கணவர் பயணம் செய்யும் உல்லாசக் கப்பலை அடைவதற்காக 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்திய 65 வயதான பெண்..!!
உல்லாசக் கப்பலில் தனது கணவர் பயணம் செய்வதாக எண்ணிய 65 வயதான பெண்ணொருவர் அக் கப்பலை அடைவதற்காக 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்தி களைத்த நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த உல்லாசப் பயணியான சுசான் பிரவுண் எனும் பெண்ணே இவ்வாறு கடலில் நீந்தினார். இப் பெண்ணும் அவரின் கணவரும் உல்லாசக் கப்பலொன்றில் பயணம் மேற்கொண்டனர். 32 நாட்கள் இப் பயணம் நீடிக்கவிருந்தது.
எனினும் 28 ஆவது நாளான கடந்த சனிக்கிழமையுடன் இவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் பிரிட்டனுக்குத் திரும்பிச் செல்வதற்குத் தீர்மானித்தனர்.
அதையடுத்து போர்த்துக்கலின் ஃபன்சால் துறைமுகத்தில் இவர்கள் இறங்கினர். பின்னர் பிரிட்டனின் பிரிஸ்டல் நகருக்குச் செல்வதற்காக பன்சால் நகர விமான நிலையத்துக்கு இவர்கள் சென்றனர்.
அவ் விமான நிலையத்தில் சுசான் பிரவுணுக்கும் அவரின் கணவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து தான் டெக்ஸியொன்றை பிடித்து மீண்டும் துறைமுகத்துக்குச் சென்று கப்பல் பயணத்தை தொடரப்போவதாக சுசானின் கணவர் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
சனிக்கிழமை மாலை, அந்த கடற்கரையோர விமான நிலைய வளாகத்தில் இருந்த சுசான் பிரவுண், மேற்படி கப்பல், விமான நிலையத்துக்கு சற்று தொலைவில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் சென்றுகொண்டிருப்பதை கண்டார். அக் கப்பலிலுள்ள தனது கணவருடன் இணைந்து கொள்வதற்காக நீந்தியே கப்பலை அடைவதற்குத் தீர்மானித்தார்.
இரவு 8 மணியளவில் தனது கைப்பையை மிதவை போன்று பயன்படுத்திக்கொண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் அவர் நீந்த ஆரம்பித்தார். சுமார் 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்திய அவர் களைத்துப்போன நிலையில் உதவி கோரி அழ ஆரம்பித்தார்.
ஞாயிறு அதிகாலை 12.20 மணியளவில் அங்கு வந்த மீன்பிடிப் படகொன்றிலிருந்த மீனவர்களால் சுசான் பிரவுண் காப்பாற்றப்பட்டார். கரையிலிருந்து 500 மீற்றர் தொலைவில் நீந்திக்கொண்டிருந்த நிலையில் அவர் மீட்கப்பட்டார்.
உடல்வெப்ப நிலை மிகக் குறைந்த நிலையில் அவர் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. டைட்டானிக் கப்பலிலிருந்து உயிர் தப்பிய பெண் போல் அவர் காணப்பட்டார் என மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை, சுசான் பிரவுணிடம் அவரின் கணவர் கூறியதைப் போன்று அவர் அக் கப்பலுக்குத் திரும்பிச் செல்லவில்லை. அவர் விமானம் மூலம் பிரிட்டனுக்குச் சென்றார் என்பது பின்னர் தெரியவந்தது.
Average Rating