களத்துக்கு வெளியே, குஸ்தி போடும் சீமான்.. -தெய்வீகன்…!!
ஈழத்தமிழர்களின் தற்போதைய அரசியல் இருப்பு எனப்படுவது, உள்நாட்டில் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்கு அப்பால், வெளிநாட்டு ஆதரவு நிலைகளிலும் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையும் தேவையும் ஆகும்.
முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தை முதன்நிலை பேரம் பேசும் சக்தியாகக் கொண்டிருந்த தமிழர் தரப்புக்கு, 2009க்குப் பின்னர், அரசியல் சக்தியே தஞ்சம் என்றாகி விட்டது.
வெளிநாட்டு ஆதரவுப் போக்குகளை இயன்றளவு தம்வசப்படுத்திக் கொள்வதில்தான் கணிசமான முன்னேற்றங்களை சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழர் தரப்பு, கடந்த ஏழு வருடங்களாக, மக்கள் ஆணையுடன் இந்த வெளிப்படையான அரசியல் சூத்திரத்தினை மையமாகக் கொண்டுதான், தனது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதில் எவ்வளவு தூரம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதெல்லாம் விவாதத்துக்குரியது.
இந்தப் பத்தியின் நோக்கம், அது பற்றி ஆராய்வதல்ல என்பதனால், அதனைத் தவிர்த்து அடுத்த விடயத்துக்குச் செல்லலாம்.
தங்களுக்கான ஆதரவுக்கு வேணவா கொண்டிருந்த ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருந்த காலப்பகுதியில், தமிழகத்தில், நாம் தமிழர் கட்சி என்ற அமைப்பின் ஊடாக எழுச்சி கொண்ட சீமான் மேற்கொண்ட போராட்டங்களும் ஈழத்தமிழர்களுக்காக சிறை சென்ற அவரது தியாகங்களும், பல தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்திருந்தமை யாவரும் அறிந்ததே.
சம்பிரதாயபூர்வமான அரசியல் கட்சியாகச் செயற்படாமல், புரட்சிப்பாதையில் பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களை எழுச்சி பெறச்செய்து, அவர்களை ஈழத்தமிழர்களின் ஆதரவு சக்தியாக மாற்றிய பங்கு, சீமானுக்கு நிறையவே இருந்தது.
உண்மையைச் சொல்லப் போனால், ராஜீவ் காந்தி படுகொலையுடன் தமிழகத்தில் வெளிப்படையாக அடங்கிப்போன ஈழத்தமிழர் ஆதரவுப்போக்கு, 2009 போர் முடிவடையும் தறுவாயில், இயல்பாகவே பரிவுநிலையை அடைந்து அறச்சீற்றமாக வெடித்தது.
பொதுமக்களின் பேரழிவைக் கண்டு, தமிழக மக்கள் ஆற்றொணா துயரடைந்தனர். அந்தக் கொதிநிலையை, ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சித் தீயாகக் கொழுந்துவிட்டு எரியச் செய்ததில் சீமான் பெரும்பங்கு வகித்தார்.
போர் முடிவடைவதற்கு முன்னர், விடுதலைப் புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு, சினிமாவில் இருந்து பெயரும் செல்வாக்கும் மற்றும் மிகப்பெரிய சொத்தான மக்களை கவரும் பேச்சாற்றல் ஆகியவை, தமிழகத்தில் திடீர் அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்று, மக்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்கினைச் சீமான் பெற்றுக் கொள்வதற்கு உதவி புரிந்தது.
தசாப்தங்களாக ஆட்சிபுரிந்து வந்த திராவிடக் கட்சிகளையும் மதவாத மற்றும் சாதியக் கட்சிகளையும் மேவி, தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற பொதுவிதியின் ஊடாகப் பார்க்கப்பட்ட நிலையின் மீது, கணிசமானளவு தாக்கத்தை ஏற்படுத்தவல்ல தனியரசியலை சீமானால் ஏற்படுத்த முடிந்தது என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
பொதுவெளியில் முன்னெடுக்கும் எந்தக் காரியத்துக்கும் ஆரம்பம் முக்கியமல்ல. அது எவ்வளவு காலம் எந்த பாதையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். அது சீமானின் அரசியல் முயற்சிக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
ஒரு புரட்சி இயக்கமாக ஆரம்பித்த நாம் தமிழர் என்ற அமைப்பு, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் அழிவுடன், அந்த அமைப்பைப் பிரதியீடு செய்யும் அரசியல் இயக்கம் போல செயற்படத் தொடங்கியது.
சீமானை, கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் தளபதி போலவே அவரது அமைப்பினர் முன்னிறுத்த முற்பட்டார்கள். அதனை அவரும் விரும்பினார். அவரது தொண்டர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் போலவே சீருடை தரித்த போராளிகளாக வளர்த்தெடுக்க சீமானும் ஆசைப்பட்டார். இவையல்லாம், ஒரு கால கட்டத்தில் இணையத்தை மொய்த்துக் கிடந்த காணொளிகள்.
ஆக மொத்தத்தில், சீமான் தலைமையிலான அவரது அமைப்பினர் மேற்கொண்ட இந்த கோமாளிக் கூத்துக்கள், ஈழத்தமிழர்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களை முகம் சுளிக்க வைத்தாலும், இதுவிடயத்தில் எவரும் அப்போது பொதுவெளியில் வெளிப்படையான கருத்துக்களை முன்வைக்கவில்லை.
ஏனெனில், தமிழகத்தில், ஈழத்தமிழர்களின் ஆதரவை எப்படியாவது கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஏக்கமும், தமிழகத்தின் ஊடாக மத்தியில் ஒரு தாக்கத்தை எற்படுத்தவல்ல சக்தியை எந்த உருவத்தில் கட்டியெழுப்பினாலும் ஈழத்தமிழருக்கு அது மிகப்பெரும் வெற்றியாக அமையும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட காரணத்தினாலும், இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, ஈழத்தமிழர் பிரச்சினையைத் தமிழகத்தின் வாக்கு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக மாற்ற வேண்டும் என்ற தேவையினாலும், ஈழத்தமிழர் தரப்பு எந்த மறுபேச்சும் இல்லாது சீமானின் நடவடிக்கைகளை அமைதியாக பார்த்து வந்தது.
ஆனால், தமிழர் தரப்பிலேயே 2009ஆம் ஆண்டுக்கும் பின்னர் போரின் அழிவால் சீற்றமடைந்தவர்களும் தொடர்ந்தும் வன்சக்தி ஒன்றின் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டவர்களும் அடிக்கு அடிதான் பதில் என்ற தத்துவ நம்பிக்கை கொண்டவர்களும், எந்த அடிப்படை விளக்கங்களும் இல்லாமல் சீமானைக் கொண்டாடினார்கள். அவரது வீரப்பேச்சுக்களில் சொக்கிப் போயிருந்தர்கள்.
சீமானின் பேச்சுக்களுக்கு தாங்கள் எழுப்பும் உரத்த கரவொலியைத் தங்கள் எதிரிக்கு வழங்கி பதிலடியாக நினைத்து இந்தக்கூட்டத்தினர் உள்ளுக்குள் திருப்தியடைந்து கொண்டார்கள்.
சீமான் தலைமையிலான கட்சியின் இந்தத் தொடர்கதை தொடர்ச்சியாக நகர்ந்து வந்து, இன்று தமிழகத் தேர்தலில் போட்டியிடப் போகின்ற அறிவிப்புடன் ஈழத்தமிழர்கள் மத்தியில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஈழத்தமிழர்களின் உரிமைகளை வெல்ல வேண்டும், பேரழிவுகளை சந்தித்து இன்னமும் போர் தின்ற காயங்களுடன் அந்தரித்துக் கிடக்கும் மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கை அமைய வேண்டும் என்ற சீமானின் நோக்கத்தை சந்தேகப்படுவதோ அல்லது அதனைக் கொச்சைப்படுத்துவதோ இந்தப் பத்தியின் நோக்கமல்ல.
ஆனால், அறிவிக்கப்பட்டிருப்பது தமிழகத் தேர்தல் என்பதை சீமான் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார் என்பதிலும், அதனை நோக்கிய தனது அரசியல் பாதையில் எவ்வளவுதூரம் தனது புரிதல் நிலையைக் கொண்டிருக்கிறார் என்பதும் தான் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன.
உலகமயமாதல் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத தனிமனித வாழ்வுநிலைக் கோட்பாட்டு விதி. அதனைத் தவிர்த்து யாரும் பயணிப்பதுமில்லை. அப்படியான பாதையை எவரும் வரித்துக் கொண்டு வெற்றி பெற்றதுமில்லை.
சீமானின் இன்றைய அரசியல் கோட்பாட்டு விளக்கங்களும், நாம் தமிழர் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் நோக்கும் தூய்மைவாதப் பிரகடனங்களும் மேடைப்பேச்சுக்கும் தேர்தல் பிரசாரத்துக்கும் அப்பால் என்ன சாதனைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பது தொடர்பில், அவர் வழங்கக்கூடிய விளக்கம் ஏதாவது உள்ளதா?
உதாரணத்துக்கு அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு வழங்கிய அண்மைய பதில்களை பார்ப்போம்…
இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் நீங்கள் முதல்வரானால் என்ன தீர்வினை முன்வைப்பீர்கள் என்று கேட்டதற்கு, ‘இலங்கை அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கா விட்டால், நான் இங்கு தமிழகத்திலுள்ள சிங்கள மக்கள் மீது கஞ்சா வழக்கும், பாலியல் வழக்குகளையும் சுமத்தி சிறையில் போடுவேன்’ என்கிறார்.
வேலைவாய்ப்புக் குறித்தும், இளைஞர்கள் வெளிநாடு செல்வது குறித்தும் பேசுகையில், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை அரச பணியாக்குவேன் என்கிறார். இப்படிப் பல…
வல்லரசாக மாறிவரும் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி வாய்ப்பு தனக்கே என்று, அவரது மொழியில் சொல்லப் போனால், போர்ப் பிரகடனம் செய்திருக்கும் சீமான், மேற்குறிப்பிட்ட பதில்களின் அடிப்படையில் தான் அரசியல் அனுபவமும் அதற்கு அப்பாலுள்ள வேறு விடயங்களில் புரிந்துணர்வும் கொண்டிருக்கிறார் என்றால் – இவரது கைகளில் ஈழத்தமிழர் விவகாரம் முழுமையாகச் சென்றடைந்தால் என்ன ஆகும்?
ஒரு விடயப்பரப்பின் மீது உணர்வு ரீதியாகக் கொண்டிருக்கும் ஆதங்கமும், நடைமுறை ரீதியாக அதைக் கையாளும் திறனும் வித்தியாசமானவை. வித்தியாசமாகத்தான் இருக்க வேண்டும்.
சீமான், தனது தேர்தல் பிரசாரத்தில் பேசும் விடயங்கள் அனைத்தையும், ஈழத்தமிழருடன் தான் பொருத்திப் பார்க்கிறார். தி.மு.க மீதான எதிர்ப்பு, காங்கிரஸ் மீதான எதிர்ப்பு, திராவிடக் கட்சிகளுக்கு எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்பு என்று சகலதிலும் ஈழத்தமிழர் விவகாரத்தை மையமாகக் கொண்டு அளவீடுகளை செய்கிறார்.
இது தமிழகத்தில் உள்ள சராசரி வாக்காளனுக்கு அவனது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்வளவு துணைநிற்கப் போகிறது, தராசே தவறாக இருக்கும் போது அதில் மேற்கொள்ளும் அளவீடு மட்டும் எப்படி சரியாக இருக்கப் போகிறது?
இதனை உணர்ந்து கொள்ளாதவரை சீமானின் செல்நெறியும் அவரது இலக்கை அடையப் போவதில்லை. அவரை பின்பற்றும் ஈழத்தமிழர்களின் நோக்கங்களும் நிறைவேறப் போவதில்லை.
Average Rating