திருச்சியில் நிலத்தகராறில் வெல்டிங் பட்டறை அதிபர் தலை துண்டித்து படுகொலை: சுடுகாடு அருகே உடல் மீட்பு…!!
திருச்சி காஜாமலை குடுமியான் சாதிக் தெருவை சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 35). இவரது மனைவி குர்சித்பானு. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். காஜா உசேன் திருச்சி காஜாநகர் பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21–ந்தேதி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவரது மனைவி குர்ஷித்பானு மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்காததால் திருச்சி கே.கே.நகர் போலீசில் 22–ந்தேதி குர்ஷித் பானு புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் குர்ஷித்பானு தனது கணவருக்கும் காஜாநகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகவும் அவர் தான் தனது கணவர் ஹாஜா உசேனை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்றும் புகாரில் கூறி இருந்தார்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாயமான காஜா உசேனை உடனே கண்டு பிடிக்க கோரி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
காஜா உசேன் மாயமான அன்று அவருடன் இருந்ததாக கூறப்படும் நபர்களை தேடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்றிரவு போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் காஜா உசேன் பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு அவரை பற்றி எதுவும் தெரியாது என கூறினார். போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் காஜா உசேனை கடத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சம்பவத்தன்று காஜா உசேனை அழைத்து சென்று மது குடித்ததாகவும், அதன் பிறகு அவரை கத்தியால் குத்தி கொலை செய்து கழுத்தை அறுத்து கொன்று விட்டதாகவும் கூறினார்.
காஜா உசேன் உடலை எங்கே என்று கேட்டபோது, உடலை திருச்சி ஓயாமாரி சுடுகாடு அருகே காவிரி ஆற்றின் கரையில் புதர் பகுதியில் வீசி விட்டதாகவும் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் இன்று காலை ஓயாமாரி சுடுகாடு பகுதிக்கு சென்றனர்.
போலீசாருடன் அந்த வாலிபரும் அழைத்து செல்லப்பட்டார். அங்கு காஜா உசேன் உடலை தேடினர். அப்போது புதருக்குள் தலையில்லாமல் ஒரு உடல் கிடந்தது. உடலில் கத்தி குத்து காயங்கள் இருந்தது.
அவரது உடல் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் தலை தனியாக கிடந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர். அவற்றை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காஜா உசேன் கொலை செய்யப்பட்டு உடல் மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
காஜா உசேன் அதே பகுதியில் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating