பலாலி> விமான நிலையமா? மீள்குடியேற்றமா? முன்னுரிமைக்குரியது?? -நிருபா குணசேகரலிங்கம்…!!

Read Time:15 Minute, 31 Second

timthumb (1)பலாலி விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக வடக்கில் உள்ள பிரதான ஆழ்கடல் மீன்பிடித்துறைமுகமான மயிலிட்டி பகுதியை சுவிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் கடும் எதிர்ப்பினைச் சந்தித்து நிற்கின்றது.

இராணுவ நடவடிக்கைகள் மூலம் கடந்த 26 வருடங்களுக்கு முன்னதாக தமது வாழ்விடங்களை விட்டு வலிகாமம் வடக்கு மக்கள் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டனர். இவ்வாறாக வெளியேற்றப்பட்ட மக்கள் தம்மை தமது நிலங்களில் அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

இப் போராட்டங்களில் எல்லாம் ஏனைய பிரதேசங்களைப் போல மீள்குடியேற்றத்திற்கான அனுமதி மறுக்கப்படும் இரகசியம் “தமது பிரதேசங்கள் பொருளாதார வளமிக்க இடமாக இருப்பதுவே காரணம் என” அவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.

ஒரு தலைமுறை வாழ்க்கையினை இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வேறு பிதேசங்களிலும் அவல வாழ்வாகக் கழித்துவரும் இம் மக்கள், கடந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் பங்கெடுத்து விட்டு, தாம் தம் நிலங்களுக்கு மீளத்திரும்புவதற்கான காலம் கனிந்து விட்டது எனக் காத்திருக்கையில், அவர்களின் நம்பிக்கையில் வேட்டு வைத்தால் போல மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் பகுதியை சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டங்களுக்காக சுவிகரிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற செய்திகள் பரவ ஆரம்பித்தன.

கடந்த மாதம் அமைச்சராகவுள்ள விஜயகலா மகேஸ்வரனினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மயிலிட்டி துறைமுகத்தினை மீளவும் மக்களின் தொழில் முயற்சிகளுக்கு கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மயிலிட்டித் துறைமுகம் தற்போது பொதுமக்களால் தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை எனவும் அப்பிரதேசத்தினை மீள்குடியேற்றத்திற்கும் கடல்தொழிலுக்கும் வழங்கினால, அது பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு குந்தகமானது என படை அதிகாரிகளால் பிரதமருக்குக் விபரிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரதமரும் மயிலிட்டிப் பகுதி மீள்குடியேற்றத்தினை மறுத்து விட்டதாகச் செய்திகள், ஊடகங்களில் முதன்மை பெற்றவுடன் அவ்வாறாக வெளியாகிய செய்திகள் தவறு என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.

அத் தெரிவிப்பில், மயிலிட்டி துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை ஆகியவற்றினை பொருளாதார நோக்கில் மேம்படுத்த வேண்டும். அவற்றை பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அபிவிருத்திக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன் மேற்படி மக்களின் சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் அபிவிருத்தித் திட்ட வரைபு ஒன்று தாயாரிக்கப்படும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்ற நிலைபைபாட்டைத் தொடர்ந்தே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

எனினும் பலாலி விமான தளத்தினை சிவில் விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்காக கொழும்பில் நடைபெற்ற இந்திய – இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் வேணுபால் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதோர் பின்னனியில் தற்போது மக்களின் கருத்துக்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இவ்வகையில் வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த வலி. வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம், எமது சொந்த நிலம் எமக்கு வேண்டும். இப் பகுதி அபகரிக்கப்படுமாயின் 5 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்படுவர். இதனை ஏற்றுக்கெகாள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

மக்களின் எதிர்ப்பு என்பது ஒருவகையில் கண்டு கொள்ள வேண்டிய விடயமாக இருக்க, மேலும் ஒரு வகையில் வடக்கில் ஓர் சர்வதேச விமான நிலையம் அமைவது சாதகமானதா? இல்லை மீன்பிடித் துறைமுகத்தினை மீள இயக்குவது பொருத்துதமுடையதா? என பலகேள்விகளையும் தொடுக்க வேண்டியுள்ளது.

உண்மையில் இன்று வடக்கு பகுதியில் யுத்தத்தினால் உற்பத்திகள்; நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. குறிப்பாக இன்றும் விவசாய நிலங்கள் பல படைத்தரப்பின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன.

அதுபோன்றே மீன்பிடித் துறைமுகங்களும் படையினர் வசம் உள்ளன. மக்கள் பாவனைக்கு என விடுவிக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்புக்களும் ஏதும் உரியவாறு இல்லை.

வடக்கில் யாழ்ப்பாணத்தினை எடுத்துக்கொண்டால் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்டுள்ள நிலங்களிலும் கடலிலும் சட்ட திட்டங்களுக்கும் நீதிக்கும் புறம்பாக படைதரப்பினர் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியோடு ஒப்பிடுகையில் நடைமுறையில் உள்ள அரசாங்கம், நிலங்களை விடுவிக்கின்றது. அது மறுப்பதற்கு இல்லை. ஆனாலும் அது முழுமையாக இடம்பெறவில்லை. பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மக்களின் நிலங்கள் அவர்களிடம் கையளிக்கப்படுவதற்கு பாதுகாப்புத் தரப்பினாரின் அளவுக்கு மீறிய குறுக்கீடுகள் இப்போதும் கணிசமாகக் காரணமாகவுள்ளன.

மகிந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ மயமாக்கத்தின் உச்சமாக மக்களின் சொத்துக்கள் சட்டத்திற்குப் புறம்பாக அபகரிக்கப்பட்டிருந்தன.

தற்போதைய மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஒரு தடவை மக்களின் மீள்குயேற்றத்தில் படையினரின் விட்டுக்கொடுப்பு போதுமானதல்ல என கவலை வெளியிட்டிருந்தமையும் இங்கே கண்டு கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறாக உற்பத்திகளை யுத்தத்தினால் இழந்து தொழிலுக்காக ஏங்கும் ஓர் சமூகத்தில் அவர்களுக்கு மீளவும் தொழில் முயற்சிகளை ஏற்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இவ்வாறானதோர் நிலையில், மயிலிட்டி போன்ற பாரம்பரிய வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரதேச மக்களின் பங்கேற்பு மற்றும் ஏற்புடைமையின்றி பாரிய அபிவிருத்தி நோக்கங்களுக்குள் கொண்டு செல்வது சாதகமானது தானா எனப் பார்க்க வேண்டியுள்ளது.

ஓர் சர்வதேச விமான நிலையம் இராஜதந்திர நகர்வுகளின் வரிசையில் சாதகமாக பார்க்கப்பட்டாலும், அது உள்ளுர் உற்பத்திகளை கொண்ட பகுதிகளில் சுவிகரிக்கப்பட்டு தான் அமைய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.

மக்களின் தொழில் முயற்சிகள் அவர்களது சீவனோபாயம் பற்றி சிந்திக்கையில் இதற்கு உள்ளாக பாதிக்கப்படும் அப்பாவித் தொழிலாளர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளை எழுப்புகின்றது.

விமான நிலையம் அமைவதனால் அப் பிரதேசத்தினைச் சேர்ந்த தொழிலாளர்கள் எல்லோரும் வேலைவாய்ப்புப் பெறப் போவதில்லை. அவ்வாறான விமான நிலையத்தினூடாகக் கிட்டும் வருமானம் வடக்கிற்கானதா என்பதிலும் கேள்விகள் உள்ளன. இந் நியாயப்பாடுகளுடன் பார்ககையில் பிரதேச மக்களின் சீவனோபயம் முக்கியமானது.

சிலர் கேட்கலாம், “அதாவது குறித்த மீன்பிடித் துறைமுகத்தினை வளலாய் அல்லது வேறுபகுதிக்கு இடம் மாற்ற முடியும் அல்லவா? அதன் மூலம் தொழிலாளர்களின் ஜீவனோபாயம் பாதுகாக்கப்படும் தானே என?”…. அடிப்படையில் மயிலிட்டி என்பது அது ஓர் இயற்கையான மீன்பிடித் துறைமுகம். இதனை எமது பிரதேசத்திற்கான வளமாகக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

1990 அம் ஆண்டு முதல் மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவிலியன்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலையில் அதற்கு முன்னைய காலத்து தொழில் நிலைமைகள் எவ்வாறு இருந்தது என கவனிப்பது மயிலிட்டி பகுதியின் மீன் வளம் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கு பொருத்தமாகும்.

1980 களை அடுத்து இத் துறைமுகத்தினில் 6340 தொன் மீன் ஆண்டுதோறும் (வருவாய் 150 இலட்சம்) பிடிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிய கணிப்பீட்டின் படி மயிலிட்டித் துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் பிடிக்கப்படும் மீனின் அளவினை மும்மடங்கு (570 இலட்சமாக) அதிகரிக்கும் சாத்தியங்கள் இருந்ததாக யாழ் மாவட்ட மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அரசாங்க செயல்திட்டம் குறிப்பிடுகின்றது.

இரண்டாயிரம் பேர் நேரடியாக தொழில் வாய்ப்புப் பெற்றுள்ள இம் மீன்பிடித்துறைமுகம் அதன் அயல் கிராமங்களான காங்கேசன்துறை, ஊரணி,புலோலி, வளலாய், தொண்டமனாறு ஆகிய பிரதேசங்களுக்கு தொழில் நன்மையளித்து வந்தது.

1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் மயிலிட்டியிலேயே வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் உள் இணைப்புடன் கூடிய படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவைகள் மயிலிட்டிப் பகுதியின் தொழில் முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்ட விடயங்களாகும். ஆக இப் பகுதி மக்கள் தொழில் நிலையில் 1964 காலப்பகுதியில் சூறாவளித் தாக்கத்தினால் 56 தொழிலாளர்களை இழந்து பின்வாங்கியுள்ளனர்.

அதற்குப் பின்னர் 1983 காலப்பகுதியுடன் ஆரம்பிக்கப்பட்ட யுத்த கெடுபிடிகள் தொழிலை முழுமையாகப் பாதித்துள்ளது.

இவ்வாறாக இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 1990 களுடன் தொழிலை முழுமையாக இழந்தனர். பின்னர் இவர்களது பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டது.

இவ் அவலம் இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. முற்று முழுதாக தொழில்களையும் சொத்துக்களையும் உயிர்களையும் வாழ்விடத்தினையும் இழந்துள்ள இம் மக்களுக்கு இன்றைய சூழ்நிலையாவது மாற்றத்தினைத் தரவேண்டும்.

மக்கள் இராணுவ நடவடிக்கைகள் வாயிலாக வெளியேற்றப்பட்டனர் என்பதனை வைத்துக்கொண்டு இப் பகுதியில் தொழில் முயற்சிகள் தற்போது நடைபெறுவதில்லை தானே அவ்வாறாயின் மக்கள் தொடர்ந்தும் தமது நிலங்களை இழப்பதனை சகஜம் என ஏற்றுக் கொள்ளட்டும் என்ற முடிவுக்கு வர முடியாது.

யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் நாட்டின் மீன்பிடியில் யாழ்ப்பாணம் 25 வீதத்தினை உற்பத்தி செய்துள்ளது. இதன் வாயிலாக நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் பங்காற்றியுள்ளது.

தற்போது கடல்தொழில் ரீதியில் நவீனங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் போருக்கு முன்னர் பிடிக்கப்பட்ட தொன் உற்பத்தியை ஆவது உற்பத்தி செய்ய முடியவில்லை.

இந் நிலையில் வடக்கில் உற்பத்திகளை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது. போரின் பின்னர் மக்களின் இயல்புவாழ்க்கைக்கு தொழில்கள் மற்றும் உற்பத்திகள் அவசியமானதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரன் ஒரு புரியாத புதிர்!!; இறுதிவரை ஈழத்துக்காக போராடுவோம்.. – பிரபா சூளுரை: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 64) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்
Next post டெஸ்ட் டியூப் குழந்தைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!