பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் முஷரப் ஒப்புக்கொண்டார்
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் உள்ள பஜாவூர் பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார்” என்று அந்த நாட்டு அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். பாகிஸ்தானில் தஞ்சம் சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தஞ்சம் புகுந்து இருந்தார். அவரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலீபான் ஒப்படைக்க மறுத்ததால் அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தி தலீபான் ஆட்சியை கவிழ்த்தது. இதை தொடர்ந்து, தலீபான்களும் அல்கொய்தா தீவிரவாதிகளும் அண்டைநாடான பாகிஸ்தானில் புகுந்தனர். அவர்களுடன் சேர்ந்து பின்லேடனும் பாகிஸ்தானில் புகுந்தார். அந்த நாட்டில், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர். பழங்குடி இன மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். முஷரப் ஏற்க மறுப்பு அமெரிக்க உளவு நிறுவனங்கள் இதை கண்டறிந்து பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் என்று கூறின. ஆனால், இதை பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஏற்க மறுத்து விட்டார். “பாகிஸ்தானில் பின்லேடன் இல்லவே இல்லை” என்று சத்தியம் செய்யாத குறையாக முஷரப் கூறினார். ஆனால், அமெரிக்கா அவர் கூறியதை நம்ப வில்லை.
அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்கவும், பின்லேடனை பிடிக்கவும் பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்றே அமெரிக்கா கூறிவந்தது.
இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார்
இந்த நிலையில், பின்லேடன் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கிறார் என்பதை முஷரப் இப்போது ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதை அவர் ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
அவர் இதுபற்றி கூறுகையில், “பாகிஸ்தானில் பழங்குடிஇன மக்களில் ஒரு பிரிவினரான புஷ்டுன் மக்கள் அதிகம் வசிக்கும் குனார் மாநிலத்தில் உள்ள பஜாவூர் மாவட்டத்தில் தான் பின்லேடன் பதுங்கி இருக்கிறார்” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:-
மீண்டும் அமர்த்தப்பட மாட்டாது
நீக்கப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படமாட்டார்கள். நீதிபதிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. உறுதிமொழி எடுத்துக் கொண்ட நீதிபதிகள் பதவிகளில் இருக்கிறார்கள். எடுத்துக் கொள்ளாதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்து உள்ளது. உறுதிமொழி எடுத்துக்கொள்ள மறுத்தவர்களை ஏன் பதவியில் அமர்த்த வேண்டும். புதிய நீதிபதிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் நிலையை புரிந்து கொள்ளாத மேற்கத்திய உலகம், தேவை இல்லாமல் எங்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுகின்றன. மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் பாகிஸ்தானுக்கு வந்து இங்கு உள்ள நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் உண்மையை திரித்து கூறுகின்றன
ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ஊடகங்கள்தான் தீவிரவாதிகள் பக்கம் சேர்ந்து கொண்டு தேச பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன. உண்மையை திரித்துக் கூறுவதே ஊடகங்களின் வேலையாக உள்ளது. இறந்துபோனவர்களின் உடல்களை படம் பிடித்து காட்டுவதோடு, தீவிரவாதிகளை பேட்டி எடுத்து பிரசுரிப்பதோடு, சட்டத்தை அமல்படுத்துபவர்களை மோசமாக சித்தரிக்கின்றன. இந்தவகையில், அவை தீவிரவாதத்துக்கு ஊக்கம் அளிக்கின்றன.
நடத்தை விதிமுறைகளை ஊடகங்களுக்கு அனுப்பி அவற்றில் கையெழுத்து போடுமாறு கேட்டுக்கொண்டோம். ஒரே ஒரு சேனலை தவிர அனைத்து சேனல்களும் கையெழுத்திட்டன.
அமெரிக்க ஜனாதிபதி புஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அவருக்கு எதிராக எதையும் நான் சொல்ல முடியாது. அவர் உண்மையான நண்பர். பாகிஸ்தான் நிலைமையை அவர் நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறார்.
ஏற்றுக்கொள்ள முடியாது
பின்லேடனை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா தன்னிச்சையாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. அதேபோல அணுஆயுத ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றது தொடர்பாக பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி டாக்டர் ஏ.கிï.கானை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது. இந்த இரண்டும் பாகிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.
அன்னிய நாடுகளின் தலையீட்டை பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது தேவையும் இல்லை. பாகிஸ்தான் உளவு நிறுவனம் அமெரிக்க விவகாரங்களில் தலையிட்டால் அதை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
மேற்கத்திய நாடுகளுடன் உள்ள பிரச்சினை என்ன என்றால் அவர்கள் விரும்புவதை எல்லாம் வளரும் நாடுகளும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான். நாங்கள் அந்த அளவுக்கு சிறுவர்களா?
இவ்வாறு முஷரப் கூறினார்.