வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது…!!
வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வானூர் அருகே கீழ்சித் தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கேணி (வயது 60), விவசாயி. இவரது மகன் அருண்குமார் (30). மதுகுடிக்கும் பழக்கம் உள்ள அருண் குமார் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சொந்த விவசாய வேலையையும் கவனிப்பதில்லை. இதனால் அருண் குமாரை அவ்வப்போது செங்கேணி கண்டித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி மதியம் செங்கேணி தனது வயலில் அறுவடை செய்த வைக்கோலை கட்டாக கட்டி தலையில் வீட்டுக்கு சுமந்து வந்தார். அப்போது வீட்டில் அருண் குமார் தூங்கி கொண்டிருந்ததை கண்ட செங்கேணி மகனை கண்டித்தார். வயதான காலத்தில் நான் உழைத்து உனக்கு சாப்பாடு போட வேண்டுமா என்று கூறி திட்டினார்.
இதனால் ஆவேசம் அடைந்த அருண்குமார் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து செங்கேணியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் செங்கேணி இறந்து போனார். இதனை பார்த்ததும் அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அருண்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அன்னம் புத்தூர் கிராமத்தில் காட்டு பகுதியில் பதுங்கி இருந்த அருண்குமாரை கிளியனூர் குற்றபிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் நேற்று மாலை கைது செய்தார்.
பின்னர் தந்தையை வெட்டி கொன்றது ஏன் என்பது குறித்து அருண் குமார் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார் அவர் கூறியதாவது:–
நான் வேலைக்கு எதுவும் செல்லாமல் மதுகுடித்து விட்டு வருவதை என் தந்தை செங்கேணி அடிக்கடி கண்டித்து வந்தார். அக்கம் பக்கத்தினர் இருக்கும்போது அவர்கள் மத்தியில் என்னை கேவலமாக திட்டி வந்தார். மேலும் அடிக்கடி என்னை கட்டிவைத்தும் தாக்கி வந்தார்.
அதேபோல் சம்பவத்தன்று காலையில் வயல் வேலை செய்து விட்டு மதியம் வீட்டில் சோர்வால் அயர்ந்து தூங்கினேன். அப்போது வந்த என் தந்தை என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அடிக்கடி இதுபோன்று திட்டி வந்ததால் ஆவேசம் அடைந்து அருகில் கிடந்த அரிவாளால் என் தந்தையை சரமாரியாக வெட்டினேன்.
அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு என்னை பிடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து எங்கள் கிராமத்தின் அருகில் உள்ள அன்னம் புத்தூர் கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் கடந்த 5 நாட்களாக பதுங்கிஇருந்தேன். வயல்வெளியில் கிடைத்த மணிலா மற்றும் தேங்காய், இளநீர் பறித்து பசியை போக்கி வந்தேன். எப்படியோ நான் பதுங்கி இருந்ததை போலீசார் தெரிந்து கொண்டு என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அருண்குமார் வாக்குமூலத்தில் கூறினார்.
Average Rating