புளொட் இயக்கத்தை, தடை செய்த புலிகள்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 72) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
இளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்து கொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின.
சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் பிரசாரங்களும் இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருதயநேசன் 86 இல் பலியானார். இராணுவத்தினரோடு ஏற்பட்ட நேரடி மோதலில்தான் அவர் பலியானார்.
இருதயநேசனுக்கு இயக்கத்தில் சேரும்போது வயது 12. மன்னாரில் உள்ள அரிப்பு என்ற இடத்தில்தான் இருதயநேசனின் சொந்த ஊர்.
பதினைந்து வயதாக முன்னரே இருதயநேசன் பலியாகி விட்டார்.
அவரது இறுதிச் சடங்கு மன்னாரில் நடைபெற்றது. இருதயநேசனுக்கு புலிகள் விடுத்த அஞ்சலி அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
“இருதயநேசன் இயக்கத் தேழர்களுள் இளமையானவனாக விளங்கினான். தாய்நாட்டின் விடுதலையை தன் ஆத்ம தாகமாக நெஞ்சில் ஏற்றி ஆர்வத்துடன் செயல்பட்டான்.
இளவயது காரணமாக சிறீலங்கா இராணுவத்துடன் சண்டையிடச் செல்ல முடியவில்லையே என்று கவலை கொள்வான். அவன் விரும்பிய சந்தர்ப்பம் கிடைத்தது.
புதியதொரு தலைமுறைக்கு அறைகூவலாக அவனது மரணம் அமைந்தது.
மிக இளவயதில் பலியான முதல் போராளி இருதயநேசன்தான்.
புளொட் மீது தடை
1986 நவம்பரில் புலிகள் அமைப்பினர் புளொட் அமைப்பை தடை செய்யும் முடிவை எடுத்தனர்.
உட்பிரச்சனைகள் காரணமாக புளொட் அமைப்பு தனது பலத்தை ஒன்று திரட்டி செயற்பட முடியாத நிலையில் இருந்தது.
புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறி குழுவினர் புளொட் அமைப்புக்கு எதிராக பிரசாரங்ளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார் உமாமகேஸ்வரன். அங்கும் உட்பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் புளொட் அமைப்பினரிடம் செயற்பாடுகள் மந்தநிலையிலேயே இருந்தன.
ஆயுதங்கள் தமிழ்நாட்டில் இருந்தமையால் களத்தில் போதியளவு ஆயுதங்கள் இருக்கவில்லை.
அப்போது யாழ்ப்பாணத்தில் பொறுப்பாக இருந்தவர் மெண்டிஸ். அவர் உடுவிலைச் சேர்ந்தவர்.
இராணுவ நடவடிக்கைகளில் திறமையுடையவர். எனினும் இயக்கப் பிரச்சனைகள் காரணமாக மெண்டிஸ் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு போதியளவு கிடைக்கவில்லை.
புளொட் அமைப்பை நாம் தடைசெய்யப்போகிறோம் என்று கிட்டு தகவல் அனுப்பினார்.
ஆயுதங்களையும், இயக்க உடமைகளையும் 24 மணி நேரத்தில் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பொறுப்பாளர்களை சரணடையுமாறும் கிட்டு மெண்டிசுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் புலிகளிடம் ஒப்படைக்க மெண்டிஸ் விரும்பவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்போடு தொடர்பு கொண்டார். ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் கொடுத்தார்.
விசாரணை
அந்த விடயம் எப்படியோ புலிகளுக்குத் தெரிந்து விட்டது. மெண்டிசைத் தேடத் தொடங்கினார்கள்.
தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தார் மெண்டிஸ்.
புலிகள் இயக்கத்தில் கிட்டுவின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் சிவபரன். அவரும் மெண்டிசும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள்.
மெண்டிசின் சகோதரி வீடு சிவபரனுக்குத் தெரியும். புலிகள் இயக்க உறுப்பினர்களோடு அங்கு சென்றார் சிவபரன்.
அவர் வருவதைக் கண்டதும் தப்பிஓட முற்பட்டார் மெண்டிஸ். அப்போது மெண்டிசின் சகோதரி சொன்னார், “ஏன் ஓடப்பார்க்கிறாய். உன் சிநேகிதன் தானே வந்திருக்கிறான்.”
மெண்டிசை அழைத்து செல்லும்போது சிவபரன் சொன்னார். “அக்கா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். மெண்டிசை விசாரித்துவிட்டு அனுப்பி விடுவோம்.”
யாழ்ப்பாணம் வைமன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மெண்டிஸ் விசாரிக்கப்பட்டார்.
“ஆயுதங்கள் எங்கே? ஏனைய முக்கியஸ்தர்கள் எங்கே?” என்று கேட்டனர். மெண்டிஸ் வாய் திறக்கவில்லை.
அடி விழுந்தது. அவரது கை விரல்களில் நகங்கள் பிடுங்கப்பட்டன.
“ஆயுதங்களை ஒப்படைத்தால் விடுதலை செய்து விடுவோம். இல்லாவிட்டால் மண்டையில் தான் போடுவோம்” என்று கிட்டு சொல்லி விட்டார்.
ஏற்கனவே ரெலோ இயக்கத்தை புலிகள் தடைசெய்த போதும், தமிழ்நாட்டில் அந்த இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் இருந்தமையாலும், புலிகளிடம் மாட்டாமல் ஏனைய இயக்கங்களின் உதவியுடன் பலர் தப்பிச் சென்றதாலும் ரெலோ இயக்கம் அழியாமல் இருந்தது.
எனவே புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரையும் தப்பவிடக் கூடாது என்று புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
மெண்டிஸ் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தால்கூட அவரைப் புலிகள் விடுதலை செய்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.
நீண்டநாட்கள் புலிகளின் சிறையில் மெண்டிஸ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிவபரனை தேடிப்போய் மெண்டிசின் சகோதரி விசாரித்தார். “என் தம்பியை எப்போது வீட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள்?”
சிவபரன் சொன்னார் “விரைவில் அனுப்பி வைத்து விடுவோம்.” சகோதரிக்கு ஓரளவு நிம்மதி.
மெண்டிஸை இனிமேலும் வைத்திருப்பதால் பிரயோசனம் இல்லை என்ற நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்தனர் புலிகள்.
“விரைவில் அனுப்பி வைக்கிறோம்” என்று சிவபரன் சொன்னதின் அர்த்தம் பின்னர்தான் மெண்டிசின் சகோதரிக்குப் புரிந்தது.
இளவயதில் முதலாவது கள மரணம்
காணவில்லை
யாழ் பல்கலைக் கழகத்தில் ராக்கிங் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக்கூடாது என்று புலிகள் அமைப்பினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தமது முடிவை அறிவித்திருந்தனர்.
அப்படியிருந்தும் சில மாணவர்கள் ராக்கிங் செய்வதில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
04.11.86 அன்று இரவு விஜிதரன் என்னும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். ஆயுதம் தாங்கிய சிலர் வந்து அவரை அழைத்துச் சென்றனர்.
அழைத்துச் சென்றவர்கள் புலிகள், புலிகளது முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட விஜிதரனை வரவேற்றவர் கிட்டு.
வரவேற்பு என்றால் அப்படியொரு வரவேற்பு. விஜிதரன் புரட்டி எடுக்கப்பட்டார்.
மறுநாள் காலையில் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு. விஜிதரனை கடத்தியது யார்,
புலிகள் அமைப்பிடமும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் அமைப்புக்களிடமும் சென்று பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் விசாரித்தனர்.
புலிகள் அமைப்பினரும் தமக்குத் தெரியாது என்று கைவிரித்து விட்டனர்.
புலிகள் தான் விஜிதரனைக் கடத்திச் சென்றார்கள் என்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெரிந்திருந்தது.
நேரடியாக புலிகளை குற்றம் சாட்டினால் விஜிதரனின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் பொதுப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
விஜிதரனை விடுதலை செய். விஜிதரன் எங்கே? இயக்கங்களே பதில் சொல்லுங்கள்? என்று யாழ்ப்பாணமெங்கும் சுவரொட்டிகள் போடப்பட்டன.
மாணவர் போராட்டம்
தமது கோரிக்கைகள் பலனற்றுப் போனதால் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
யாழ் பல்கலைக் கழக மாணவராண விமலேஸ்வரன் தான் மாணவர் போராட்டத்தில் முன்னணியில் நின்றார்.
விமலேஸ்வரன் புளொட் இயக்கத்தில் இருந்தவர். பின்னர் அதிலிருந்து ஒதுங்கியிருந்தவர்.
விமலேஸ்வரன் புளொட் இயக்கத் தூண்டுதல் காரணமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். தமக்கெதிராக செயற்படுகிறார் என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்.
உண்மையில் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புத்தான்.
உண்ணாவிரதப் போராட்டத்தோடு நிற்காமல், பாதயாத்திரையையும் மேற்கொண்டனர் பல்கலைக்கழக மாணவர்கள்.
பாதயாத்திரை வந்த மாணவர்கள்மீது பொதுமக்கள் ஆத்திரம் கொண்டு தாக்குவது போல ஒரு சம்பவத்தை உருவாக்கினார்கள் புலிகள்.
பொதுமக்கள் என்ற போர்வையில் பாதயாத்திரையை குழப்ப முற்பட்டவர்கள் புலிகள் அமைப்பினரே என்பதை இனம் காண்பது கஷ்டமாக இருக்கவில்லை.
விஜிதரனை புலிகள்தான் கடத்தினார்கள் என்பதும் பொதுமக்கள் மத்தியிலும் தெரிய வரத் தொடங்கியது.
விஜிதரன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் அருணகிரிநாதனும், தாயாரும் தமது மகனை கடத்திய செய்தியறிந்து யாழ்ப்பாணம் வந்தனர்.
அவர்களை புலிகள் இயக்க முகாமுக்கு அனுப்பிவைத்தனர் மாணவர்கள்.
தாம் விஜிதரனை கடத்தவில்லை. ஆனால், இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் விஜிதரனை கடத்தியவர்கள் விடுதலை செய்யமாட்டார்கள்.
அவரை விடுவித்தால் தமது இயக்கப் பெயர் கெட்டுவிடும் என்று யோசிப்பார்கள். போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரன் ஒரு வேளை விடுதலையாகக்கூடும் என்று தாம் நினைப்பதாக புலிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
‘போராட்டம் நிறுத்தப்பட்டால் விஜிதரனை விடுதலை செய்வோம்’ என்பதை புலிகள் மறைமுகமாகத் தெரிவிப்பதாக மாணவர்களில் ஒரு பகுதியினர் நினைத்தனர்.
அச்சுறுத்தல்கள்
அதே சமயம் விஜிதரனை விடுதலை செய்யுமாறு நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.
கவிஞர் சேரன், விமலேஸ்வரன் போன்ற பலர் பின்னர் கவனிக்கப்படுவார்கள் என்று அவர்கள் காதுகளுக்கு எட்டக்கூடிய வகையில் சிலரிடம் சொல்லியிருந்தனர். புலிகள்.
விஜிதரனின் பெற்றோருக்கும், வேறு சிலருக்கும் விஜிதரன் வேறொரு நாட்டில் வைத்து விடுதலை செய்யப்படுவார் என்று மறைமுகமாக உணர்த்தினார் கிட்டு.
இத்தனையும் நடந்து கொண்டிருந் போது விஜிதரன் என்ன செய்து கொண்டிருந்தார்.
கடத்திச் செல்லப்பட்ட அன்றே, அன்று இரவே விஜிதரன் கொல்லப்பட்டு விட்டார்.
அதனை அறியாமல விஜிதரனின் பெற்றோர் ஊர் திரும்பினார்கள்.
புலிகளுக்கு சார்பு
தற்போது புலிகளை கடுமையாக சாடி வருபவர் இந்து ராம் என்றழைக்கப்படும் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர்.
முன்னர் அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அனுதாபியாக இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பிரச்சனை ஏற்பட்ட பின்னர் அவர் புலிகளுக்கு சார்பானவராக மாறினார்.
புரொண்ட் லைன் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த ‘ராம்’ பிரபாகரனுக்கு அடுத்தபடியாக கிட்டுமீது பிரியம் கொண்டிருந்தார்.
புரொண்ட் லைன் இதழில் கிட்டுவின் பேட்டியை சிறப்பாக வெளியிட்டார்.
கிட்டு தொடர்பாக ராம் கொடுத்த விவரணம் இது:
“தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட தளபதி சாமான்ய உயரத்திலும் சிறிது குள்ளமானவர்.
கண்ணாடி அணிந்துள்ள அவரது தலையில் முடி கொட்டியதால் அகன்ற நெற்றியுடையவர்.
அவரது முகம் எவரையும் கவரக் கூடியது. 29 வயதுடைய அவரே சிறீலங்கா அரசினால் இன்றுவரை தேடப்படும் முக்கியமான தீவிரவாத தலைவர்.
சிறீலங்கா முழுவதும் யாரைப் பார்த்தாலும் கிட்டுவைப் பற்றியே பேசப்படுகிறது.”
அத்தோடு கிட்டுவின் பேட்டியையும் வெளியிட்டிருந்தது ‘புரொண்ட் லைன்’ அதில் ஒரு பகுதி இது.
கே:- உங்களுக்கு ‘கிட்டு’ என்ற பெயர் எப்படிக் கிடைத்தது?
பதில்- நான் இயக்கத்தில் சேர்ந்தபோது எனது இயக்கம் வைத்து வெங்கிட்டு என்ற பெயர் சுருக்கமாகி கிட்டுவாக மாறிவிட்டது.
கே:- எப்போது இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?
பதில்:– 1978 இல்! நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். 1950 தொடக்கம் வல்வெட்டித்துறை மக்கள் அரசின் அடக்கு முறைக்கு உள்ளாகி வருகின்றனர்.
கள்ளக் கடத்தலையும், கள்ளக் குடியேற்றத்தையும் தடுப்பதாகக் கூறிக்கொண்டு எமது மக்கள துன்புறுத்தப்பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் வளர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் அனைவருமே அரச பயங்கரவாதத்தினால் இன்னல்படத் தொடங்கினர். ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வோடு வளர்ந்த நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன்.
வல்வெட்டித்துறை
கே:- சில பிரிவினர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறதே?
பதில்:- ஆம். சிலர் அவ்வாறு கூறுகிறார்ள். அதற்கு மேலாகவும் சென்று எமது இயக்கத்தில் குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்துவதாகக்கூடக் கூறுகிறார்கள். அது தவறான அபிப்பிராயம். ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்களும் உணரவேண்டும்.
திரு. பிரபாகரன் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தவர்கள் யார்? அவரது நண்பர்கள். அவருடன் படித்த பாடசாலை மாணவர்கள். அவரது உறவினர்கள். அயலவர்கள். ஆகவே இயல்பாகவே வல்வெட்டித்துறையிலேயே இயக்கம் ஆரம்பமானது.
நாங்கள் படிப்படியாக வளர்ந்தோம். காலம் செல்லச் செல்ல தமிழீழத்தில் இருந்து பலரும் எம்மோடு இணைந்தனர்.
எமது இயக்கத்தில் மூத்தோருக்கே (சீனியர்) முதலிடம் என்ற அடிப்படையில் தளபதிகள் நியமனம் செய்கிறோம்.
ஆரம்பத்தில் இணைந்த முதல் முகாமைச் சேர்ந்தவர்களையே தலைவர்களாக நியமிப்பது என்ற கொள்கையை பின்பற்றி வருவதால், முதல் அணியில் உள்ள வல்வெட்டித்துறை வாலிபர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
அதே சமயம் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் தளபதிகளாக உள்ளனர்.
விரைவில் சீனியோரிட்டி, தகுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏனையோரும் பொறுப்புக்கு வருவர்.
அதன் பின்னர் இந்த வல்வெட்டித்துறை மாயை மறைந்துவிடும். ஆனால் சாதி அடிப்படையில் எமது இயக்கம் இயங்குவதாகக் கூறுவது சுத்தப் பொய்….
Average Rating