திசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வாகநேரி என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி(வயது 48), விவசாயியான இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். திசையன்விளை சாலையோரத்தில் அவரது வீடும், சாலையின் மறுபுறத்தில் மாட்டு தொழுவமும் உள்ளன. இங்கு 5 மாடுகள் கட்டப்பட்டு இருந்தன.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக மலையாண்டி தொழுவத்திற்கு சென்றார். அப்போது தொழுவத்தின் வேலிக்கு பின்னால் சிறுத்தை புலி ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அப்போது அந்த சிறுத்தை உறுமியது.
மலையாண்டியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே சிறுத்தை அங்கிருந்து ஓடத் தொடங்கியது. இதற்கிடையே அங்கே பதுங்கியிருந்த சிறுத்தை குட்டி ஒன்றும் அதன்பின்னால் ஓடியது. சிறுத்தையும், குட்டியும் வாகநேரியில் இருந்து தேரிச்சாலை வழியாக ஓடியதாக அப்பகுதி கிராம மக்கள் கூறினர்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர் குட்டியுடன் சிறுத்தைப்புலி ஓடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தேரிக்காட்டில் முந்திரி பயிர் செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதிக்குள் அந்த சிறுத்தையும், குட்டியும் சென்றுவிட்டதாக தெரிகிறது.
அப்பகுதியில் கிராம மக்கள் திரண்டு சென்று பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடினர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்திரநாதன் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் மற்றும் வன உதவியாளர்கள் வாகநேரி கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு சிறுத்தைப்புலி, அதன் குட்டியின் கால் தடங்கள் மண்ணில் பதிந்து இருந்தன. அந்த தடங்களை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவை சிறுத்தைகளின் கால் தடங்கள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் வனத்துறையினர் தேரிக்காட்டில் சிறுத்தைகள் பதுங்கி உள்ளதா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இன்று 2–வது நாளாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு குட்டியுடன் திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிறுத்தைப் புலி நடமாட்டத்தை கண்காணிக்க மலையாண்டி வீட்டின் மாட்டு தொழுவத்தில் அதிநவீன காமிரா ஒன்றை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.
இதன் மூலம் சிறுத்தைகள் எந்த இடத்தில் நடமாடுகிறது என கண்காணித்து அங்கு கூண்டு வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறினர். மேலும் தேரிக்காட்டில் உள்ள நீர்நிலை பகுதிகளில் சிறுத்தைகளின் கால்தடங்கள் பதிந்துள்ளதா? எனவும் வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் தாய் சிறுத்தையும், அதன் குட்டியும் வெளியேறி இருக்கலாம். அங்கிருந்து மக்கள் கண்களில் படாமல் காட்டு வழியாக அந்த சிறுத்தைகள் நீண்ட தூரம் வந்து வாகநேரி பகுதிக்கு வந்திருக்கலாம், இரவில் இரைதேடி மாட்டு தொழுவத்திற்கு வந்தபோது கிராம மக்களின் கண்களில் அந்த சிறுத்தையும், குட்டியும் தென்பட்டுள்ளன என வனத்துறையினர் கூறினர்.
களக்காடு, முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி மற்றும் சிறுத்தைகள் உள்ளன. அப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திசையன்விளை பகுதிக்கு சிறுத்தைகள் வந்திருப்பது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வாகநேரி பகுதி பொதுமக்கள் கூறுகையில், சிறுத்தைகள் எங்கள் ஊருக்குள் புகுந்ததில் இருந்து எங்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் நாங்கள் சரியாக தூங்கவில்லை. சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டால்தான் எங்களுக்கு நிம்மதி ஏற்படும் என்று கூறினர்.
Average Rating