பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு: உடலை தோண்டி எடுத்து விசாரணை…!!
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது36). இவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அனுஷா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஆசிரியர் சந்தோஷ் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 6–ந்தேதி சந்தோஷ் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அனுஷா கடந்த 7–ந்தேதி பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்கு பதிவுசெய்து ஆசிரியர் சந்தோசை தேடி வந்தார்.
சந்தோசின் செல்போன் எண்ணில் அவருடன் பேசியவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்தது. அப்போது அவர் பாவூர்சத்திரத்தில் ஒரு பெண்ணுடன் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியர் சந்தோஷ் கொலை செய்யப்பட்டதும், உடலை வீட்டு காம்பவுண்டுக்குள்ளேயே புதைத்ததும் தெரியவந்தது. பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே உள்ள எம்.கே.வி.கே சாலையில் வசித்து வருபவர் முருகன். என்ஜினீயர். இவரது மனைவி பொன்செல்வி. முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
ஆசிரியர் சந்தோஷ் பள்ளிக்குச் செல்லும்போது அடிக்கடி பொன்செல்வியை பார்த்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் உண்டானது. இது நாளடைவில் கள்ளக்காதல் ஆனது. கணவர் வெளிநாட்டில் உள்ளதால் ஆசிரியர் சந்தோஷ் அடிக்கடி பொன்செல்வியின் வீட்டுக்கு வந்து சென்றார். செல்போனிலும் அடிக்கடி பேசுவார்களாம்.
இந்த விவரம் மெல்ல அக்கம்பக்கத்தில் பரவியது. பொன்செல்வியின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இதுபற்றி தெரியவந்தது. அவர்கள் பொன்செல்வியையும், சந்தோசையும் கண்டித்தனர். எனினும் அவர்கள் கள்ளக்காதலை விடவில்லை. இதனிடையே அடுத்த மாதம் பொன்செல்வியின் கணவர் முருகன் விடுமுறையில் ஊருக்கு வருவதாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 6–ந்தேதி வீட்டில் இருந்த பொன்செல்வியை பார்க்க சந்தோஷ் வந்தார். அபோது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த பொன்செல்வியின் தந்தை மற்றும் தம்பி அங்கு வந்தனர். அவர்கள் சந்தோசிடம் தகராறு செய்தனர்.
தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சந்தோசை கம்பால் தாக்கினர். இதில் மயங்கி விழுந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விவரம் வெளியில் தெரிந்துவிடாமல் இருக்க இறந்த சந்தோசின் உடலை வீட்டு காம்பவுண்டுக்குள் புதைத்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் பொன்செல்வியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தையும், கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தையும் போலீசார் பார்வையிட்டனர். இதையடுத்து சந்தோஷ் கொன்று புதைக்கப்பட்ட இடத்தில் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
இதற்காக தாசில்தார் முன்னிலையில் இன்று சந்தோசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating