முன்னாள் தலைமை நீதிபதி எனக்கு எதிராக சதி செய்தார் முஷரப் கூறுகிறார்
நான் அரசியல் சட்டப்படி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படாமல் தடுப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி, அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தார் என்று அதிபர் முஷரப் குற்றஞ்சாட்டினார். விழாவில் பேசிய முஷரப் பாகிஸ்தானி அமெரிக்கன் பொது விவகார குழுவின் 18-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு முஷரப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியும், அவர் மீது ஜனாதிபதி அலுவலகம் கூறிய ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை தூக்கி எறிந்து விட்டு, அவரை மீண்டும் பதவியில் அமர்த்திய 13 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கலீல் உர் ரெக்மான் ராம்டே ஆகியோர் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள். ஜெனீவாவில் சந்திப்பு நான் அரசியல் சட்டப்படி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படாமல் தடுப்பதற்காக அவர்களும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சவுத்ரி ஐட்டாஸ் அக்சான் ஆகியோரோடு சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்கள். இப்திகார் சவுத்ரியும், கலீல் உர் ரெக்மானும் ஜெனீவா நகரில் சந்தித்து பேசினார்கள். ஜனநாயகத்தை முடக்க அவர்கள் சதித்திட்டம் தீட்டினார்கள். தனியார் மயமாக்கத்துக்கு எதிராக உருக்கு ஆலைகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் நீதிபதி இப்திகார் சவுத்ரி தீர்ப்பு கூறுவதற்கு முன்பு, அவர் ராணுவ செயலாளருக்கு டெலிபோன் செய்து, இந்த பிரச்சினை பற்றி என்னை சந்தித்து பேசுவதற்கு விரும்புவதாக கூறினார். அப்போது நான் சட்ட பிரச்சினைகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றும், இது பற்றி அரசு வழக்கறிஞரிடம் பேசும்படியும் கூறினேன். அடுத்த நாள் அவர் என்னை சந்திக்க வந்தார். அப்போது அரசு வக்கீலும் என்னுடன் இருந்தார். அப்போது அவரிடம் தனியார் மயமாக்குவதுதான் அரசின் பொருளாதாரக் கொள்கை என்று கூறினேன். அடுத்த நாள் தலைமை நீதிபதி சவுத்ரி, அரசாங்க உருக்காலைகளை தனியார் மயமாக்குவது வெளிப்படையாக இல்லை என்று கூறியதோடு, தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். அவரது இந்த தீர்ப்பு காரணமாக நம் நாட்டுக்கு வரவேண்டிய வெளிநாட்டு முதலீடு வராமல் போனது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 5 டன் உருக்கு உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருந்தனர். இந்த தீர்ப்புக்கு பிறகு அவர்கள் அந்த திட்டத்தை கைவிட்டனர். இதன் மூலம் நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் தலைமை நீதிபதி ஊழல் பேர்வழியாக இருந்தார்.
நிர்வாகத்தில் தலையிட்டார்
அவர் நிர்வாக விஷயங்களில் தலையிட்டார் என்றும், பல்வேறு ஐகோர்ட்டு விவகாரங்களில் தலையிட்டார் என்றும் பல இடங்களில் இருந்தும் எனக்கு புகார்கள் வந்தன. அவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளை அவமானப்படுத்தினார். உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரிகளை கேவலப்படுத்தினார். எந்த வழக்கையும் அதன் தன்மைக்கு ஏற்ப முடிவு எடுக்காமல் பிறகாரணங்களின் அடிப்படையில் தீர்ப்பு கூறினார். அவர் மருத்துவ பில்களிலும், அவரது பாதுகாப்புக்கான பில்களிலும் முறைகேடு செய்து, கூடுதலாக அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்றார்.
நான் இப்திகாருடன் சமரசமாக செல்ல பெரும் முயற்சி எடுத்துக்கொண்டேன். எனக்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று பொது மேடைகளில் கூறினேன். அவரது தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்தார். ஊடகங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கின. இதனால் நாடு பலவீனமாகி வந்தது.
பதவி ஏற்க விடாமல் தடுத்தார்
57 சதவீத பாராளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டு என்னை ஜனாதிபதியாக தேர்ந்து எடுத்தபோதிலும் நான் பதவி ஏற்கவிடாமல் அவர் தடுத்தார். வெற்றியை அறிவிக்க தடை விதித்தார்.
இவ்வாறு முஷரப் கூறினார்.