ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவி”யின் வரலாறு.. (பாகம்-1)
தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.
தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார்.
இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார்.
அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப் பட்டார்.
2013இல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார் தமிழினி. 2014இல் புற்றுநோய்க்குள்ளாகி மரணமடைந்தார்.
போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் அதிக ஈடுபாட்டோடு இருந்த தமிழினியின் பல கட்டுரை களும் கதைகளும் கவிதைகளும் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன.
சிறையிலும் சிறை மீண்ட பின்னரும் அவர் எழுதியவை தனி நூல்களாக வெளிவரவுள்ளன. புலிகளின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனையையும் தன் சாட்சியமாக இந்த நூலின் வழியாகத் தமிழினி தந்திருக்கிறார்.
என்னுரை (தமிழினி தன்னுரையில்)
எனது போராட்டப் பயணத்தின் நினைவுகளை யும் அது எனக்குப் பெற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறேன்.
இது முழுமை யான வரலாறு எனக் கூற முடியாது. எனக்கு நினைவு தெளிந்த காலத்திலிருந்து கரைபுரண்டோடிய காட்டு வெள்ளமாகப் போருக்கூடாக அடித்துச் செல்லப்பட்ட வாழ்வின் கணங்களை அச்சொட்டாகப் பதிவு செய்தல் அப்படி இலகுவான காரியமாக எனக்குத் தென்பட வில்லை.
இருப்பினும் நினைவழியாத் தடங்களாக நெஞ்சுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பைக் கொஞ்சமாக வெளியேற்றியுள்ளேன். அவ்வளவுதான்.
எதற்காக இதனை எழுத வேண்டும் என என்னிடமே பல தடவை கேட்டுக்கொண்டேன். ஒரே பதில்தான் என்னை உந்தியது. நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.
ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் உலகமே அதிர்ந்துபோன கேள்வி இது.
போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன்.
போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன்.
நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம்.
இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது.
எதையுமே நம்பாதவர் களாக, எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவர்களாக, தமக்குள்ளேயே சிறுத்துப்போகிறவர்களாக, யதார்த்த உலகத்தை வெற்றிகொள்ள முடியாதவர்களாகப் பின்னடித்துப் போகிறார்கள்.
முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்ட யுத்தத்தின் வடுக்களை இன்னமும் எமது சந்ததி தமது மனங்களில் சுமக்கிறது.
எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை.
இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன்.
இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக் கூடாது. எந்த அன்னையர்களும் தனது பிள்ளையைப் பெற்றெடுத்த வயிற்றிலும், பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டியிலும் அடித்துக்கொண்டு அழக் கூடாது.
எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும்.
போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.
கடந்த காலத்தின் பாடங்கள் எமது சந்ததியை ஆரோக்கிய மான, வெற்றிகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
இந்த நாட்டின் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் நான் சொல்ல நினைக்கின்ற செய்திகளை எந்தளவுக்குச் சரியாகச் சொல்லியிருக்கிறேன் எனத் தெரியவில்லை.
ஆனால் அதற்காகப் பெரிதும் முயன்றிருக்கிறேன். எனது மாணவப் பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான காரியத்தை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடுதான் போராளியாக மாறினேன்.
எனது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன.
அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.
அந்த வகையில் எனது இறுதிக் காலம்வரை எனது எனது போராட்டம் தொடரும். போருக்கான பாதையைவிடக் கடினமானது உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன்.
எத்தனை தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும் என்பதற்கான முன்முயற்சியை இந்தப் புத்தகம் உணர்த்தும். மானுட நேயமும் உண்மையான சமூகப் பற்றும் கொண்ட ஆயிரமாயிரம் சமாதானப் போராளிகள் என்னுடன் கைகோத்து நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் கைகளை உயர்த்துகிறேன்.
Average Rating