5 இந்திய வம்சாவளியினர் கைது தொடர்பாக 13 அமைப்புகள் மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை

Read Time:3 Minute, 54 Second

மலேசியாவில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மலேசியப் பிரதமருடன் 13 இந்திய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அதேவேளை கைதான இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மலேசியாவில் வசித்து வரும் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமை அளிக்கக் கோரி,இந்திய வம்சாவளியினர் கடந்த மாதம் 25 ஆம் திகதி கோலாலம்பூரில் தடையை மீறி பேரணி நடத்தினர். இந்நிலையில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்த இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த 5 பேர் மலேசிய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டனர். இச்சட்டப்படி, அவர்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் வைக்கப்படும் அபாயம் உள்ளது. கைதானவர்களில் இந்து உரிமைகள் நடவடிக்கை குழுத் தலைவர் பி.வேதமூர்த்தியின் சகோதரரும் அடங்குவார். வேதமூர்த்தி தற்போது லண்டனில் உள்ளார். இந்த நடவடிக்கையை மீறி அமைதிப் போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார். தங்கள் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவை திரட்டப்போவதாகவும் அவர் கூறினார். ஆனால், 5 பேரும் கைது செய்யப்பட்டதை பிரதமர் அப்துல்லா பதாவி நியாயப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது;

தங்கள் இனத்தை அழிப்பதாகவும் பாரபட்சமாக நடத்துவதாகவும் இந்திய வசம்சாவளியினர் கூறுவது, மலேசியாவின் நற்பெயரை பாதித்துள்ளது. இதனால், வெளிநாட்டு முதலீட்டையும் சுற்றுலா பயணிகளையும் கவர முடியாது. எனவே, இந்தியர்களின் குற்றச்சாட்டுகளை தேச துரோகமாக கருதலாம்.

மலேசியத் தமிழ் அமைச்சர் சாமிவேலுவும் இந்த கைது நடவடிக்கையை ஆதரித்துள்ளார்.

இதற்கிடையே, மலேசிய இந்தியர்களின் 13 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பிரதமர் அப்துல்லா பதாவியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கருத்துகளை பிரதமர் கேட்டறிந்தார். அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பல்வேறு இனத்தவரிடையிலான ஏற்றத்தாழ்வை சரிசெய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே கைதான இந்தியர்களுக்கு மலேசிய சட்டப்படி உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அமெரிக்க வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் சீன் மக்கார்மக் கோரிக்கை விடுத்துள்ளார். தனி நபர்கள் தங்கள் கருத்துகளை அமைதியான முறையில் தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 5 இந்தியர்கள் கைதை எதிர்த்து நீதிமன்றில் வழக்குத் தொடரப் போவதாக முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கர்பால்சிங் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வீடு திரும்பினாள் குழந்தை லட்சுமி
Next post விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!