இந்தியர்களிடம் சிறுநீரகம் திருட்டு: இலங்கையில் பத்து பேர் கைது…!!
வர்த்தக நோக்கத்துடன் இந்தியர்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டதாக பத்துக்கும் அதிகமானவர்களை இலங்கை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்திய இளைஞர்களின் உடலில் இருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவது பற்றி கடந்த 2012-ம் ஆண்டு செய்திகள் வெளியாகின. அப்போது இதுபற்றி பரவலாக பேசப்படாத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனார் என தினேஷ்குமார் மாரோ(27) என்ற வாலிபரின் பிரேதம் இலங்கையில் இருந்து குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
தினேஷின் உடலில் இருந்த சிறுநீரகம் காணாமல் போய் இருந்ததை அறிந்த குஜராத் போலீசார் திடுக்கிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இந்தியர்களிடம் சிறுநீரகம் எடுக்கப்படுகிறது எனும் பகீர் தகவல் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இவ்வகையிலான ஆபரேஷன்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிறுநீரகம் செயலிழந்த இந்திய நோயாளிகள் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள மருத்துவமனைகளில் சேருவதும், அறுவை சிகிச்சை மூலமாக அவர்களுக்கு இந்தியர்களின் சிறுநீரகம் பொருத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாற்று சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகள், ரூ.60 லட்சம் வரை அளித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஐதராபாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரஜாபதி மற்றும் அவனது 2 நண்பர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சுரேஷிடம் நடத்திய விசாரணையில், ‘நோயாளிகளுக்கு உதவும் பணியாளர்களாக சிறுநீரகம் கொடையாளிகள் இலங்கைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 6 டாக்டர்கள் இதுபோன்ற சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள். இதுவரை 60 சிறுநீரகம் திருடப்பட்டது. இதில் எனக்கு 30 லட்சம் ரூபாய் கமிஷன் கிடைத்தது’ என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
இலங்கை மருத்துவமனைகளில் இந்தியர்களிடம் சிறுநீரகம் எடுக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக வெடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலங்கையில் வெளிநாட்டவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தற்காலிகமாக நிறுத்தும்படி இலங்கை அரசு உத்தரவிட்டது.
மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்படி இரண்டு பெண் டாக்டர்கள் அடங்கிய மூவர் குழுவை நியமித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் நடத்திய விசாரணையின் விளைவாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சில மருத்துவமனைகள் இந்த சிறுநீரக திருட்டுக்கு துணை போனதாக தெரியவந்தது, இந்நிலையில், இந்த மோசடி கும்பலை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், சில டாக்டர்களும் விரைவில் சிக்குவார்கள் எனவும் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Average Rating