தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலி சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு
தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து இருக்கிறது. தொடரும் மழை தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு 27 பேர் பலியாகி இருந்தனர். மேலும் 21 பேர் மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டும், மின்சாரம் தாக்கியும் பலியானார்கள். இதன்காரணமாக மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. சென்னை சென்னை மதுரவாயல் பகுதியில், கூவம் ஆற்றை கடந்து சென்ற 2 பேரை வெள்ளம் இழுத்து சென்றது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் (வயது 40), கோல்டுகோஸ்பா (25) ஆகிய அந்த 2 பேரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபோல மீஞ்சூர் அருகே ஆமுல்லைவாயல் தரைப்பாலத்தை கடந்த கோபிநாத் (21) என்பவரை வெள்ளம் இழுத்துச் சென்றது. மணலிபுதுநகர் பகுதியில் ராணி (45) என்பவர் வீட்டுபால்கனி இடிந்தும், காஞ்சீபுரம் அருகே மண்சுவர் இடிந்து மேற்குவங்காளத்தைச் சேர்ந்த போர்த்திப் (25) என்பவரும் இறந்தனர். செங்குன்றத்தில் மின்சாரம் தாக்கி சாய்ராம் (6) என்ற சிறுவனும், பூந்தமல்லியில் கால்வாயில் தவறி விழுந்த ராஜீவன் (35) என்பவரும் பலியானார்கள். ராஜீவன் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
கட்டிடம் இடிந்து விழுந்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியம்மன்பட்டி, ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவருக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அருகில் பாழடைந்த நிலையில் இருந்த விசைத்தறி கூடத்தில் நின்று கொண்டிருந்தார்.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பல ஆண்டுகளாக பூட்டியிருந்த விசைத்தறி கூடம் முதியவர் ஆறுமுகம் மீது சரிந்து விழுந்து அமுக்கியது. இதில் அவர் பரிதாபமாக செத்தார்.
வீடு இடிந்து 3 பேர் சாவு
கோவை மாவட்டம் உடுமலை ஏரிப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து நாகராஜ், பிரபு ஆகிய 2 வாலிபர்களும், ஆணைமலையில் வீடு இடிந்து ரஞ்சித்குமார் என்பவரின் ஒரு வயது மகன் ஆர்த்திக்கும் பலியானார்கள்.
திண்டுக்கல்
தொடர் மழைக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் ராஜீவ்காந்தி நகர் அருளானந்தம் (வயது 19), அய்யலூரை சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி (10), ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாயாண்டி (65) ஆகிய 3 பேர் பலியானார்கள்.
இதற்கிடையே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மேலும் 3 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அழகாபுரியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் தாயும், மகனும் பலியானார்கள்.
சிறுவன் பலி
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சிவா (வயது 12) விளையாடி கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தான்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த மூக்கன் (58) என்பவர் உய்யகொண்டான் வாய்க்காலுக்கு குளிக்க சென்றபோது வாய்க்காலில் அதிக அளவில் வந்த வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்தார்.
விழுப்புரத்தில் 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் சரஸ்வதி என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
மயிலம் அருகே உள்ள கொளப்பாக்கத்தை சேர்ந்த மாரிமுத்து (65) என்பவர் கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், கொங்கம்பட்டை சேர்ந்த பஸ் டிரைவர் சொக்கலிங்கம் (50) மலட்டாற்றில் அடித்து செல்லப்பட்டும் இறந்தனர்.