சின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…!!
சின்னசேலம் அருகே கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள காலனியைச் சேர்ந்த ரஞ்சித் (21) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார்.
இவர் சின்னசேலம் அருகே உள்ள ஊரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் கவிதா(17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). என்ற பிளஸ்-2 மாணவியை பள்ளிக்கு வரும்போது கடந்த 31.8.2015-ல் கடத்தி சென்று விட்டார்.
இதுபற்றி மாணவியின் தந்தை முத்துகிருஷ்ணன், தாயார் ராதா ஆகியோர் இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் புகார் மனு கொடுத்தனர்.
இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாணவியின் தந்தை முத்துகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் மாணவியை கடத்திய ரஞ்சித் கடந்த 27.1.2016-ல் சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
நான் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறேன். எனக்கு மாணவி கவிதாவை தெரியாது, அவரை நான் கடத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதேபோல் ரஞ்சித்தின் தந்தை நடராஜன், தாயார் பாப்பாத்தி ஆகியோரும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 29.01.2016 -ல் ஆஜராகி, எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. அந்த மாணவியை நாங்களோ எங்களது மகனோ கடத்தவில்லை என்று வாக்குமூலம் அளித்தனர்.
இதனால் மாயமான மாணவியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்ட கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினர் மாணவியின் தந்தை முத்து கிருஷ்ணனை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் தனது மகளை ரஞ்சித் கடத்தி சென்றதாகவும், அவரும் பெற்றோரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலம் கொடுத்து விட்டதாகவும் கூறினார்.
மேலும் ரஞ்சித்தின் செல் நம்பரையும் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.
ரஞ்சித்தின் செல்போன் நம்பரை போலீசார் கண்காணித்தனர். இந்த எண் கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த குன்ன மங்களம் ஆணைப்பாறை பகுதியை காட்டியது.
இப்பகுதிக்கு சென்ற போலீசார் கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். அவரை கடத்தி சென்று சிறை வைத்திருந்த மாணவர் ரஞ்சித், தந்தை நடராஜன், தாய் பாப்பாத்தி ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் பல முறை கற்பழிக்கப்பட்டு இருப்பதும் இதில் கர்ப்பம் ஆனதால் கரு கலைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
4 பேரையும் போலீசார் கள்ளக்குறிச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாணவியை விழுப்புரம் மகளிர் காப்பகத்தில் தங்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
மாணவன் உள்பட 3 பேரையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மாணவி இன்று மீண்டும் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது சின்னசேலம் போலீசார் மாணவியை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது கோர்ட்டு விசாரணையில் தெரியவரும்.
Average Rating