மனைவியின் பொய்ப்பல்லை அமெரிக்காவின் உளவு கேமராவாக நினைத்து, பயந்த பின்லேடன்..!!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2-5-2011 அன்று ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் ‘சீல்’ அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
அவனது சடலத்தை கடலின் நடுவே அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா அறிவித்தது. கொல்லப்பட்ட பின்லேடனின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய கோப்புகளை அமெரிக்க ராணுவத்தினர் அப்போது கைப்பற்றி இருந்தனர்.
அவற்றில் இருந்த ரகசிய தகவல்களில் சிலவற்றை அமெரிக்க அரசு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அதில் ஒரு கடிதத்தில் தன்னை அமெரிக்க அரசு மறைமுகமாக உளவுப்பார்த்து வருவதாக பின்லேடன் குறிப்பிட்டுள்ளான்.
கடத்தப்பட்ட பிணையக்கைதிகளை விடுவிக்க பணம் கொண்டுவரும் சூட்கேஸ்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகப்பட்ட பின்லேடன் பின்னர் தனது மனைவியை வைத்து அமெரிக்கா உளவுப் பார்ப்பதாகவும் சந்தேகித்துள்ளான். அப்படி, கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி விட்டுச் சென்ற ஒரு பணப்பெட்டியை அவனது பாதுகாவலர்கள் சம்மட்டியால் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதுதவிர, பின்லேடனின் மனைவியரில் ஒருத்தி, ஈரானைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவரிடம் மாற்றுப்பல் பொருத்திக் கொண்டுள்ளார். ஒரு கோதுமைமணி அளவு நீளத்திலும், ஒரு சேமியா அளவு அகலத்திலும் இருந்த அந்த பொய்ப்பல்லுக்குள் அமெரிக்க உளவுத்துறையினர் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தியிருப்பார்களோ..,? என்ற அச்சமும் பின்லேடனுக்கு இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கப் படையினரால் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவனுடைய 3 மனைவிகளும், குழந்தைகளும் பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான கைரிஷா சபீர் என்பவர் தான் பின்லேடன் பதுங்கி இருப்பது குறித்து அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தார் என்ற தகவல் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பின்லேடன் தனது இளைய மனைவி அமல் அகமத் அலி சாதாஹ் என்பவருடன் நெருக்கமாக இருந்ததே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த 3 மனைவிகளும் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது, பின்லேடனை காட்டிக் கொடுத்த விவகாரத்தில் மூத்த மனைவியின் மீது இளைய மனைவி ஆத்திரம் அடைந்து சிறைக்குள்ளேயே தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசியதுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டனர். இருவருக்கும் ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
Average Rating