புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன?: வெளிவராத உண்மைகள்..: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’…!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்ட குறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன்.காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
புத்தகத்தின் சில பகுதிகள்
தலைவரைப் பற்றியது :-
“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம்.
அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக் கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்;
“மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும்.
நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை, இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்க வேணும்” என்று குறிப்பிட்டார்.”
தமிழினியின் கருத்தாக:-
“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார்.
அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதியுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது.
2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது.
புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “
எதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி::-
“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப் பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப் போல சுதாகரித்துக் கொண்டேன்.
சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார்.
அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன், கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிகஇலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது.
அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட போது, இவரும் கலந்து கொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு மிகஇயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது.
அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிளிநொச்சியின் சந்துபொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்
யுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான்:-
மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;
“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள்.
இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான், அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப் போகுது,
யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழுமுயற்சிகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை.
உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்து விடுங்கள் என்பதை கூறுவதற்காகத் தான்”.
அத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒருவார்த்தை கூறப்படவில்லை.
பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை.
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-
விதுஷா தமிழினியிடம் கூறியது :-
“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால் தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா.
”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”
“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார்.
“அண்ணையே இப்பிடிச் சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச்சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீரமரணத்தைத் தழுவினான்..
Average Rating