மஹா சிவராத்திரி தினத்தில் மதுபானச் சாலைகள் மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டுப் புனிதம் பேணப்பட வேண்டும்..!!
சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக் கூடாது. இந்த விரதம் மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி தினத்தன்று ஒரு வேளை பகல் உணவுண்டு சிவராத்திரி தினத்தன்று இரவு நித்திரை செய்யாமல் எல்லாம் வல்ல பரம் பொருளான சிவனைப் பக்தியுடன் நினைந்து உள்ளன்புடன் வழிபட வேண்டும்.
கண் விழிக்க வேண்டும் எனும் காரணத்துக்காக சினிமாப் படம் பார்த்தோ அல்லது வேறு கேளிக்கை நிகழ்வுகளில் பங்குபற்றியோ இந்த விரதத்தை அனுஷ்டித்தல் மகாதவறு. சைவமக்களின் புனிதமான இந்நன்னாளில் மதுபானம் அருந்துதல், மாமிசம் உண்ணல், தீய சொற்கள் பேசுதல் என்பவற்றை அறவே தவிக்க வேண்டும். இவ் வருட மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் -07 ஆம் திகதி திங்கட்கிழமை உலக இந்துக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மகிமை வாய்ந்த இவ்விரத தினத்தில் அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும் அரசாங்க வர்த்தக விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இத்தினத்தில் யாழ்.குடாநாட்டில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் திறந்திருப்பது வழமை. இந்தச் செயற்பாடு தொடர்பில் சைவசமய அபிமானிகள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்குரிய முக்கியமான விரத தினத்தில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் யாவும் மூடப்பட்டுப் புனிதம் பேணப்பட வேண்டுமென்பது இந்து சமய குருமார்கள், இந்துசமய அமைப்புக்கள், இந்துசமய அபிமானிகள் ஆகியோரின் கருத்துக்களாகவுள்ளன. இது தொடர்பில் இந்து சமயக் குருமார்கள், இந்துசமயத் தலைவர்கள் ஆகியோர் எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்கள் வருமாறு,
நா.சர்வேஸ்வரக் குருக்கள் – சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானப் பிரதம குரு
எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமான் தெய்வங்கள் அனைத்திலும் மேலான சிறப்பு வாய்ந்தவராவார். சிவனுடைய விரதங்களுக்கு எல்லாம் தலையாயதும், மிகச் சிறந்ததும் மஹா சிவராத்திரி விரதமாகும். இந்த விரதம் அனைத்து விரதங்களிலும் மிகச் சிரத்தையாகவும், கண் விழித்து மனதை ஒரு நிலைப்படுத்தி வேறு கருமங்கள் தொடர்பில் சிந்திக்காது விரததினத்தில் இரவும், பகலும் இறைவன் கருணையையே சிந்திக்க வேண்டும். இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களும் இந்த விரத அனுஷ்டிப்பின் மூலம் பலன் பெறுவார்கள் .
ஆகவே இந்த விரத நன்னாளில் குறிப்பாக மதுபானச் சாலைகள், மாமிச விற்பனை நிலையங்கள் என்பன மூடப்பட வேண்டும். விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் நாமனைவரும் செயற்பட வேண்டியது அவசியம். சிவராத்திரி விரதத்தைத் திவ்வியமான அருள் விரதமாகக் கடைப்பிடிப்பதற்கும், எமது மண்ணிலும், மனதிலும் சிவப் பொலிவு ஏற்படவும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் இந்து சமய கலாசார அமைச்சும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சிவஸ்ரீ இ. சுந்தரேஸ்வரக் குருக்கள் – மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் ஆலயப் பிரதம குரு
மஹா சிவராத்திரி சைவ மக்களின் புனிதம் வாய்ந்த விரதமாகக் காணப்படுகின்றது. இந்தத் தினத்தில் சிவனுடைய காடாட்சத்தைப் பெறுவதற்காக உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள் பக்திபூர்வமாக விரதம் அனுஷ்டிப்பர். ஈழத்திலுள்ள சைவ ஆலயங்களில் குறிப்பாகச் சிவன், அம்மன் ஆலயங்களில் மஹா சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக நிகழ்த்தப்படும். சைவ ஆசார சீலர்களாக இந்தப் புனிதமான விரத்தை அனுஷ்டிக்க வேண்டிய தார்மீகக் கடமை ஒவ்வொரு சைவனுக்குமிருக்கிறது.
ஆகவே சிவனுக்குகந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமனைவரும் எமது முன்னோர்கள் காட்டிய வழியில் மதுபானம், புலால் உண்ணுதல், மாமிசம் உண்ணுதல் ஆகிய பாதகங்களைத் தவிர்த்து அன்றைய தினம் முழுமையான சிவ சிந்தனையுடன் கண் விழித்து விரதம் அனுஷ்டித்து அவனருளாலே அவன் தாள் வணங்கி எமது சமயத்தின் தனித்துவத்தை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்.
எனவே, இந்தத் தினத்தில் எமது மண்ணிலுள்ள மதுபானக் கடைகள், மாமிசக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு எமது சைவத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு தர வேண்டுமெனச் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை அன்பாகக் கேட்டுக் கொள்வதுடன், இந்துசமய கலாசார அமைச்சு மற்றும் அதிகாரிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்யா சுவாமிகள் – யாழ்.சின்மயா மிஷன் அமைப்பின் தலைவர்
சிவராத்திரி விரதம் சிவனுக்குரிய இராத்திரியாக சைவசமயத்தவர்களால் பக்திபூர்வமாக ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க்ப்படுகின்றது. இந்த விரத காலத்தில் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று கருவிகளாலும் பரம்பொருளான சிவபெருமானுடைய நாமங்களைச் சொல்லியும், அவனுடைய சிறப்புக்களைப் பாடியும், கேட்டும் எங்களுடைய செயல்களும் அவனுக்கு அர்ப்பணிப்புள்ளதாக பூஜைகள், பஜனைகள், கூட்டுப் பிரார்த்தனைகள், யாகங்கள், ஹோமங்கள் என அனைத்து வகையாலும் சிவனையே மையமாக வைத்து வழிபடப்பட வேண்டிய முக்கியமானதொரு நன்னாளாகும்.
அப்படிப்பட்ட மஹா சிவராத்திரி நன்னாளில் திருமூலரால் சிவபூமி எனப் போற்றி வர்ணிக்கப்பட்ட எங்களுடைய நாட்டிலே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வண்ணம் சிவ எழுச்சி ஏற்பட வேண்டும். சைவசமயத்தவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக முறைப்படி கண்விழித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு இடையூறான செயற்பாடுகளாகக் காணப்படும் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும். மாமிசம் உண்ணும் செயற்பாட்டை முற்றாக அன்றைய தினம் தவிக்கும் வகையில் மாமிச விற்பனை நிலையங்கள் அதிலும் குறிப்பாக இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும்.
சைவசமயத்துக்காக என்னாலான பணிகளை ஆற்றி வரும் ஒரு துறவியாகவும், சின்மயா மிஷன் அமைப்பின் சார்பாகவும் அடியேன் இந்தக் கருத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இது தொடர்பில் அரச உயர் மட்டத்தினரும், அதிகாரிகளும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சைவத் தமிழ் கலாசாரத்தின் மையப் புள்ளியாக விளங்கும் யாழ்.மண்ணிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும். சைவத்தின் காவலரான நாவலர் பெருமான், ஈழத்துச் சித்தர்களான யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமிகள் ஆகியோர் அவதரித்த புண்ணிய பூமியிலே சைவப் பெருமக்களுக்குரிய முக்கியமானதொரு திருநாளில் மதுபானச்சாலைகள் திறத்தல் மற்றும் மாமிச விற்பனை இடம்பெறுவது என்பன ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரும் அன்றைய தினம் எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானை சிந்தையிற் கொண்டு சிவ பேறை அடைவதற்கு முயல்வோமாக என்றார்.
செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்- சிவபூமி அறக் கட்டளையின் தலைவர்
உன்னதமான வழிபாட்டு நன்னாள் மஹா சிவராத்திரி விரதமாகும். உலகமெங்கும் வாழ்கின்ற சைவமக்கள் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கின்ற இந்த நன்னாள் தெய்வீகத் திருவருள் நிறைந்த சிறப்புடையதாகும். குறிப்பாக எங்கள் குடாநாட்டிலும், ஏனைய பாகங்களிலும் இந்த நாளில் மதுபானச்சாலைகள், மாமிசக் கடைகள் என்பன திறக்கப்படக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.
அனைத்து மக்களும் அன்றைய தினம் பக்தியோடு தீய எண்ணங்களை விடுத்து சிவ சிந்தனையை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். சைவ மக்களின் முக்கிய சிவ விரதமாகக் கருதப்படும் மஹா சிவராத்திரி நன்னாளில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் என்பன திறக்கப்படாதிருக்க வடக்கு மாகாண சபையும், மத்திய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சைவப் பெருமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என்றார்
Average Rating