மேட்டூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளை..!!
தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர், ஸ்ரீநகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 52). இவர் மேட்டூர் பகுதியில் இயங்கி வரும் ரசாயணம் தயாரிக்கக் கூடிய தனியார் தொழிற்சாலையில் மெக்கானிக் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாவதி.
இவர்களுக்கு சீனிவாச ராகவன், மணிகண்டன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சீனிவாசராகவனுக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் மனைவியுடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். 2–வது மகன் மணிகண்டன் மேற்கு வங்காளத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூத்த மகன் சீனிவாசராகவனை பார்ப்பதற்காக, அவரது தாயார் கலாவதி ஆந்திராவுக்கு சென்றார்.
நேற்றிரவு வழக்கம்போல் ராமமூர்த்தி இரவு பணிக்காக ரசாயண தொழிற்சாலைக்கு சென்றார். அவரது மாமனார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவருக்கு காதுகள் சரிவர கேட்காது என கூறப்படுகிறது.
இதனை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவு அவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து, நைசாக உள்ளே புகுந்தனர். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் ராமமூர்த்தியின் மாமனார் அமர்ந்திருந்தார். அவருக்கு காதுகள் கேட்காது என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள் வீட்டின் மாடி படி வழியாக ஏறி, மேல் தளத்துக்கு சென்று, அறையில் உள்ள பீரோவை உடைத்தனர். அதில் வைத்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இரவு பணிக்கு சென்று விட்டு, இன்று காலையில் வீட்டிற்கு திரும்பி வந்த ராமமூர்த்தி வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் உடனடியாக கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் மேட்டூர் டி.எஸ்.பி. நடராஜன், கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடந்தது எப்படி? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கைரேகை நிபுணர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து கொண்டனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீடு முழுவதும் ஓடியது. பின்னர் வீட்டின் முன்பு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று கொண்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தியபோது, சுமார் 110 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாக கூறினார்.
மேலும், என்ன ? என்ன? நகைகள் திருட்டு போனது, அதன் அடையாளங்கள் குறித்து கேட்டபோது, சுமார் 55 பவுன் தங்க நகைகளுக்கான அடையாளங்களை கூறினார். மீதமுள்ள நகைகள் பற்றிய விபரங்கள் மகனை பார்க்க ஆந்திராவுக்கு சென்றுள்ள எனது மனைவி கலாவதி திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று தெரிவித்தார்.
இதைதொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் கொள்ளை போன நகைகள் குறித்த முழுவிபரங்களும் தெரியவரும்.
Average Rating