“ஈ.பி.டி.பி”யில் பிரிவு எதற்கு? -அகிலன் கதிர்காமன்…!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார். சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே ஓர் எதிர்பார்ப்பிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தன்னுடைய விலகலை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார் சந்திரகுமார்.
ஆனால், சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தைப் பற்றி, இதுவரையில் ஈ.பி.டி.பி வட்டாரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஈ.பி.டி.பியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் இதைப்பற்றிய செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.
ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்குமிடையில் சில காலமாக இடைவெளியொன்று ஏற்பட்டிருப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. சில இணையத்தளங்களும் சில பத்திரிகைகளும் இதைப்பற்றிய செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுமிருந்தன.
என்றாலும், இருவரும் தமக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துகளையும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தனர். இந்த முரண்பாடுகள் எதனால் ஏற்பட்டன என்று இப்பொழுது கூட இருதரப்பும் முறையாகச் சொல்லவில்லை.
ஆனால், யுத்த முடிவுக்குப் பின்னரான காலகட்டத்துக்குரிய அரசியலை முன்னெடுப்பதிலும், அதற்கான அணுகுமுறைகளை மேற்கொள்வதிலும் சந்திரகுமார் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும், கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா கொண்டிருந்த நிலைப்பாட்டுக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் நிலவி வந்திருக்கின்றன.
தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, புதிய சூழலுக்கு ஏற்றமுறையில் கட்சியையும் அதனுடைய அரசியல் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்க வேண்டும் என சந்திரகுமார் விரும்பியிருந்தாகச் சொல்லப்படுகிறது.
அப்படிப் புதியதொரு உள்ளடக்கமும் தோற்றமும் உருவாக்கப்பட்டால் தான், கட்சியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்க முடியும் என்பது சந்திரகுமாரின் அபிப்பிராயமாக இருந்தாகவும் கூறப்படுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக சந்திரகுமார், கட்சிக் கூட்டங்களிலும் பொதுச்சந்திப்புகளிலும் தன்னுடைய அபிப்பிராயங்களைப் பகிர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கட்சி கொண்டிருந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அரசியல் யதார்த்தம் உள்ளதாகவும் தாம் வலியுறுத்திய வழிகளையே காலம் கடந்தும் தமிழ் அரசியல் தலைமைகள் கொள்ள வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் ஈ.பி.டி.பியின் உயர்பீடம் தெரிவித்து வந்திருக்கிறது.
அதாவது, ஏற்கெனவே முன்னுணர்ந்த தீர்க்கதரிசனமான தங்களின் பாதையையும், வழிமுறைகளையும் அன்று மறுத்தவர்களும் விமர்சித்தவர்களும், இப்பொழுது அதையே பின்பற்றுகின்றார்கள். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூட, தான் சொன்ன அரசியல் வழிமுறைகளுக்கு இன்று வந்து சேர்ந்திருப்பதாக டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாகவே தெரிவித்து வந்திருக்கிறார்.
ஆகவே, முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வழிமுறையில் உறுதியாக நின்றார். இந்த நிலையில், சந்திரகுமாரின் அபிப்பிராயங்கள் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறது. இது கட்சிக்குள்ளே ஒரு மெல்லிய இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த இடைவெளி நிரந்தப் பிரிவுக்கு வழிகோலியது, 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலே.
இந்தத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பியின் அடையாளத்தைத் தவிர்த்து நின்றால் வெற்றி வாய்ப்புக் கிடைக்கும் என்று சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுமக்களிடத்திலும் ஒரு நம்பிக்கை இருந்தது. இதைப் பலரும் சந்திரகுமாரிடமே தெரிவித்துமிருக்கின்றனர். ஆனாலும் சந்திரகுமார், ஈ.பி.டி.பியின் சின்னத்திலேயே போட்டியிட்டார்.
இருந்தும் சந்திரகுமாருக்கான வெற்றி வாய்ப்புக்குச் சந்தர்ப்பம் உண்டு என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலவேளை டக்ளஸ் தேவானந்தாவுக்கும், சந்திரகுமாருக்குமிடையில் ஒரு நிழல் போட்டி ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் அந்தக் கட்சியின் உயர்மட்டத்தில் பரப்புரையை மேற்கொள்வதில் சில மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. பத்திரிகைகளில் கொடுக்கப்பட்ட தேர்தல் விளம்பரங்கள் வரையில் இந்த முரண்பாடுகள் பிரதிபலித்ததை அன்றே ஊடகத்துறையினர் அவதானித்திருந்தனர்.
இருந்தும் எந்த முரண்பாடுகளும் வெளியே பகிரங்கப்படுத்தப்படாமல் தேர்தல் வரை நிலைமை சென்று கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் சந்திரகுமாருக்குப் பாதகமாகவும் டக்ளஸ் தேவானந்தாவுக்குச் சாதகமாகவும் வந்திருந்தன.
கிளிநொச்சி மாவட்டத்தை தன்னுடைய தீவிர செயற்பாட்டுக்களமாகக் கொண்டு செயற்பட்டு வந்தவர் சந்திரகுமார். அதனால் அவருக்கு அந்த மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் உண்டு.
தேர்தலின் போதும் சந்திரகுமாருக்கும், ஈ.பி.டி.பிக்கும் கிளிநொச்சியில் கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளும் இணைந்தே டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றிக்கு உதவின.
இருந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் சந்திரகுமார் ஈ.பி.டி.பியின் கட்சிக் கூட்டங்களில் சந்திக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் தேர்தலுக்குப் பிறகு, கிளிநொச்சி மாவட்டத்தில் தனியாகவே சென்று டக்ளஸ் தேவானந்தா கட்சியின் ஆதரவாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது சந்திரகுமார் பிரசன்னமாகவில்லை.
இது கட்சி ஆதரவாளர்களிடத்தில் பல விதமான கேள்விகளை எழுப்பின. இருந்தாலும் அதை யாரும் பொது விவாதமாக்கியிருக்கவில்லை. ஆனாலும் சந்திரகுமாருக்கு இது மேலும் கசப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் பின்னர், ஏறக்குறைய டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் எந்தத் தொடர்புகளும் இருந்திருப்பதற்கான அடையாளங்கள் இல்லை. ஈ.பி.டி.பியின் இணையத்தளத்தில் செய்திகளாகவும் செயற்பாடுகளாகவும் தினமும் வெளிவந்து கொண்டிருந்த சந்திரகுமாரின் அடையாளத்தை அந்தத் தளத்தில் காணவே முடியவில்லை.
கட்சிக்கூட்டங்கள், நடவடிக்கைகள் எதிலும் சந்திரகுமாரைப்பற்றி அறிய முடியாதிருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 17.04.2016 அன்று தான் அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டதாகச் சந்திரகுமார் பொதுப்பரப்பில் அறிவித்திருக்கிறார்.
அதாவது, நீண்ட நாட்களாக உள்ளே கொதித்துக்கொண்டிருந்த பிரச்சினைகள் தேர்தல் முடிவுகளோடு ஒரு தீர்க்கமான திசையை நோக்கிச் சந்திரகுமாரைத் திருப்பி விட்டன.
அசோக் என்றும் அசோக் தோழர் என்றும் ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் காலத்திலிருந்து அறியப்பட்டவர் சந்திரகுமார்.
1983 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ்வில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்ற போராளியாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரகுமார், ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படை என்ற இராணுவப்பிரிவில் வவுனியா மாவட்டத்தின் தளபதியாகச் செயற்பட்டிருக்கிறார்.
மக்கள் விடுதலைப் படையின் தளபதியாக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. ஆகவே, அந்தக் காலகட்டத்திலிருந்து டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் நெருங்கிய சகாக்களாகவே இருந்தனர்.
பின்னர், ஈழமக்கள் புரட்சிர விடுதலை முன்னணி உடைந்து, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாக (EPDP) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உருவானபோது அதில் முக்கியமான ஒருவராகவும் சந்திரகுமார் இருந்திருக்கிறார்.
1988 இலிருந்து அந்தக் கட்சியின் முக்கியஸ்தராகச் செயற்பட்ட சந்திரகுமார் 1994 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அது சந்திரிகா குமாரதுங்க ஆட்சியிலிருந்த காலம்.
புலிகளுக்கு எதிரான படையெடுப்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய அரசாங்கம், அங்கே நடத்திய தேர்தலில் பிறதரப்புகளின் போட்டியில்லாமல், ஈ.பி.டி.பி ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றியது. இதில் டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார், ரமேஸ் என்ற அற்புதன், சிவதாசன், பத்மன் என்ற தங்கவேல், ராமேஸ்வரன் உள்ளிட்ட ஒன்பதுபேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியிருந்தனர்.
யாழ்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கட்சித் தீர்மானத்தின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வௌ;வேறு மாவட்டங்களில மக்களுக்கான வேலைகளையும் கட்சி நடவடிக்கைகளையும் கவனித்தனர். இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் சந்திரகுமார் தன்னுடைய பணிகளைச் செய்தார்.
அப்பொழுது அவர் உருவாக்கிய பல தமிழ்க் கிராமங்கள் தான் இன்று திருகோணமலை நகரப்பகுதியின் இனவிகிதாசாரத்தைப் பேணித் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்திருக்கிறது என்று, அண்மையில் ஓர் அரசியல் ஆய்வாளர் குறிப்பிட்டமை இங்கே நினைவு கொள்ளத்தக்கது.
அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரமேஸ் என்ற அற்புதன், தினமுரசு வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். அற்புதன் ஒருநாள் இனந்தெரியாதோரால் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சந்திரகுமார் நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரகுமாருக்கும் கட்சிக்குமிடையில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த வகையான உறவும் இருந்திருக்கவில்லை.
2009 இல் யுத்தம் முடிந்த பின்னர், சந்திரகுமார் நாடு திரும்பி, மீண்டும் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து கொண்டார். அது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலகட்டம். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி தேர்தல்களில் போட்டியிட்டது.
2010 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த சந்திரகுமார், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் என்ற உயர் பதவியைப் பெற்றிருந்தார்.
தனக்குக் கிடைத்த செல்வாக்கான இந்தப் பதவியைப் பயன்படுத்தி, போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் வேலைகளைச் செய்யத் தொடங்கினார். குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே தன்னுடைய செயற்பாடுகளின் காரணமாக மக்களிடத்திலும் பொதுவெளியிலும் தனித்துவமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தென்படத் தொடங்கினார்.
ஆனாலும் 2105இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சந்திரகுமாருக்கு வெற்றியைத் தரவில்லை. இது அவருடைய அரசியல்தெரிவின் தவறினால் ஏற்பட்டது என்று பலரும் தெரிவித்து வந்தமையைத் தொடர்ந்து, சந்திரகுமார் இப்பொழுது ஈ.பி.டி.பியிலிருந்து விலகியிருக்கிறார். இதை அவரே தன்னுடைய வெளியேற்றத்துக்குக் காரணமாகவும் தெரிவித்திருக்கிறார்.
சந்திரகுமாரின் இந்த வெளியேற்றம் ஈ.பி.டி.பியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தக் கேள்வி முக்கியமானது.
ஏனென்றால், ஈ.பி.டி.பியின் முக்கிய பிரமுகராகவும் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும் டக்ளஸ் தேவானந்தாவுடன் நீண்ட உறவைக் கொண்டிருந்தவர் சந்திரகுமார். அந்தக் கட்சியில் இருந்த உறுப்பினர்களில் மக்களின் மத்தியில் மதிப்பு வாய்ந்தவராகவும் உயர் பதவிகளை வகித்தவராகவும் இருந்தவர்.
இன்னும் சற்றுக் கூர்மையாகச் சொல்வதாக இருந்தால், ஈ.பி.டி.பியின் இரண்டாம்நிலைத் தலைவராக இருந்தவர். தேவானந்தாவுக்கு அடுத்தபடியாகத் தென்னிலங்கையின் அரசியற் தரப்புகளுடன் உறவையும் செல்வாக்கையும் கொண்டிருந்தவர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அறிமுகமானவர்.
ஆகவே, சந்திரகுமாரின் இந்த வெளியேற்றத்தினால் அந்தக் கட்சிக்கு உண்டாகக் கூடிய பாதிப்புகள் நிச்சயமாக ஒரு சரிவை உண்டாக்கும்.
2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகரசபையை ஈ.பி.டி.பி கைப்பற்றியது. 2010இல் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.
ஆனால், பின்னர் அது மெல்ல மெல்ல செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலுமாக தலா ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களையே பெற்றது.
இந்த நிலையில் இப்பொழுது கட்சியின் கவர்ச்சிக்குரிய முக்கிய புள்ளியாக இருந்த ஒருவரின் வெளியேற்றம் என்பது அந்தக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விடயம். கட்சியை மீளமைப்புச் செய்யும் நடவடிக்கைகளில் இப்பொழுது ஈ.பி.டி.பி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான கூட்டம் தீவகப்பிரதேசத்தில் நடக்கும்போது சந்திரகுமாரின் வெளியேற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்த நிலையில் கட்சி என்ன நடவடிக்கையை எடுக்கும்? அடுத்த கட்டமாக என்ன செய்யும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகும்.
ஆனால், டக்ளஸ் தேவானந்தா, இதுபோலப் பல பிரச்சினைகளையும் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்ட அனுபவத்தையுடையவர். ஆகவே அவர், சந்திரகுமாரின் வெளியேற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாதவாறு நடந்து கொள்ள முற்படுவார் என்று டக்ளஸ் தேவானந்தாவுக்கு மிக நெருக்கமான ஒருவர் தெரிவிக்கிறார்.
ஆனால், இன்றைய சூழலில், ஈ.பி.டி.பி தன்னை மிகப் பிரயத்தனப்பட்டு மீளமைக்க வேண்டியிருக்கும் போது அந்தக் கட்சியிலிருந்து முக்கியமான ஒருவர் வெளியேறியிருப்பது சாதாரணமானதல்ல.
இது தனியே சந்திரகுமாரின் வெளியேற்றமாக அமையுமா? அல்லது சந்திரகுமாரைத் தொடர்ந்து வேறு சிலரும் வெளியேறிச் செல்ல வாய்ப்புகள் உண்டா? என்றும் நோக்கப்படுகிறது. அப்படியாக அமைந்தால் அது ஈ.பி.டி.பிக்கு இன்னும் நெருக்கடிகளையே கொடுக்கும்.
மறுவிதமாக, ஈ.பி.டி.பியிலிருந்து சந்திரகுமார் வெளியேறியிருப்பதை அவருடைய ஆதரவாளர்களும் பொதுத்தளத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் இந்த வரவேற்பை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஆனால், சந்திரகுமார் அடுத்த கட்டமாக என்ன தெரிவுகளைச் செய்யவுள்ளார், புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், எந்தத் தரப்போடும் இணைந்து கொள்வதைப் பற்றி இப்பொழுது சிந்திக்கவில்லை என்றும் சொல்லியிருந்தாலும் எந்தத் தெரிவுகளையும் செய்யாமல் இருக்க முடியாது. அதற்குச் சூழல் அனுமதிக்கப் போவதுமில்லை.
தேசியக் கட்சிகளின் பக்கம் செல்வதாக இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் செல்லக்கூடுமா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்வாரா? என்றால், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன, அப்படியொரு ஐடியா அவருக்கு இல்லை என்று.
அப்படியானால் தமிழ்த்தரப்பில், கூட்டமைப்பில் அவர் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உண்டா?, அதற்கான கள யதார்த்தம் உள்ளதா? என்றால், அதுவும் துலக்கமாகத் தெரியவில்லை.
ஆனால், ஐக்கிய இலங்கைக்குள் பன்மைத்துவத்தையும் சமூகநீதியையும் ஏற்றுக்கொள்ளும் தரப்புகளோடு தான் சேர்ந்து வேலை செய்யத் தயார் என்று அறிவித்திருக்கின்றமை, அவர் இடதுசாரிகளுடன் நெருக்கமாகி ஒரு கூட்டினை உருவாக்க முயற்சிக்கிறாரா? என்று கேட்க வைக்கிறது.
அல்லது இன்று இலங்கையில் உருவாகியிருக்கும் புதிய அரசியற்சூழல், கூட்டாட்சி போன்ற ஒரு நிலை தமிழ் அரசியற்பரப்பிலும் நிச்சயமாக உண்டாகும் என்ற நம்பிக்கையோடு, அதற்கான சூழமைவுகளை உண்டாக்க முற்படுகிறாரா?, ஏனென்றால் அப்படித்தான் அவர் தன்னுடைய விலகலுக்கான அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதுண்டு. கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பதுண்டு, கட்சிகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் தான் இப்பொழுது பரவலான ஒரு வழமையாக உள்ளது. இலங்கையில் உள் முரண்பாடுகளால் சிக்கித்தவிக்கும் கட்சிகள் தான் இன்று அதிகம். இந்த முரண்பாடுகள் தான் தவிர்க்க முடியாமல் ஒரு பெருந்திரட்சியான ஒருங்கிணைவை ஏற்படுத்துகிறது.
இதற்கு ஒரு செழிப்பான உதாரணமே, இலங்கையின் இன்றைய கூட்டாட்சி.
அப்படியானதோர் ஒருங்கிணைவு, தமிழர் அரசியலில் அல்லது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுக்கும் அமைந்தால் மகிழ்ச்சியே. அதற்கான ஒரு புள்ளியாகத்தான் சந்திரகுமாரும் அவருடைய விலகலும் அமைந்துள்ளதா?
Average Rating