ஆரணியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெண்ணிடம் போலீஸ் விசாரணை…!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கார்த்திகேயன் தெருவில் உள்ள தனியார் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் நேற்று காலை மர்ம போன் வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளோம். அவை சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு வைத்துவிட்டார். இது தொடர்பாக ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கோட்டீஸ்வரன், ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் திருவண்ணாமலையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் 3 பள்ளிகளிலும் சோதனை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் அலீஸ் வந்து மோப்பமிட்டது. இந்த வெடிகுண்டு சோதனை காரணமாக ஆரணியில் பரபரப்பு நிலவியது.
3 பள்ளிகளிலும் அங்குலம் அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை. அப்போதுதான் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதன்பின்னரே அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது.
முன்னதாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ஆரணி முழுவதும் பரவியது. எனவே அந்த பள்ளிகளில் படிக்கும் ஒரு சில மாணவ–மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 3 பள்ளிகளுக்கும் மதியத்துக்கு மேல் விடுமுறை விடப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஆரணியில் மேலும் சில பள்ளி நிர்வாகமும் மதியத்துக்கு மேல் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.
இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்த விசாரணையில போலீசார் இறங்கினர். அப்போது அந்த மிரட்டல் ஒரு செல்போனில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. எனவே அந்த செல்போன் யாருடையது என போலீசார் ஆராய்ந்தனர்.
அப்போது அந்த செல்போன் சந்தவாசலை அடுத்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தவாசலுக்கு விரைந்தனர். செல்போனுக்கு சொந்தமான அந்த பெண்ணை கண்டுபிடித்தனர்.
விசாரணைக்காக அந்த பெண் போலீஸ் நிலையத்துக்காக அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘‘அந்த செல்போன் என்னுடையதுதான். நான் நேற்று காலை ஆரணி உழவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றேன்.
அப்போது கூட்ட நெரிசல் காரணமாக செல்போன் தவறிவிட்டது. நான் காலை முதல் எனது செல்போனை தேடி வருகிறேன். யார் அதை எடுத்து சென்றார்களோ தெரியவில்லை. எனவே நான் எனது செல்போனில் இருந்து பள்ளிக்கு மிரட்டல் விடுக்கவில்லை’’ என்று கூறி கதறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை அனுப்பிவிட்டனர். எனினும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்று போலீசார் கூறி உள்ளனர். அந்த பெண் கூறுவது போல் அவரது செல்போன் உண்மையில் தொலைந்து விட்டதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
தொலைந்து போனதாக அந்த பெண் கூறும் செல்போனை எடுத்தது யார்? அந்த செல்போனை பயன்படுத்தி பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்தது யார்? என்பது தொடர்பான விசாரணையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
தற்போது அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் ‘ஸ்விட்ச் ஆப்’ என வருகிறது. எனவே அந்த செல்போன் தற்போது எங்கு பயன்படுத்தப்படுகிறது? என செல்போன் டவர் மூலம் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
Average Rating