கட்சித்தாவல்கள், கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்..! -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி..!!
கட்சித்தாவல்கள், கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும்..! -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி “வீரகேசரி”க்கு அளித்த விசேட செவ்வி-
புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்பாடுகள், கூட்டமைப்பினுள் கட்சித்தாவல்கள், வெளிநாட்டுச் சந்திப்புக்கள், தென்னிலங்கையின் மாறாத நிலைப்பாடுகள், பிராந்திய, சர்வதேச நாடுகளின் ஆட்சிமாற்றத்தின் பின்னரான நிலைப்பாடுகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வழங்கிய செவ்வியில்,
தீர்வு விடயத்தில் அதியுச்ச கோரிக்கைகளையே முன்வைக்க வேண்டும். கட்சித்தாவல்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்துள்ளது. அதனைத்தடுக்கவேண்டிய பொறுப்பு கட்சித்தலைமைகளுக்கே உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு பெரும்பான்மையினத்தினுள் காணப்படும் ஆதரவு, தெற்கு நிலைமைகள் ஆகியவற்றை புதிய அரசாங்கமும் கவனத்தில் எடுத்தே தனது செயற்பாடுகளை கருத்துக்களை முன்வைக்கும் என்பதை ஆரம்பத்திலிருந்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அதேநேரம் தமது நலன்களுக்காக பிராந்திய, சர்வதேச தரப்புக்கள் எம்மைப் பலிகொடுப்பதற்கு தயங்கமாட்டாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு…,
கேள்வி:- இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக தமிழ் த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டிருந்த ஸ்கொட்லாந்து விஜயம் எவ்வாறு அமைந்தது?
பதில்:- ஸ்கொட்லாந்தின் தலைநகரமான எடின்பிரோ சட்டக்கல்லூரியும், இலங்கை குறித்த சர்வதேச செயற்பாட்டு குழுவினர் உள்ளிட்டோரே இவ்வகையான கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறான கலந்துரையாடல் செப்டெம்பரில் இங்கு நடைபெற்றிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே இக்கலந்துரையாடலும் நடைபெற்றிருந்தது.
பிரித்தானியாவின் கடுமையான ஒற்றையாட்சிக்குள் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான உரிமையுடனான அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வை ஏற்கமுடியும். அதனை தெளிவுபடுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துள்ளார்கள் என்றவாறான தோற்றப்பாடே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
உண்மையிலேயே நாம் ஸ்கொட்லாந்து உட்பட பல நாடுகளின் அதிகாரப்பகிர்வு தொடர்பாக கற்றுக் கொண்டிருந்தோம். இது முடிவெடுக்கும் கூட்டமல்ல. ஒரு கருத்தரங்கேயாகும்.
அதிகாரப்பகிர்வு என்பது தொடர்ச்சியான செயற்பாட்டு ரீதியாக நடைபெறுமொரு விடயமாகும். சமஷ்டி எனப் பேசப்பட்டாலும் தற்போது தனிமனித சமஷ்டி வழமையில் பேசப்படுகின்றது. அந்தவகையில், இந்தக்கருத்தரங்கின் ஊடாக அனுபவத்தை பெறும் வாய்ப்பை பெற்றிருந்ததேன்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பதைக் காட்டிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள், மத்திய, தென் மாகாண முதலமைச்சர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
கேள்வி:- உங்களுடைய தலைமையில் விசேட கூட்டங்கள் நடைபெற்றிருந்தனவே?
பதில்:- ஆம், புலம்பெயர்ந்த உறவுகளுடன் கலந்துரையாடுவதற்காக லண்டன் ஈஸ்தாம் நகரமண்டபத்தில் விசேட பொதுக்கூட்டமொன்றை கூட்டியிருந்தோம். பல்வேறுபட்ட பெருந்தொகையானவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
இலங்கையில் என்ன நடக்கின்றது? நியாயமான தீர்வொன்று கிடைக்குமா? என்பதை அறிவதற்கான ஆர்வம் அவர்களிடத்தில் வழமையைப் போன்றே காணப்படுகின்றது.
அதேநேரம் அதிகாரப்பரவலாக்கலில் நம்பிக்கையில்லாத ஈழப்போராட்டம் பற்றி பேசுபவர்களையும் சந்திக்கக் கூடியதாகவிருந்தது.
அமைதியான இலங்கைக்கு நிரந்தரமான நியாயமான தீர்வொன்று கிடைக்க வேண்டுமென்பதையே பொதுவாக அனைவரும் விரும்புகின்றார்கள் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது. ஒட்டுமொத்தமாக இப்பயணம் நன்மைதரக் கூடியதொன்றாகவே அமைந்திருந்தது.
கேள்வி:- ஸ்கொட்லாந்தில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைமையானது தமிழர்களின் தீர்வு விடயத்தில் எவ்வளவு தூரம் சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் நீண்டகால ஜனநாயக பாரம்பரியங்களில் செயற்படுமொரு நாடாகும். அங்கு முற்போக்காளர்கள் பலர் காணப்படுகின்றனர். ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறுகின்ற போது ஏற்படும் ஜனநாயகப் பிரச்சினைகளை சிந்திப்பார்கள். இங்கு அவ்வாறில்லை.
ஒற்றையாட்சியின் கீழ் வழங்கப்படும் அதிகாரப் பரவலாக்கத்தை இங்குள்ளவர்கள் எவ்வாறு கையாண்டிருக்கின்றார்கள் என்பதற்கான அனுபவம் நிறையவே உள்ளது.
குறிப்பாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்கின்றார்கள். ஒத்தியங்கு பட்டியல் ஊடாக மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் என்பவற்றை பார்த்திருக்கின்றோம்.
தென்னிலங்கையில் உள்ளவர்கள் இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்கள் ஒற்றுமையாக தாமே தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அதிகாரப்பரவலாக்கம் அமைகின்றது எனக் கருதவில்லை. தமக்குள்ள அதிகாரங்களை பகிர்ந்தளிக்கின்றோம் என்ற எண்ணப்பாட்டிலேயே உள்ளார்கள்.
காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கருத்திற் கொண்டால் சில தென்னிலங்கை தரப்புக்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஆகவே ஸ்கொட்லாந்தின் அதிகாரப்பகிர்வு முறைமையை முழுமையாக இங்கு உள்வாங்கிவிட முடியாது. அதனை ஆராய்ந்து எமது நாட்டுக்கு ஏற்றவகையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான விடயங்களை உள்வாங்க முடியுமெனக் கருதுகின்றேன்.
கேள்வி:- தமிழ் மக்கள் பேரவையில் நீங்களும் அங்கம் வகித்திருந்தீர்கள். அத்தரப்பினால் வெளிடப்பட்டுள்ள தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கிய விடயங்களை உள்வாங்கியதாகவே அத்தீர்வுத்திட்ட முன்வரைபு காணப்படுகின்றது. சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசாங்கத்தோடு உடன்படிக்கையொன்றை எட்டுதல் என்ற விடயம் மட்டுமே சற்று வேறுபட்டதாக காணப்படுகின்றது.
ஏனைய விடயங்கள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது வரையில் கூறும் விடயங்களே உள்வாங்கப்பட்டுள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கில் சுயநிர்ணயத்துடனான அதியுச்ச சமஷ்டியே தீர்வாக முடியும் என்பதை ஆழமாக கூறி வருகின்றார். கிளிநொச்சியிலும் சரி, எடின்பிரோவிலும் சரி ஒரே விடயத்தையே கூறியுள்ளார். அந்த நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
அவ்வாறிருக்கையில் அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமெனக் கோரும் தமிழர்கள் தரப்பில் சரியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவில்லை. மக்கள் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.
அதன்பிரகாரமே மக்களின் பங்களிப்புடன் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை, இறுதி செய்வதற்காக முன்வரைபொன்று வெளியிடப்பட்டுள்ளது.
எமது அபிலாஷைகள் என்ன என்பதை நாம் வெளிப்படையாகக் கூறவேண்டும். அதன வெளிப்படுத்தியிருக்கின்றோம். அதில் எந்தவிமான தவறுகளுமில்லை.
அரசாங்கத்திடம் நேரடியாகவோ அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பனூடாகவே இவ் முன்வரைபின் இறுதிவடிவம் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
தற்போது தனிநபர்களும் அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை முன்வைத்து வருகின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு தமிழ்த்தரப்பாலும் முன்வைக்கப்படும் முன்வரைபுகள் வேறுபட்டிருந்தாலும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் அடிப்படையில் ஒன்றாக காணப்படுமென்றே நம்பிக்கை கொண்டிக்கின்றேன்.
கேள்வி:- பல தமிழ்த் தரப்புக்கள் காணப்படும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தீர்வுத்திட்டம் தொடர்பில் இறுதி செய்யுமெனக் கூறப்படுகின்றதே?
பதில்:- தமிழ் மக்களின் அதிகளவு ஆணையைப்பெற்ற முக்கியத்துவமான தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காணப்படுகின்றது. அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அரசாங்கம், சர்வதேச தரப்புக்கள் ஆகியோர் கூட்டமைப்புடனேயே பேசுவார்கள்.
அவ்வாறிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய தரப்புக்களால் கூறப்படுகின்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்கவேண்டும். அவற்றை எடுத்துரைக்கவேண்டிய பொறுப்புள்ளது. கூட்டமைப்பு தமிழ்தரப்பால் முன்வைக்கப்படும் முக்கியமான விடயங்களை நிச்சயமாக உள்வாங்க வேண்டும்.
அரசியலமைப்பு பேரவையில் இந்த விடயங்களை பிரேரணைகளாகவே முன்வைக்க முடியும். அதன் பின்னர் கலந்துரையாடல்கள் நடைபெறும். ஆகவே எமது பிரேரணைகளை உள்வாங்கும் வரையில் அதற்குரிய அழுத்தங்களை வழங்கியவாறே இருக்க வேண்டும்.
கேள்வி:- தமிழ் மக்கள் பேரவையின் முன்வரைபானது திம்புக் கோட்பாடுகளை அடியொற்றியதாகவே உள்ளது. ஆகவே திம்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தவர் என்ற அடிப்படையில் அத்தகைய தீர்வானது சமகால சூழலில் நடைமுறைச் சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர்களா?
பதில்:- திம்பு கோட்பாடுகள், சுயநிர்ணயம், தாயகக் கோட்பாடு போன்ற விடயங்களை நேரடியாகவே கூறியிருக்கின்றது. தற்போதும் தாயகக் கோட்பாடு என்பதைக் காட்டிலும் வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகின்றோம்.
இணைந்த வடகிழக்கு ஒருமாநிலம், அது தமிழர்கள் பெரும்பான்மையாக பூர்வீகமாக வாழும் பிரதேசம் எனக் கூறப்பட்டிருக்கின்றது. இதுவே தாயகக் கோட்பாடு.
நாம் எமது அதியுச்சமான கோரிக்கையை முன்வைக்கவேண்டும். அதனடிப்படையிலேயே பேரவையின் தற்போதைய முன்வரைபு வைக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பு பேரவையில் அதுதொடர்பிலான கலந்துரையாடல்களின்போது எவ்வாறான முடிவுகள் எட்டப்படுகின்றன.
1972, 1978ஆம் ஆண்டுகளைப்போன்று தமிழர்களின் பிரதிநிதித்துவமின்றி அரசியலமைப்புச் சபை அமையப்போகின்றதா என்பதையெல்லாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கேள்வி:- தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி என்பதை கைவிடுவதற்கு தயாராகவில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவித்துள்ளதே?
பதில்:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும். ஆயுதப்போராட்டமற்ற தற்போதைய சூழலில் அதற்கு மேல் எதுவுமே செய்யமுடியாது. அதனை அவர்கள் நிராகரிப்பார்களாயின் சாத்வீக ரீதியான, ஜனநாயக ரீதியான எதிர்ப்புக்களை காட்டுவதற்கு முயல்வோம்.
கேள்வி:- ஆட்சிமாற்றத்தின் பங் காளிகளாக தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு காணப்படுகின்ற நிலையில் ஐ.நா.தீர்மானம், வடக்கில் இராணுவ பிரசன்னம், அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் மாறாத கடுமையான நிலைப்பாடுகளையே புதிய ஆட்சியா ளர்களும் கொண்டிருக்கின்றார்களே?
பதில்:- என்னைப் பொறுத்தமட்டில் இத்தகைய விடயங்கள் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டவையே. ஏனென்றால் யுத்தத்தை வெற்றி கொண்டதாக கூறும் முன்னாள் ஜனாதிபதிக்கு பெரும்பான்மையினத்தினுள் காணப்படும் ஆதரவு, தெற்கு நிலைமைகள் ஆகியவற்றை புதிய அரசாங்கமும் கவனத்தில் எடுத்தே தனது செயற்பாடுகளை கருத்துகளை முன்வைக்கும் என்பதை ஆரம்பத்திலிருந்தே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
எமது அழுத்தங்கள் குறிப்பிட்டதொரு எல்லைவரையே செல்லும். அது கடந்த கால உண்மை. யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறிருக்கையில் எமக்குள்ள வலிமையின் பிரகாரம் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கான நியாயங்கள், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு தொடர்பான கோரிக்கைகள் ஆகியவற்றில் துளியளவேனும் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளாது செயற்பட்டு அதிகூடிய அழுத்தங்களை வழங்கவேண்டும்.
புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகள் அரசாங்கங்களுக்கு வழங்கும் அழுத்தங்கள் உட்பட அனைத்தும் ஒன்றிணைந்தே அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். நாம் எமது கடமையை சரியாகச் செய்வோம். அடுத்து நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேள்வி:- இலங்கை – இந்திய ஒப் பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழு மையாக நடைமுறைப்படுத்தவதற்கு ரிய அழுத்தங்களை இற்றைவரையில் இந்தியாவால் வழங்க முடியாது போயுள்ளதே?
பதில்:- இந்தியா இலங்கையை முழுமையாக பகைக்காமலிருப்பதிலேயே கவனமாக இருக்கும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வாக்குறுதிகளை வழங்கிய அதனை நடைமுறைப்படுத்திருந்த போதும் இலங்கையை பகைக்க வேண்டுமெனக் கருதவில்லை. பின்னர் ஆட்சியில் இருந்து அகற்றியது வேறுவிடயமாக இருக்கின்றது. இருந்த போதிலும் நேரடியாக பகைப்பதை விரும்ப மாட்டார்கள்.
80களில் இந்தியா சில விடயங்களில் நேரடியாக தலையீடு செய்தது. அவ்வாறான நிலைமைகள் தற்போதில்லை. எந்தவொரு நாடும் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை எதிர்ப்பதை இறுதி சந்தர்ப்பமாகவே வைத்திருக்கும்.
தற்போதைய நிலையில் இந்தியா பொருளாதார பலத்தை வலுப்படுத்தி அதனூடாக நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முனைகின்றதே தவிர இராணுவ ரீதியாக கட்டுப்படுத்துவதற்கு விரும்பவில்லை.
கேள்வி:- பிராந்திய வலய, சர்வதேச நாடுகள் தற்போதுள்ள ஆட்சியாளர்களுடன் நட்புறவின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருவதனை தெளிவாக அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான நிலையில் இந்தியா, சர்வதேசம் போன்ற மூன்றாம் தரப்புகளை முழுமையாக நம்பியிருப்பது எந்தவகையில் சாத்தியமாகும்?
பதில்:- ஆரம்பம் முதல் தமிழ்த்தரப்புக்கள் சர்வதேசம் சர்வதேசம் எனக்கூறுகின்றோம். நாம் உட்பட தமிழ்த் தரப்புக்கள் சர்வதேச அரசியலை சரியாக கற்கவில்லையென்பதை நான் தற்போது உணர்ந்துகொள்கின்றேன். எந்தவொரு நாடும் தன்னுடைய நலனையே முன்னிறுத்தும். அதன்பின்னரே ஏனைய விடயங்கள் தொடர்பாக கவனத்தை செலுத்துவதற்கு முனையும்.
இலங்கையில் தமது நலன்கள், இங்குள்ள பகுதிகளில் தமக்கிருக்கும் ஆதிக்கத்தில் குறைவு வந்துவிடக்கூடாது, முக்கியமாக சீனாவின் ஆதிக்கம் வந்துவிடக்கூடாது, எவ்வாறு அதனைக் கட்டுப்படுத்துவது, அதற்காக எவ்வாறு செயற்படுவது என்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதற்காக எம்மைப் பலிகொடுப்பதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள். இதனை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்மக்களின் செயற்பாடுகள், அவர்களின் ஆதிக்கம் காரணமாக முற்றுமுழுதாக எம்மை கைவிட்டுச் செயற்பட முடியாதிருப்பதன் காரணத்தால் சில விடயங்களை எமக்கு சாதகமாகச் செய்ய முயற்சிப்பார்கள்.
இவ்வாறான நிலைமைகளுக்குள் எமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை எட்டலாம் என்பதைக் கருத்திற் கொண்டு அதற்குரிய வகையில் நகர்த்தல்களை செய்ய வேண்டும்.
கேள்வி:- அரசியலமைப்பில் சமஷ்டி என்ற சொற்பதத்தை நேரடியாக பயன் படுத்துவதா இல்லையா என்றதொரு சர்ச்சை காணப்படுகின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு என்னவாகவுள் ளது?
பதில்:- ஒற்றையாட்சியின் கீழ் அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்யமுடியாது. அவ்வாறு செய்யப்படுமாகவிருந்தால் அந்த அதிகாரங்கள் மீது மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதற்கான நிலைமைகள் காணப்படும். 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைச் சட்டங்களில் அந்த நிலைமைகளை உணர்ந்திருக்கின்றோம்.
ஆகவே சமஷ்டி அமைப்பு எனக்கூறுவதற்கும் சமஷ்டி அமைப்பின் தன்மை இருப்பதெனக் கூறுவதற்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது. ஆகவே தான் சொற்பதங்களை நேரடியாக பிரயோகிக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கின்றோம்.
கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ்த்தரப்பின் கோரிக்கைகளை உட னடியாக மேற்கொள்ள முடியாதுள்ளது. கடும்போக்காளர்களின் அல்லது முன்னைய ஆட்சியாளர்களின் ஆதிக்கம் மேலெழுந்து விடுமென புதிய ஆட்சியாளர்கள் காரணம் கூற ஆரம் பித்துள்ளார்களே?
பதில்:- தற்போதல்ல பண்டா -– செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது முதல் அதற்கடுத்த நடவடிக்கைகளுக்கும் இவ்வாறே காரணம் கூறப்பட்டது. ஆகவே இவ்வாறு காரணம் கூறிக் கொண்டிருப்பார்களாயின் இந்த நாட்டில் நியாயமான விடயமொன்றை செய்யமுடியாது போய்விடும்.
தமிழர்களின் விடயத்திலேயே இவ்வாறான காரணத்தை கூறுகின்றார்கள். ஏனைய தமக்கு தேவையான விடயங்களில் அவ்வாறு காரணங்களை ஒருபோதும் அவர்கள் கூறுவது கிடையாது
கேள்வி:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்டமைப்பாக இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சி ஒருதரப்பாகவும் இரண்டு பங்காளிக்கட்சிகள் வௌ;வேறு தரப்பாகவும் செயற்படும் நிலைமைகளை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிக்கின்றதே?
பதில்:- அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் அவ்வாறான வேறுபாடுகள் எதுமில்லை.
கேள்வி:- அரசியல் கோரிக்கைகளில் அல்ல, செயற்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவே? உட்பூசல்கள், மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றனவே?
பதில்:- செயற்பாடுகளில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன். சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியினூடாக ஆசனத்தைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழரசுக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான கூட்டமைப்பிற்கு ஏற்ற விடயமல்ல. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. அவ்வாறான நம்பிக்கைக்கு இடமளிக்க கூடாது.
கருத்து வேறுபாடுகள் காணப்படுவது வேறு. ஆனால் தீர்வு என்ற விடயத்திற்குச் செல்லும்போது அடிப்படையில் ஒன்றுபட்ட பூரணமாக நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.
தமிழ் மக்களின் நீண்ட உரிமைப் போராட்ட வரலாற்றுடன் தொடர்பினைக் கொண்டிருக்காதவர்கள் அமைதியான சூழலில் அரசியலுக்கு வந்துள்ளார்கள். புதியவர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பதை நாம் வரவேற்கின்றோம்.
அவ்வாறானவர்கள் தனிநலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. அவ்வாறான தீர்மானங்கள் கட்சிவிட்டுக் கட்சிமாறும் நிலைக்கும் வித்திடுகின்றன. கட்சி விட்டுக் கட்சி மாறுவதைத் தடுக்கும் பொறுப்பு அந்ததந்த கட்சிகளும், தலைமைகளுக்கும் உள்ளது.
அதேநேரம் கூட்டமைப்பாக இருக்கும் போது, பங்காளிக் கட்சிகளிடையே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதானது கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கி விடும் ஆபத்துமுள்ளது.
Average Rating