எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை கொன்று நகை கொள்ளை…!!
சென்னையில் நேற்று நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ–ஆப்டெக்ஸ் அருகில் உள்ளது பாந்தியன் லேன். இங்கு மெயின் ரோட்டையொட்டி உள்ள ‘ராம் மேன்சன்’ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 9 மாடிகளை கொண்ட இக்குடியிருப்பில் மொத்தம் 61 வீடுகள் உள்ளன.
கலர்லேப், டெய்லர் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட நிறுவனங்களும் கீழ் தளத்தில் உள்ளன.
3–வது மாடியில் வசித்து வந்தவர் சாரதா (70) கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர், கடந்த ஓராண்டாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இவரது தம்பி திவாகர் மஸ்கட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் தான்யா. நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு துணையாக இருப்பதற்காகவே கேரளாவில் இருந்து சாரதா வந்துள்ளார். தினமும் காலையில் கல்லூரிக்கு புறப்பட்டுச் செல்லும் தான்யா, மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வருவார். பின்னர் மீண்டும் கல்லூரிக்கு செல்லும் அவர், இரவில்தான் வீடு திரும்புவார்.
நேற்று காலையிலும் தான்யா, வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். மதியம் சாப்பிடுவதற்கும் வந்துள்ளார். இதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் தான்யா வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
அதனை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது சாரதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாக காணப்பட்டார்.
இதைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த தான்யா கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அருகில் இருந்த கடைக்காரர்களும் அடுக்குமாடி குடியிருப்பில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தனியாக மூதாட்டி சாரதாவை மிகவும் துணிச்சலுடன் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
அவரது காதில் அணிந்து இருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் இருந்த நகைகளும் கொள்ளைபோனதாக தெரிகிறது. நகைக்காகவே சாரதா கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்தபோது சாரதா மட்டுமே தனியாக இருந்தார். மாணவி தான்யா கல்லூரிக்கு சென்று விட்டார். அதனால் அவர் கொலையாளிகளிடம் சிக்காமல் உயிர் தப்பினார்.
இது பற்றிய தகவல் இரவு 11 மணி அளவில் போலீசுக்கு தெரிய வந்தது. எழும்பூர் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் மனோகரன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கலிதீர்த்தான், எழும்பூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.
கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் எதிர்புரத்தில் ஏராளமான கடைகள் இருப்பதால் இரவில் நீண்ட நேரமானாலும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இதுபோன்ற ஒரு இடத்தில் நடந்துள்ள இத்துணிகர கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்து சென்று லிப்டில் ஏறும் பகுதியில் ஒரு கேமராவும், பின்புறத்தில் இன்னொரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் லிப்ட் பகுதியில் இருக்கும் கேமரா செயல்படாமல் உள்ளது. பின்புறத்தில் இருக்கும் கேமரா மட்டும் இயங்கி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் 2 காவலாளிகள் பணியில் உள்ளனர். ஷிப்ட் முறையில் இவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று இரவு தாமஸ் என்ற காவலாளி பணியில் இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேமராவில் பதிவாகி இருக்கும் நபர்களின் உருவத்தை காட்டி புதிதாக யாராவது வந்துள்ளார்களா? என்பது பற்றி காவலாளிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அருகில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களையும் போலீசார் போட்டு பார்த்தனர். ஆனால், அந்த கேமராக்களில், சாலைகளில் செல்பவர்கள் யாரும் பதிவாகவில்லை. கடைகளுக்கு வருபவர்கள் மட்டுமே பதிவாகும் அளவுக்கே கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கில் நீடித்து வருகிறது. இருப்பினும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
கொலை பற்றி துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
Average Rating