சீனாவைத் தாக்க வருகிறது சூறாவளி: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Read Time:3 Minute, 2 Second

China.Flag.2.jpgதைவானில் இருந்து சீனாவை நோக்கி பலத்த சூறாவளி நகர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. ஃபியூஜியான் மாகாணத்துக்குள் அது செவ்வாய்க்கிழமை நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாகாணத்தைச் சேர்ந்த 4 லட்சத்து 35 ஆயிரம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு சீன அரசு கொண்டு சென்றுள்ளது.

அந்த சூறாவளிக்கு “கேமி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதனால், தைவானில் பெரும் மழை பெய்ததுடன் பலத்த சூறைக்காற்றும் வீசி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அது மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் சீனாவை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.

அது சீனாவுக்குள் நுழையும் முன்னரே, சீனாவின் கடலோர மாகாணங்களில் 117 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுவதுடன், பலத்த மழையும் பெய்துவருகிறது.

எனவே, சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தில் “கேமி’ சூறாவளியால் பெரும் சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பல லட்சம் பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனக் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த 44 ஆயிரம் மீன்பிடிப் படகுகளும் கரைக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

“கேமி’ சூறாவளி தாக்கும் பட்சத்தில், பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 3000-க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்துக்குள் நுழையும் அச் சூறாவளி, அப் பகுதியைக் கடந்து செல்ல 24 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அங்கிருந்து அருகில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்துக்குள் சூறாவளி நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் சீனாவைத் தாக்கும் ஐந்தாவது சூறாவளியாகும் இது. “பிலிஸ்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி, சீனாவின் கிழக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளைக் கடந்த வாரம் தாக்கியது. அதில் 612 பேர் பலியானார்கள்; 200 பேரைக் காணவில்லை. எனவே, சீன அரசு தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அழைத்து வரப்படவில்லை; இழுத்து வரப்பட்டேன்- நீதிமன்றத்தில் சதாம் ஆவேசம
Next post திரிகோணமலையில் இலங்கை இராணுவம் வான்வழித் தாக்குதல்