பிலிப்பைன்ஸ் விடுதலைப் போராட்டம்: பெர்லின் திரைப்பட விழாவில் 8 மணி நேரம் ஓடும் சினிமா…!!
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் 66-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் உள்ள பிரபல இயக்குனர்களின் 19 முக்கிய திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.
முப்பது பாடல்களுடன் மூன்று மணிநேரம் படம் பார்த்த இந்திய சினிமாப் பிரியர்களுக்கு அந்த அனுபவம் சலித்தும், புளித்தும் போனதால் பிற்கால திரைப்படங்களில் சில 120-150 நிமிடங்களுக்குள் முடியும் வகையில் தயாரிக்கப்பட்டன. இந்த நீளமும் குறைய வேண்டும் என்பதே அவசரயுகத்தில் பல சங்கதிகளையும் மென்றுத் துப்பும் அறிவுஜீவிகளின் ஆசையாக உள்ளது.
இந்நிலையில், பெர்லின் படவிழாவில் போட்டியிடும் 19 படங்களில் பிலிப்பினோ மொழி இயக்குனரின் படைப்பான “சோகமான துயரத்துக்கொரு தாலாட்டு” (A Lullaby to the Sorrowful Mystery) என்ற படம் கடந்த வியாழக்கிழமை திரையிடப்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட புரட்சி மற்றும் விடுதலைப் போராட்டத்தை மையமாக கொண்ட கதையமைப்புடன் கூடிய இந்தப் படம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஒருமணி நேர உணவு இடைவேளைக்கு பின்னர் இரவு சுமார் 7 மணிக்கு படம் முடிந்தது.
பிலிப்பைன்ஸ் விடுதலைப் போராட்டத்தின் பலகட்டங்களை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கும் இயக்குனர் லாவ் டியாஸ், ‘எனது படத்தை வேகம் குறைவான படம் என்று முத்திரை குத்தி, புறக்கணித்து விடாமல் இங்கு திரையிட அனுமதித்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவைப் பற்றிய ஆழ்ந்த தேடல்களின்போது படத்தின் நீளத்தை மட்டுமே ஒரு அளவுக்கோலாக வைத்து அணுகுவது சரியல்ல; அது சினிமா, கவிதையைப் போன்றது, இசையைப் போன்றது, ஓவியத்தைப் போன்றது, பெரிய அட்டையில் வரைந்தாலும், சிறிய அட்டையில் வரைந்தாலும் ஓவியம்-ஓவியம்தானே..? அதேபோல்தான் சினிமாவும், அதன் நீளத்தை ஒரு பொருட்டாக பார்க்கக் கூடாது’ என்று கூறுகிறார்.
19-ம் நூற்றாண்டின் பின்னணியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் புரட்சியாளர் ஆண்டிரஸ் போனிஃபாஸியோ ஒய் டி காஸ்ட்ரோ அந்நாட்களில் பிலிப்பைன்ஸ் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஸ்பெயின் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப் போரில் தொடங்கி, அவரது திடீர் மறைவுக்குப் பிறகு ஆவிகள் உலவும் மலைப்பகுதியில் காஸ்ட்ரோவின் மனைவி அவரது பிரேதத்தை தேடுவது, பின்னாளில் தனது தீக்கவிதைகள் மூலம் மக்களை தட்டியெழுப்பிய புரட்சிக் கவிஞர் இஸகானியின் எழுச்சி மற்றும் தாய்மண்ணின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை நீத்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் தியாகம் தொடர்பான பல செய்திகளை இந்த எட்டுமணி நேர திரைப்படம் (கருப்பு-வெள்ளை காட்சிகளாக) பதிவு செய்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறந்தப் படத்துக்கான தங்கக் கரடி சிலையை “சோகமான துயரத்துக்கொரு தாலாட்டு” வெல்லுமா? என்பதை (எட்டுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து படம் பார்த்ததுபோல்..?) பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Average Rating