ராசிபுரம் அருகே மினி லாரி கவிழ்ந்து மாணவன் உள்பட 2 பேர் பலி…!!

Read Time:6 Minute, 47 Second

10aa70ca-338b-42d6-9c02-fa398eef7cd7_S_secvpfநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என சுமார் 50 பேர் மல்லசமுத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டி பக்கமுள்ள கருமலையான் கோவிலுக்கு சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக மினி லாரியில் (ஈச்சர் லாரி) நேற்று இரவு புறப்பட்டு சென்றனர்.

மினி லாரியை பழனிவேல் என்பவர் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த மினி லாரி அத்தனூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது. நேற்று இரவு அவர்கள் சென்ற மினி லாரி ராசிபுரம்– வெண்ணந்தூர் சாலையில் பழந்தின்னிப்பட்டி கிராமம் எட்டிமரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் மினி லாரியை திருப்பியதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மினி லாரி சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் சென்றவர்கள் காயங்களுடன் அய்யோ, அம்மா என்று அலறினார்கள்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 9–ம் வகுப்பு மாணவன் பால்ராஜ் (14) என்பவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். விபத்தில் காயம் அடைந்த மருதுபாண்டியன் (26), பெரியம்மாள் (40) சசிகுமார் (20), குழந்தைவேல் (18) சிவகாமி (26), அரவிந்த் (9), ஹரிகரன் (9), பூங்கொடி (38), துரைமுருகன் (29), தமிழ்செல்வி (17), மல்லிகா (42), ரவிச்சந்திரன் (20), பெரியம்மாள் (40, காயத்திரி (13), வெள்ளையம்மாள் (32), அத்தாயி (30), ரத்தினம் (37), மஞ்சு (30), சத்தியா (16), வரதராஜன், நெடுஞ்செழியன் உள்பட 50 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ராசிபுரத்தில் சிகிச்சை பெற்ற சிலர் மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குழந்தைவேலு என்பவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

விபத்தில் இறந்த பால்ராஜின் உடலை பார்த்து அவனது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் காயம் அடைந்தவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு முதலில் கொண்டு வரப்பட்டனர். இதுபற்றி கேள்விப்பட்டதும் அத்தனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். காயம் அடைந்தவர்களை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் நேரில் சென்று விபத்தில் இறந்த மாணவனின் பெற்றோருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

காயம் அடைந்தவர்ளுக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை பி.ஆர்.சுந்தரம் எம்.பி. துரிதப்படுத்தினார். நாமக்கல் உதவி கலெக்டர் கண்ணன், தாசில்தார் சந்திரமாதவன், வருவாய் ஆய்வாளர்கள் பிரபாகரன், சக்திவேல் ஆகியோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

விபத்தில் காயம் அடைந்த 40–க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் ஓரிரு டாக்டர்களே பணியில் இருந்தனர். இதனால் அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்கள் இல்லாமல் போய்விட்டனர்.

போதிய டாக்டர்கள் இல்லாததை கண்டித்து காயம் அடைந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

விபத்து நடந்த இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விபத்திற்கு காரணமான மினி லாரி டிரைவர் பழனிவேல் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை…!!
Next post பாகிஸ்தானில் கடத்தப்பட்ட கவர்னரின் மகன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு..!!