ஸிக்கா வைரசுடன் நரம்பு மண்டலத்தை பாதிக்கு நோய் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை..!!
ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் முதன்முறையாக பிரேசில், கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் மட்டும் நிரந்தர பக்கவாத நோய்க்கு காரணமான Guillain-Barre syndrome (GBS) என்ற நோய்த்தொற்றும் பரவிவருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான நுளம்புகளின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது 26 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.
தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது. இதனால், ஸிக்கா பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன. இந்நோயானது, சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ நுளம்புகளால் பரவுவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செக்ஸ் உடல் உறவின் மூலமாகவும் ஸிக்கா பரவுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஏற்கனவே பிரேசில் நாட்டில் 1000 இற்கும் அதிகமான குழந்தைகள் ஸிக்கா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பம் தரித்த பெண்களை ஸிக்கா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். பிரேசில் நாட்டில் மட்டும் இப்படி 4,074 குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அமெரிக்காவின் கொலம்பியா பகுதியில் மட்டும் 25,000 இற்கும் அதிகமான மக்கள் ஸிக்கா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 3177 பேர் கர்ப்பிணிப் பெண்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இங்கு மட்டும் மேலும் 6 இலட்சம் பேர் ஸிக்கா பாதிப்புக்குள்ளாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ள ஸிக்கா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனமான “WHO” கவலை தெரிவித்துள்ளது.
ஸிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதர ஸ்தாபனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 40 இலட்சம் மக்களை இந்த நோய் தாக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், நுளம்புகள் எங்கெல்லாம் உள்ளனவோ, அங்கெல்லாம் ஸிக்கா நோய் செல்லக்கூடும். அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நாடுகளை கடந்து ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலும் ஸிக்கா நோய் வேகமாக பரவி வருகின்றது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஸிக்கா வைரஸ் தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வ தகவல் வெளியானது.
இதற்கிடையில், ஸிகா வைரஸ் பரவியுள்ள 34 நாடுகளில் முதன்முறையாக பிரேசில், கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் மட்டும் நிரந்தர பக்கவாத நோய்க்கு காரணமான Guillain-Barre syndrome (GBS) என்ற நோய்த்தொற்றும் பரவி வருவதாக உலக சுகாதர ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Average Rating