால் எதனையும் செய்ய முடியாது. மாகாண சபையின் ஆளுங்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போதிலும், நிர்வாகரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, மாகாண சபைக்கு மேலுள்ள அமைப்பொன்றல்ல. எனவே, நிறைவேற்றப்பட்ட இந்தப் பிரேரணை, மாகாண சபைகள் அமைச்சரிடமோ அல்லது பிரதமரிடமோ தான் கையளிக்கப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் கிளையொன்றினால் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தால், அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்காக, அதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கையளிப்பது சரியானதே.
அதேவேளை, இந்தப் பிரேரணை சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டால், அவர் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்வதும் நிச்சயமாகும். ஏனெனில், அவர், இது போன்ற சர்ச்சைக்குரிய பிரேரணையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்கும் நிலையில் இருக்கிறாரா என்பது சந்தேகமே.
அவர், அரசாங்கத்துடன் மிகவும் சுமுக உறவை வைத்துக் கொள்ளவே அண்மைக்காலமாக முயற்சி செய்து வருகிறார். அவர் இதனை ஏற்றுக் கொண்டால், அரசாங்கத்திடம் சமர்ப்பிக்காமல் இருக்கவும் முடியாது. சமர்ப்பிக்கவும் முடியாது. சமர்ப்பித்தால், அரசாங்கத்துடன் முறுகல் நிலை உருவாகலாம்.
தென் பகுதி மக்கள் மத்தியில் நல்லபிப்பிராயத்தை உருவாக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் வீணாகிப் போய்விடும். அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்காமல் இருந்தால், கூட்டமைப்பிலுள்ள அவருக்கு எதிரானவர்கள், தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய அது வாய்ப்பாக அமைந்துவிடும்.
இநதப் பிரேரணை, அதன் முகவுரையாக, தமிழ்த் தலைவர்களின் சகல ஆவணங்களிலும் வரும் பழைய பல்லவியொன்றினால் ஆரம்பிக்கப்படுகிறது. அதாவது, 1926ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சமஷ்டி முறையை ஆதரித்தது முதல், தனிச் சிங்களச் சட்டம், தரப்படுத்தல், சிங்களக் குடியேற்றங்கள், இனக் கலவரங்கள், பண்டா-செல்வா ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள், வட்டுக்கோட்டை மற்றம் திம்புப் பிரேரணைகள், ஒஸ்லோ சமஷ்டி இணக்கப்பாடு வரை, ஒரு வரலாறு அதில் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அது, இலங்கையில் சமஷ்டி ஆட்சியமைப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனறும் அதன்படி, மொழி வாரியான இரண்டு மாநிலங்களை (states) உருவாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.
இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படும் தமிழ் மொழி வாரியான மாநிலத்தின் கீழ், முஸ்லிம் சுயாட்சி அலகொன்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமையும், சிங்கள மொழி வாரி மாநிலத்தின் கீழ், மலையக மக்களுக்காக தமிழ் பேசும் அலகொன்றும் உருவாக்க வேண்டும் என பிரேரணை கூறுகிறது. (இந்தியாவில் state என்ற ஆங்கிலச் சொல்லக்குப் பதிலாக, மாநிலம் என்ற தமிழ்ச் சொல் பாவிக்கப்படுவதால், நாமும் இங்கு state என்பதற்கு மாநிலம் என்ற சொல்லைப் பாவித்தோம்)
முஸ்லிம் அலகின் நிலைமை, அதன் பரப்பு மற்றும் அதன் நியாயாதிக்கம் ஆகியவை, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களிடையே பேசித் தீர்க்கப்பட வேண்டும்.
இரண்டு மாநிலங்களுக்கு இரண்டு நாடாளுமன்றங்கள் நிறுவப்படுவதோடு, முஸ்லிம் மற்றும் மலையக அலகுகளுக்கு இரண்டு நிர்வாக சபைகள் நிறுவப்படும். பாரிய கொழும்பு பிரதேசத்தின் நிர்வாகத்துக்காக, தனியானதோர் நகர நிரவாக சபையொன்று அமைக்கப்படும்.
தேசியக் கொடியில் உள்ள குழுக்களைப் பிரதிபலிக்கும் அடையாளங்கள் இல்லாதொழிக்கப்பட்டு, தேசிய கீதம், தமிழிலோ அல்லது சிங்களத்திலோ அல்லது இரண்டு மொழிகளிலுமோ சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பாடப்பட வேண்டும்.
மத்திய சமஷ்டி அரசாங்கத்துக்குக் காணி அதிகாரங்கள் இல்லை. அந்த அதிகாரங்கள், இரண்டு மொழி வாரியான மாநிலங்களுக்கே வழங்கப்படும்.
இரண்டு மாநிலங்களுக்கும் பூரண பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதோடு, மத்திய சமஷ்டி பொலிஸ், மத்திய அரசாங்கத்தின் சட்டங்களை அமுலாக்க மட்டுமே செயற்படும்.
இரண்டு மாநிலங்களின் பொலிஸ்மா அதிபர்கள், மாநிலங்களின் கீழ் வரும் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு பொறுப்பாக இருப்பர். அவர்கள், தேவையானவற்றை மத்திய பொலிஸ்மா அதிபருக்கு அறிவிப்பர்.
தற்போதைய மாகாண ஆளுநருக்குப் பதிலாக நியமிக்கப்படும் இரண்டு மாநிலங்களுக்கான மத்திய அரசின் பிரதிநிதி, அரசியலமைப்புச் சபையினதும் சம்பந்தப்பட்ட மொழி வாரியான அரசின் முதலமைச்சரினதும் அங்கிகாரத்துடன் நியமிக்கப்படுவார்.
மத்திய அரசு, மொழி வாரியான மாநிலங்களின் நாடாளுமன்றங்களைக் கூட்டவோ அவற்றின் கூட்டத் தொடரை ஒத்திவைக்கவோ அல்லது அவற்றை கலைக்கவோ முடியாது.
இரண்டு மொழி வாரியான மாநிலங்களின் கீழும் பல நீதிமன்றங்கள் இருக்கும். அவற்றின் மேன்முறையிட்டு நீதிமன்றத்துக்கு மேலாக, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் இயங்கும்.
மத்திய அரசாங்கத்திடம், தேசிய பாதுகாப்பு, தேசிய நிதி, வெளியுறவுத்துறை, போக்குவரத்து, தபால், தொலைத் தொடர்பு, தேசிய ஊடகங்கள், மருந்து வகைகள், விஷப் பொருட்கள மற்றும் போதைப் பொருட்கள், அணு சக்தி, நீதித் துறையின் நிர்வாகம் மற்றும் தேசிய புள்ளி விவரங்கள் ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.
இந்தத் திட்டம், நிச்சயமாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம். அது, தனி நாட்டுக்கான திட்டம் என சிங்கள அரசியல்வாதிகள் கூறலாம். ஆனால் அது, தனி நாட்டுக்கான திட்டம் அல்ல. மாறாக, அது ஒரு படி ஏறினால் தனி நாட்டை அடையக் கூடிய அளவில் தனி நாட்டை அண்மித்த திட்டமாகும்.
அதேவேளை, அதில் பல தெளிவற்ற இடங்களும் உள்ளன. உதாரணமாக, இத்திட்டத்தின்படி, ஒரு மொழி வாரி மாநிலம், இலங்கைக் குடியரசிலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை நிறைவேற்றிக் கொண்டாலே போதுமானதாகும்.
அவ்வாறு மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து செல்லா என்பதோ, அவ்வாறு பிரிந்து போவதாக முடிவு செய்தால் மத்திய அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பதோ தெளிவாகும் வகையிலான ஒழுங்குகள் இத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களில், வட பகுதியிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறுவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியதற்காக, வட மாகாண சபையில் இனஒழிப்பு பற்றிய பிரேரணையை நிறைவேற்றப்பட்டதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
அவ்வாறு முடிவு எடுக்கும் தலைவர்கள் இருக்கும் நிலையில், மாநில நாடாளுமன்றத்தில் பிரிவினைக்கான பிரேரணைகள் நிறைவேறா எனக் கூற முடியாது.
இந்தத் திட்டத்தின் படி, மத்திய அரசாங்கமானது, எது நடந்தாலும் சம்பந்தப்பட்ட மாநில நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. எனவே தான், இது ஒரு படி ஏறினால் தனி நாட்டை அடையக் கூடிய அளவில் தனி நாட்டை அண்மித்த திட்டம் எனக் கூறினோம்.
முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும் சுயாட்சி அலகுகளும், தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு மாநிலங்களும் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பது மற்றொரு தெளிவற்ற விடயமாகும்.
முஸ்லிம்களின் தனித்துவத்துக்கும் தமிழர்களின் தனித்துவத்துக்கும் இடையிலான வித்தியாசத்தையும் சிங்களவர்களின் தனித்துவத்துக்கும் மலையக மக்களின் தனித்துவத்துக்கும் இடையலான வித்தியாசத்தையும் இத்திட்டம் விளக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம்களையும் தனித் தேசிய இனமாக அங்கிகரிப்பதாக, அக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் கூறியதாக, அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறாயின், மாநிலம் என்றும் அலகு என்றும் இன்னொரு இடத்தில் நாடாளுமன்றம் என்றும் சுயாட்சி சபை என்றும் வித்தியாசப்படுத்துவது எந்த அடிப்படையில்? சிங்களத் தலைவர்கள், தமிழர்களின் அதிகாரத்துக்கான உரிமையை மறுப்பதற்கும் வட மாகாண சபை, முஸ்லிம்களினதும் மலையக மக்களினதும் அதிகாரத்துக்கான உரிமையை மறுப்பதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இந்தத் திட்டத்தின் அமுலாக்கல், அதிலுள்ள சில வாசகங்களாலேயே மறுதலிக்கப்படுகிறது.
எனவே, இது நடைமுறைப்படுத்தப்படும் வாய்ப்புக்கள் அரிதாகவே தெரிகிறது. இத்திட்டத்தின் படி, அரசாங்கமும் தமிழ்த் தலைமையும் இத்திட்டத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை கலந்து கொள்ள வேண்டும்.
அப்போது தமிழ்த் தலைவர்களின் திட்டம் நிராகரிக்கப்பட்டால், தமிழர்கள், தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்களிடையே வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும். அதனை ஐ.நா அல்லது நட்பு நாடுகள் மேற்பார்வை செய்ய வேண்டும்.
அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளின் மத்தியஸ்தத்துடன், இத்திட்டத்தைப் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அரசாங்கம், இத்திட்டம் பாதகமானது என்று கருதினால், அதனை நிராகரிக்கக் கூடும்.
இத்திட்டத்தின்படி, அப்போது, வடக்கு, கிழக்கு பகுதிகளில் இத்திட்டத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால், யார் அதனை நடத்த வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்படவில்லை. அரசாங்கம் நடத்தாது.
அதேபோல், அரசாங்கம் இத்திட்டத்தை நிராகரித்தால், அதற்கு அடுத்த கட்டமான கருத்துக் கணிப்புக்கான பகுதியும் கூடத் தான் நிராகரிக்கப்படும்.
அப்போது கருத்துக் கணிப்பு எவ்வாறு நடத்தப்பட முடியும், அதாவது இத்திட்டத்துக்குள்ளேயே இத்திட்டத்தை மறுதலிக்கும் பிரமாணங்கள் அடங்கியுள்ளன. அதாவது, இத்திட்டம், தம்மை மட்டும் அழித்துக் கொள்ளும் தற்கொலை அங்கியுடன் தான் பிறந்துள்ளது.
Average Rating