அவினாசி அருகே கள்ளக்காதலியின் மகனை தீர்த்துக் கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது…!!
அவினாசி வைத்தியன் குட்டையை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 37). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களுக்கு ஆதிகேசவன் (8) என்ற மகனும், அபிநயா (3) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவர்– மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பத்மாவதி ஈரோடு மாவட்டம் நம்பியூர் மேட்டூர்பாளையத்தில் மகள் அபிநயாவுடன் வசித்து வந்தார். கணவர் வைத்தியன்குட்டையில் மகனுடன் வசித்து வருகிறார். மகன் ஆதிகேசவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் பத்மாவதிக்கும் சத்தியமங்கலம் உக்கரத்தை சேர்ந்த குமரேசனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தன்ராஜ் அடிக்கடி அபிநாயவை சந்திக்க மேட்டூர்பாளையத்துக்கு சென்று வருவார். குழந்தைகளுக்காக சேர்ந்து வாழவேண்டும் என்று முடிவுக்கு வந்தனர்.
இந்நிலையில் சிறுவன் ஆதிகேசவன் திடீரென மாயமானான். சிறுவன் மாயமானது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.
இதற்கிடையே சிறுவன் கீழ்பவானியில் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறுவனின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பத்மாவதியின் கள்ளக்காதலன் குமரேசன் மற்றும் அவரது நண்பர்கள் சண்முகசுந்தரம் (23), கார்த்திக் (21), ரவி ஆகியோர் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குமரேசன் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கொலை குறித்து போலீசில் குமரேசன் கூறியபோது, எனக்கும் தன்ராஜின் மனைவி பத்மாவதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அவர்கள் குழந்தைகளுக்காக சேர்ந்த வாழ முடிவு செய்த விபரம் எனக்கு தெரியவந்தது. குழந்தையை கொன்று விட்டால் மீண்டும் அவர்கள் ஒன்று சேரமுடியாது என்று நான் நினைத்தேன்.
இது குறித்து எனது நண்பர்கள் சண்முகசுந்தரம், கார்த்திக், ரவி ஆகியோருக்கு தெரியப்படுத்தினேன். அவர்களும் எனக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.
அதன்படி ஆதிகேசவனை கடந்த 11–ந் தேதி வேனில் கடத்தினோம். வேனை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலம் பவானி ஆற்றுக்கு சிறுவனை கடத்தி சென்றோம். அங்கு சிறுவனை சாப்பிட வைத்தோம். பின்னர் ஆதிகேசவனின் தலையை நானும் காலை மற்றொருவர் பிடித்து தண்ணீரில் மூழ்கடித்தோம். அவன் சாகும் வரை தண்ணீருக்குள் பிடித்துக் கொண்டோம்.
சிறுவன் இறந்த பின்னர் ஆற்றில் உடலை போட்டுவிட்டு தப்பிவிட்டோம் என்றனர். இதனையடுத்து கள்ளக்காதலன் குமரேசன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Average Rating