கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் டாக்டர் சாமியாருக்கு 3-வது மனைவி ஆனார் போலீசில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்
சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னை பெண் டாக்டர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். என்னை யாரும் கடத்தவில்லை. சாமியாரும், நானும் திருமணம் செய்து கொண்டோம் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஓமியோபதி டாக்டர் சென்னை முகப்பேர் கலைவாணர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் போஜிராஜ். மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் திவ்யா (வயது 24). பூந்தமல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஓமியோபதி பயிற்சி டாக்டராக இருக்கிறார். போஜிராஜ் தன்னுடைய குடும்பத்தினருடன் மடிப்பாக்கத்தில் இருக்கும் மதுரைவீரன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். அங்கு பழனிச்சாமி என்பவர் சாமியாராக இருந்தார். தன்னிடம் வரும் பக்தர்களுக்கு அவர் குறி சொல்லி வந்தார். பழனிச்சாமிக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்துள்ளன. முதல் மனைவி சந்திராவுக்கு 21 வயதில் மகனும், 2-வது மனைவி மணிமேகலைக்கு 14 வயதில் மகனும் இருக்கிறார்கள்.
கடத்தியதாக புகார்
2 தினங்களுக்கு முன்பு போஜிராஜன் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் தனது மகளை சாமியார் பழனிச்சாமி ரிஷிகேசுக்கு கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாக புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சாமியார் பழனிச்சாமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில், போஜிராஜனின் மகள் திவ்யா ஜெ.ஜெ.நகர் போலீசில் தனது வக்கீலுடன் ஆஜரானார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தானே விரும்பி திருமணம் செய்து கொண்டுதான் சாமியாருடன் சென்றதாகவும் திவ்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
போலீசாரிடம் திவ்யா அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஈர்ப்பு ஏற்பட்டது
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடும்பத்தோடு, சாமியாரை பார்க்க சென்றிருந்தோம். அப்போதுதான் பழனிச்சாமியுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அடிக்கடி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று குறி கேட்டு வந்தோம். எனக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருந்ததால், சாமியார் பழனிச்சாமியுடன் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலுக்கு நான் மட்டும் அடிக்கடி தனியாக செல்ல தொடங்கினேன்.
சாமியாரும், நானும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். வீட்டில் சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதால், நாங்கள் இருவரும் கடந்த ஜுன் மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பது தெரிந்துதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். பழனிச்சாமி என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். எனவே நாங்கள் திருமணம் செய்தோம். அவர் மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் திருமணத்தை பதிவு செய்ய இருக்கிறோம்.
மயக்கவில்லை
நாங்கள் திருமணம் செய்து கொண்டது எங்களுடைய வீட்டுக்கு தெரியவந்ததால், நான் பிறந்த வீட்டை விட்டு என்னுடைய கணவருடன் சென்றேன். அவர் என்னை கடத்தி செல்லவில்லை. அவர் ரிஷிகேஷ் செல்ல விரும்பியதால் நானும் அவருடன் சென்றேன். அவர் என்னை மயக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. நானும் நன்கு யோசித்துதான் திருமணத்துக்கு சம்மதித்தேன். எனக்கு 24 வயதாவதால் என்னுடைய திருமண வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை எனக்கு உள்ளது. கணவருடன் சேர்ந்து ஆன்மீக பணியில் ஈடுபட போகிறேன். என்னை காணவில்லை என்று என்னுடைய பெற்றோர் புகார் கொடுத்திருப்பதால் நான் போலீஸ் நிலையத்துக்கு வந்தேன். என் கணவர் எங்கு இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு திவ்யா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
திவ்யா வந்த தகவல் அறிந்ததும், அவருடைய பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் திவ்யா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் கூறியதாவது:-
சாமியார் பழனிச்சாமியை தானே விருப்பப்பட்டு திருமணம் செய்ததாகவும், தன்னை கடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே இந்த சம்பவத்தில் சாமியார் பழனிச்சாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. 3 திருமணங்கள் செய்தது தொடர்பாக சாமியார் பழனிச்சாமியின் முதல் அல்லது இரண்டாவது மனைவிகளில் யாராவது ஒருவர் புகார் செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் கூறினார்.