புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? :விரைவில் தெரியவரும்..!!
கடந்த காலத்தில் தாம் செய்த குற்றங்களை மறைக்கவே இன்று கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவோம் என அச்சுறுத்துகின்றனர். எம்மை அச்சுறுத்தி தம்மை காப்பாற்ற டீல் போடுகின்றனர். எனினும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. தனித்து போக விரும்புவோர் கட்சியை விட்டு வெளியேற அனுமதி உண்டு. ஆனால் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் எமது நடவைக்கைகள் தொடரும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முககியஸ்தரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு எமது இராணுவத்திற்காக குரல்கொடுக்கும் நபர்கள் அன்று யுத்தத்தின்போது எமது இராணுவத்தை கொள்ளவே புலிகளுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்தார்கள் என்ற உண்மை வெகுவிரைவில் வெளிவரும். விரைவில் இவர்களின்
முகத்திரைகள் கிழியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தம்மை தண்டிக்க நினைப்பதாக மஹிந்த ஆதரவு அணியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை என நாமும் பல தடவைகள் தெரிவித்துள்ளோம். ஆனால் இவர்கள் தமது தனிப்பட்ட சுயநல செயற்பாடுகளை தக்கவைக்கும் நோக்கத்தில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமலும் இல்லை.
இன்று எமது இராணுவ வீரர்களுக்காக அனுதாபக்குரல் எழுப்பி வருகின்றனர். இராணுவ வீரர்களை தண்டிக்க எமது அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். இன்று பாதுகாப்பு படைகள் மீது அக்கறை காட்டும் மஹிந்த அணியினரே அன்று சரத் பொன்சேகா எனும் பலமான ஒருவரை தண்டித்து அவரை சிறையில் அடைத்தார்கள்.
அண்மைய காலத்தில் உலகம் போற்றும் மிகப்பெரிய தளபதி என கூறப்படும் சரத் பொன்சேகாவை இவர்கள் என்ன செய்தார்கள்.? அவரது வரலாற்றை இந்த கூட்டணியே அழித்தது. நீதியரசரை இருபத்துநான்கு மணிநேரத்தில் பதவி நீக்கியது, பொதுமக்களுக்கு எதிராக இராணுவ தாக்குதல் நடத்தியமை என மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடத்தினர். அப்போது நான் உட்பட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலர் மஹிந்த அரசாங்கத்தில் இருந்தோம் என நினைக்கும் போது அனைவரம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதேபோல் இன்று நல்லவர்கள் போல காட்டிக்கொண்டு எம்மை பிரிவினைவாத அரசாங்கம் என விமர்சிக்கும் நபர்கள் அன்று யுத்தத்தின் போது என்ன செய்தார்கள் என்ற உண்மை வெகுவிரைவில் வெளிவரும். இன்று இராணுவத்தின் மீது அனுதாப கண்ணீர் வடிக்கும் இதே குழுவை சேர்ந்த முக்கியமான நபர்களே அன்று எமது இராணுவத்தை கொல்ல விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தனர். தேர்தலில் மக்கள் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என அழுத்தம் கொடுத்து புலிகளுக்கு பணம் கொடுத்தரகள். இந்த உண்மைகள் விரைவில் வெளிவரும். யார் நல்லவர்கள் என்பது அப்போது தெரியவரும்.
மேலும் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகும் என்ற கதைகளை கூறி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஆனால் இன்று கட்சி இரண்டாக வேண்டும் என கூறும் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. இருக்கும் சிலரும் இன்று இனவாதக் கருத்துகளை பரப்பி தமது இருப்பை தக்கவைக்கும் உறுப்பினர்களேயாவர். . எனவே இவர்களை நம்பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவரும் இல்லை. எமது கட்சி எப்போதும் தலைமைத்துவத்தினை ஏற்று அதற்கு கட்டுப்பட்டு செயற்படும் கட்சியாகவே இருந்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் புதிய கூட்டணி உருவாக்கும் எவரையும் நம்பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள் எவரும் களமிறங்கப் போவதில்லை.
அதேபோல் இன்று தனிக்கட்சி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவதாக கூறும் எவரும் தைரியம் இல்லாத நபர்கள். கோழியைப்போல கொக்கரித்துக்கொண்டு காலத்தை கடத்தும் நபர்களே இவர்கள். தனித்து பயணிக்க விரும்புபவர்கள் தமக்கு தைரியம் இருக்குமானால் இந்த நேரம் தனிக்கட்சி அமைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாது முட்டையிடும் கோழியைப்போல கொக்கரித்துகொண்டு இருப்பது வெறும் வேஷம் என்றே கூறவேண்டும்.
இதுவரையில் தாம் தனிக்கட்சி அமைத்து செயற்படப்போவதாக மஹிந்த ராஜபக் ஷ கூறவில்லை. எனினும் யோசித்த ராஜபக் ஷவின் கைதின் பின்னரே அவர் அவ்வாறான முடிவில் உள்ளார். எவ்வாறு இருப்பினும் கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவோம் என அச்சுறுத்தி தமது குற்றங்களை மறைக்க டீல் போடுகின்றார்கள். இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. தனித்து போக விரும்பும் எவரும் கட்சியை விட்டு வெளியேற அனுமதி உண்டு. ஆனால் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் எமது நடவைக்கைகள் தொடரும் என்றார்.
Average Rating