2-வது மனைவியுடன் தகராறு; 4 வயது மகனை கடத்தி கொன்ற போலீஸ்காரர்
2-வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனையே போலீஸ்காரர் ஒருவர் கடத்தி கொன்ற பயங்கர சம்பவம் திருநின்றவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்து. திருநின்றவூரைச் சேர்ந்தவர் ராமன். ஆவடியில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உமா, வசந்தி என்ற 2 மனைவிகள். இவர்களை திருநின்றவூரிலேயே தனித்தனியாக வீடுபார்த்து குடிவைத்து இருந்தார். 2-வது மனைவி வசந்தி சாமிநகரில் வசித்து வந்தார். இவருக்கு 4 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்தான். கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி போலீஸ்காரர் ராமன், வசந்தி வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் தீபாவளி இனிப்பு வாங்கி தருவதாக கூறி விக்னேஷை போலீஸ்காரர் ராமன் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அதன் பிறகு சிறுவனை அவர் வீட்டில் கொண்டு போய் விட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தி திருநின்றவூர் கணவர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகனை கணவர் போலீஸ்காரர் ராமன் கடத்திச் சென்று விட்டார். தேடிக் கண்டுபிடித்து கொடுங்கள் என்று கூறியிருந்தார். மனைவி புகார் செய்த தால் போலீஸ்காரர் ராமன் தலைமறைவாகி விட்டார். இன்ஸ்பெக்டர்கள் ஆல்டிரின், ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரையும், சிறுவனையும் தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் ராமன் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று திருநின்றவூர் போலீசில் தினமும் ஆஜராக கையெழுத்து போட்டு வந்தார். ஆனால் சிறுவன் பற்றி அவர் எந்த தகவலும் தெரிவிக்காததால் சிறுவன் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவரை திருநின்றவூர் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.
இதற்கிடையே கடந்த 12-ந்தேதி (புதன்கிழமை) திடீர் என்று போலீஸ்காரர் ராமன் திருவள்ளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அப்போதும் சிறுவன் பற்றி தகவல் தெரிவிக்கவில்லை. மறாக இன்ஸ்பெக்டர் தனக்கு தொல்லை கொடுப்பதாக நீதிபதியிடம் புகார் கூறினார். இதையடுத்து ராமனை நீதிமன்றகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
முன்ஜாமீன் பெற்ற போலீஸ்காரர் கோர்ட்டில் சரண் அடைந்ததால் திருநின்றவூர் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
அவர் சிறுவனை கடத்தி கொலை செய்து இருப்பாரோ என்று கருதி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 4 வயது சிறுவன் பற்றி திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர்.
அப்போது கேளம் பாக்கம் கடற்கரையில் கடந்த 9-ந்தேதி 4வயது சிறுவன் பிணம் மீட்கப்பட்டது தெரிய வந்தது. சிறுவன் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. சிறுவன் அடையாளம் தெரியாததால் கேளம் பாக்கம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுவன் உடல் செங்கல்பட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட போது போலீசார் எடுத்த போட்டோக்களை சிறுவனின் தாய் வசந்தியிடம் காட்டினார்கள். அது தன் மகன் தான் என்று அடையாளம் காட்டி கதறி அழுதார்.
சிறுவன் கடத்தப்பட்ட போது அணிந்திருந்த அதே உடைதான் போட்டோவிலும் இருந்தது. 8-ந்தேதி கடத்தப் பட்ட சிறுவன் மறு நாள் கொலை செய்யப்பட்டு கேளம்பாக்கம் அருகே கடலில் வீசப்பட்டான்.
இந்த வழக்கில் திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் ஆல்டிரின் திறமையாக துப்பு துலக்கி இருக்கிறார். சிறுவன் கடத்தப்பட்டதாக தாய் புகார் செய்ததும் போலீஸ்காரர் ராமன் தலை மறைவானது, முன்ஜாமீன் பெற்றது, கோர்ட்டில் சரண் அடைந்தது, தன்னுடன் எப்போதும் வக்கீலை வைத்துக்கொண்டது ஆகிய நடவடிக்கைகள் சந்தேகப்பட வைத்தன.
சிறுவன் கடத்தப்பட்டது முதல் போலீஸ்காரர் செல் போனில் யார்-யாருடன் பேசியிருக்கிறார் என்று செல்போன் நிறுவனத்தின் உதவியுடன் விசாரணை நடத்தினர். சிறுவன் கடத்தப்பட்ட மறுநாள் (9-ந் தேதி) போலீஸ்காரர் ராமன் வண்டலூர், கேளம் பாக்கம் பகுதியில் இருந்து திருமுல்லை வாயலுக்கு பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைவைத்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது சிறுவன் பிணம் கடற்கரையில் ஒதுங்கியது தெரிய வந்தது. கடத்தப்பட்ட மறுநாளே சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கிறான்.
குடும்ப தகராறு காரணமாக போலீஸ்காரர் மகனை கடத்திச் சென்றதாக தாய் புகாரில் கூறியிருந்தார். அதன் பிறகு கொலை நடந்து இருப்பதால் வேறு காரணம் இதில் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
போலீஸ்காரர் ராமன் கேளம்பாக்கத்தில் இருந்து திருமுல்லை வாயலில் உள்ள ஒரு பெண்ணுடன் பேசியிருக்கிறார். அந்தப் பெண் யார் என்றும் விசாரணை நடக்கிறது. போலீஸ்காரர் ராமன் நீதிமன்ற காவலில் ஜெயிலில் இருப்பதால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அப்போது சிறுவன் கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.
செங்கல்பட்டில் புதைக்கப் பட்ட சிறுவன் பிணத்தை தோண்டி எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் 2 போலீஸ்காரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
திருநின்றவூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரி கள் முன்னிலையில் சிறுவன் பிணத்தை தோண்டி எடுக்கிறார்கள். பிணத்தை தாய் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டுகிறார் கள்.
ஆசையுடன் பெற்றெடுத்த ஒரே மகன் கொலை செய்யப் பட்ட அதிர்ச்சியில் தாய் வசந்தி கதறி அழுதவாறு இருந்தார்.