ஆசிரியர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி தந்தையுடன் கைது- மின்வாரிய அதிகாரியும் சிக்கினார்…!!
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36), முதுகலை பட்டதாரி ஆசிரியர். இவருக்கு அனுஷா (33) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
ஆசிரியர் சந்தோஷ் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
ராமச்சந்திரபட்டினம் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6–ந்தேதி காலையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
சந்தோஷின் செல் போனும் சுவிட்ச்– ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் மாயமானது குறித்து பாவூர்சத்திரம் போலீசில் அனுஷா புகார் செய்தார்.
சந்தோஷின் செல்போனில் பதிவான எண்களை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது அவர் அடிக்கடி ஒரு எண்ணுக்கு போன் செய்து இருப்பதும், மாயமான அன்று கடைசியாக அந்த எண்ணில்தான் பேசி இருப்பதும் தெரியவந்தது.
அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி பொன்செல்வி (38) என்பவருடைய செல்போன் எண் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரைக் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் பொன்செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியர் சந்தோஷ் கொலை செய்யப்பட்டதும், அவருடன் ரகசிய தொடர்பு வைத்திருந்த பொன்செல்விக்கு வேறு ஒருவருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை ஆசிரியர் சந்தோஷ் தட்டிக்கேட்டதால் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
பொன்செல்வி தனது தந்தை தங்கப்பாண்டி, தம்பி முருகனுடன் சேர்ந்து சந்தோசை கொன்று தனது வீட்டின் பின் பகுதியில் புதைத்த சம்பவமும் அம்பலத்துக்கு வந்தது.
இதற்கிடையே பொன்செல்வியின் தம்பி முருகன் குலசேகரப்பட்டி கிராமநிர்வாக அதிகாரி நடராஜனிடம் சரணடைந்தார். அவர் முருகனை பாவூர்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசாரிடம் முருகன், எனது அக்காள் கள்ளக்காதலன் சந்தோஷ் மிரட்டியதால் அவரை கொன்று அக்காள் வீட்டில் புதைத்து விட்டோம். என்று கூறினார். தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பொன் செல்வி, அவரது தந்தை தங்கப்பாண்டி, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
நேற்று மாலை தென்காசி தாசில்தார் முன்னிலையில் பொன்செல்வி வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் கைதான பொன் செல்வியை போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கள்ளக்காதலன் சந்தோசை கொன்றது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:–
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி எனது சொந்த ஊர். பி.காம். படித்துள்ளேன். எனக்கு தட்டான்குளத்தை சேர்ந்த என்ஜினீயர் முருகன் என்பவருடன் திருமணம் நடந்தது. 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நாங்கள் குடும்பத்துடன் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அப்போது எனக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஆசிரியர் சந்தோசுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
நாங்கள் இருவரும் உள்ளுரில் சந்தித்தால் யாருக்காவது சந்தேகம் ஏற்படும் என நினைத்து அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று கள்ளக்காதலை வளர்த்து வந்தோம்.
எனது கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். எனவே சந்தோசை அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தேன். சில மாதங்களில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகில் வீடு கட்டி குழந்தைகளுடன் குடியேறினேன்.
இதற்கிடையே பாவூர்சத்திரம் மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சந்தோஷ் மற்றும் மின்வாரிய அதிகாரியுடன் பழகி வருவதை எனது பெற்றோர் கண்டித்தனர்.
ஆனாலும் இருவருடன் தொடர்ந்து பேசி வந்தேன். மின்வாரிய அதிகாரியுடன் பழகி வருவதை அறிந்த சந்தோஷ் என்னை கண்டித்தார். அவருடன் பழகுவதை நிறுத்த வேண்டும் அல்லது நமக்குள் உள்ள தொடர்பு , மின்வாரிய அதிகாரியுடன் நீ பழகி வருவது ஆகியவற்றை உனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி விடுவேன் என மிரட்டினார்.
இதனால் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிடுமோ என பயந்த நான் சந்தோசை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுகுறித்து எனது தந்தை தங்கப்பாண்டி, தம்பி முருகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த 6–ந்தேதி சந்தோசை எனது வீட்டிற்கு வரும்படி போனில் கூறினேன். அவர் உடனே எனது வீட்டிற்கு வந்தார். நாங்கள் எப்போதும் தனியாக இருக்கும்போது மதுக் குடிப்போம். சம்பவத்தன்றும் நான் சந்தோஷிற்கு மது வாங்கி கொடுத்தேன்.
சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். உடனே நான் அவருக்கு மல்லி, புதினா இலையை அரைத்து தருகிறேன் இனிமேல் உங்களுக்கு வாந்தி வராது என கூறினேன். மல்லி, புதினாவுடன் அரளி விதையையும் சேர்த்து அவருக்கு தெரியாமல் அரைத்து கொடுத்தேன். அதை வாங்கி குடித்த சந்தோஷ் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி துடிதுடித்து இறந்தார்.
பின்னர் எனது வீட்டின் அருகே காத்திருந்த தந்தை தங்கப்பாண்டியன், தம்பி முருகன் ஆகியோரை வீட்டிற்குள் வரவழைத்தேன். பின்புறமுள்ள காலி இடத்தில் ஏற்கனவே நாங்கள் தோண்டி வைத்திருந்த குழியில் சந்தோசின் உடலை போட்டு புதைத்தோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல இருந்து வந்தோம்.
கடைசியாக சந்தோசுடன் நான் செல்போனில் பேசியதை வைத்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து போலீசார் இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மின்வாரிய அதிகாரியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் தென்காசியை சேர்ந்த ஜாகீர்உசேன் இவர் தற்போது தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் மின்வாரியத்தில் இளநிலை செயற்பொறியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். ஆசிரியர் சந்தோசின் கொலை சம்பவத்தில் பொன்செல்விக்கு உடந்தையாக இருந்தாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating