இந்திய சிறைகளில் தூக்கு தண்டனைக்காக 1,150 பேர் காத்திருப்பு
இந்திய சிறைகளில் தூக்குத் தண்டனைக்காக சுமார் 1,150 ஆண் மற்றும் பெண் குற்றவாளிகள் காத்திருக்கின்றனர். இவர்களில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் அடங்குவர். கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது பொதுவான நடைமுறை. இது ஆங்கிலத்தில் கேபிடல் பனிஷ்மென்ட் அல்லது டெத்சென்டன்ஸ் என்றழைக்கப்படுகிறது. குற்றவாளிகளை கொடுமைப்படுத்தி சாகடிக்கும் இம்முறைக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்து அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கருத்தை பல நாடுகள் ஏற்று செயல்படுத்தி வந்தாலும், அமெரிக்கா, சீனா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இன்னும் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. ஈராக் அதிபர் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகள் சமீபத்தில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் தூக்கு தண்டனை முறை உள்ளது. இது மிக குறைந்த அளவிலேயே நிறைவேற்றப்படுகிறது. அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னர் விடுதலை போராட்டத் தில் ஈடுபட்ட பலரை ஆங்கில அரசு ஈவு, இறக்கமின்றி தூக்கில் போட்டது.
சுதந்திரத்துக்கு பின்னர் (1947) இதுவரை 55 பேர் தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1975 முதல் 1991 வரையில் மட்டும் 40 பேருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டில் சில வழக்குகளில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள சிறைகளில் தூக்கில்போடும் நாளை எதிர்நோக்கி சுமார் 1,150 பேர் உள்ளனர். இவர்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர், பீகார் 197, மகராஷ்டிரா 97 பேர். 40 பேர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர் இவர்களில் 3 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் உள்ளனர். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலை தூக்கில் போட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் பின்னர் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது. உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, ஜனவரி 10ல் கோவை சிறையில் தூக்கிலிட தேதி குறித்துள்ளது.
இதற்கிடையில் இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதுவும் தள்ளுபடி செய்யப்பட்டால், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவார்கள். க்ஷஇதுவும் டிஸ்மிஸ் செய்யப்பட்டால் மட்டுமே தண்டனை நிறைவேறும். இதற்கு குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுக்கு மேல் ஆகும் என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில், கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் செய்ததற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் சில ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.