ஹிஸ்புல்லா தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் பலி

Read Time:3 Minute, 24 Second

Israel.flag1.jpgஇஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர். 20 ஆண்டுகளில் ஒரே நாளில் இவ்வளவு இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை என்பதால் இஸ்ரேலுக்கு இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 15 நாட்களைத் தாண்டியுள்ள நிலையிலும் இஸ்ரேலின் வேகமும், வெறியும் குறைவது போலத் தெரியவில்லை. தொடர்ந்து தனது தாக்குதலை உக்கிரப்படுத்தி வருகிறது இஸ்ரேல்.

அதே நேரத்தில் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், ஹிஸ்புல்லா படையினர் மிகத் தீவிரமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தெற்கு லெபனானில் நுழைந்துள்ள இஸ்ரேல் படையினருக்கு மிகப் பெரிய அழிவு காத்திருக்கிறது என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நசருல்லா தொலைக்காட்சியில் அறித்த அடுத்த சில மணி நேரத்தில் 13 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். 25க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். இதனால் இஸ்ரேலியப் படைகள் தற்காலிகமாக பின் வாங்கின.

இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹிஸ்புல்லா படையினர் கொரில்லா தாக்குதலை நடத்துவதோடு இஸ்ரேல் நாட்டின் வட பகுதிகள் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கி வருகின்றனர்.

ஹிஸ்புல்லா படையினரின் தாக்குதலால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹிஸ்புல்லா படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் விமானப் படையினரின் தொடர் தாக்குதல்களில் பெய்ரூட் வடக்குப் பகுதியில் உள்ள தகவல் தொடர்பு கோபுரங்கள், வானொலி ஆகியவை தகர்க்கப்பட்டன. மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 3 லாரிகளையும் இஸ்ரேல் படைகள் தாக்கி துவம்சம் செய்தன. இதில் 2 லாரிகளின் டிரைவர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 16 நாட்களாக நடந்து வரும் சண்டையில் 433 லெபனானியர்களும், 58 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் தரப்பில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா
Next post சிரியா, ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: