ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சி.சிவமோகன்.
ஒரு அரச வைத்தியராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வவுனியா, கற்குழியில் அபிசா தனியார் வைத்தியசாலை ஒன்றினையும் நிறுவி அதனை நடத்தி வந்தார்.
காலப்போக்கில் தனது வைத்தியசாலை நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் பொருட்டு வவுனியா, பொது வைத்தியசாலை அருகில் அபிசா வைத்தியசாலையின் ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவி அதனை மஹிந்தா அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்த அமைச்சர் ஒருவரால் திறந்து வைத்து இயக்கி வந்தார்.
இவ்வாறு தான் உண்டு தனது வைத்தியசேவை, உழைப்பு உண்டு என்று இருந்த வைத்தியகாலநிதி சிவமோகன் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிக்கப்பட்ட முதலாவது வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தார்.
கூட்டமைப்பின் பங்களிக் கட்சிகள் ஒவ்வொன்றிடமும் ஆசனங்களைக் கேட்ட நிலையில் இறுதியில் முல்லை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி ஈபிஆர்எப் கட்சியின் வன்னி எம்.பியான சிவசக்தி ஆனந்தன் பச்சைக்கொடி காட்ட, அவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.
ஈபிஆர்எப் கட்சி சிவசக்தி ஆனந்தன் எம்.பி தலைமையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தமது கட்சி சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்களை வெல்ல வைப்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் கண்டது.
மன்னார் கைவிட்டுப் போக, வவுனியாவில் இருவரும், முல்லையில் இருவரும் வெற்றி பெற்றனர். வவுனியாவில் சுழற்சி முறை உறுப்பினர் ஒருவரையும் பெற்றது.
இவ்வாறு வெற்றி பெற்ற நான்கு பேரில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தவிர்ந்த சிவமோகன், இந்திராசா, தியாகராசா ஆகிய மூவரும் ஈபிஆர்எப் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் இல்லை.
இருப்பினும் தாம் போட்டியிட்டு இந்த நிலைக்கு வரக் காரணமான ஈபிஆர்எப் கட்சியுடன் இணைந்து அதன் உறுப்பினர்களாகவே செயற்பட்டு வந்தனர்.
இதன்போது பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து அப்போது வடமாகாண சபை உறுப்பினராக இருந்து கொண்டே சிவமோகன் செயற்பட்டார். இறுதியில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தான் அதில் போட்டியிடப் போவதாக ஈபிஆர்எல்எப் கட்சியிடம் விண்ணப்பித்தார்.
ஈபிஆர்எல்எப் கட்சியின் வன்னிக்கிளை அவர் மாகாணசபையில் பணியாற்ற காலம் உள்ளது. அதனால் வேறு ஒருவரை போட்டியிட வைக்க கடும் பிரயத்தனம் எடுத்திருந்ததாக அறிய முடிகிறது.
இருப்பினும் சில வாகனங்களில் பொதுமக்களுடன் ஈபிஆர்எல்எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களிடம் சென்ற சிவமோகன் தனக்கு ஆசனம் வழங்குமாறு கேட்டிருந்தார்.
முல்லை மக்கள் சார்பாக சிலரும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருந்தனர். அதனடிப்படையில் தேர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளராக களமிறங்கினார்.
வன்னி மாவட்டத்தில் ஈபிஆர்எல்எப் சார்பாக போட்டியிட்ட சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிவமோகன் ஆகிய இருவரும் இணைந்து தமது வேலைகளை முன்னெடுக்கவில்லை. தனித்தனியாக தேர்தல் வேலைகளைச் செய்திருந்தனர். சில கூட்டங்களில் மட்டும் ஒன்றாக காண முடிந்ததாக மக்கள் கூறுகின்றனர்.
இதனடிப்படையில் சிவசக்தி ஆனந்தன் உட்பட மூவர் வெற்றி பெற மாவட்ட போனஸ் ஆக சிவமோகன் நான்காம் இடத்தைப் பெற்று எம்.பி ஆனார்.
ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் யாழில் தோல்வியற்றிருந்த போதும், வன்னியில் இரு எம்.பிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் நடைபெற்ற ஈபிஆர்எல்எப் கட்சியின் மத்தியகுழு மற்றும் முக்கிய கூட்டங்களில் சிவமோகன் எம்.பியும் கலந்து கொண்டதுடன், ஈபிஆர்எல்எப் கட்சியாக செயற்பட்டும் வந்தார்.
பாதுகாப்பு செலவீனத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதையும், வன்னி மக்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் தெரிவித்து கூட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சி வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தது. அந்த அறிக்கையை சிவசக்தி ஆனந்தன் எம்.பி, சிவமோகன் எம்.பி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
முதலாவது வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் தமிழரசுக் கட்சியின் சிபார்சுக்கு அமைய சிவமோகன் எம்.பிக்கு முல்லை மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இதன்பின் நடைபெற்ற இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் முதல் விட்ட அறிக்கையை மறந்த சிவமோகன் எம்.பி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். சிவசக்தி ஆனந்தன் எம்.பி வாக்களிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சிக்குள் குழப்ப நிலை மீண்டும் ஆரம்பமாகியது. அதிலிருந்து விலக ஆரம்பித்த சிவமோகன் எம்.பி கடந்த வாரம் தமிழரசுக் கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து ஈபிஆர்எப்எப் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஈபிஆர்எப் கட்சியின் செயலாளரும் வன்னி எம்.பியுமான சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் எமது “அதிரடி” இணையத்தின் வவுனியா பிரதான செய்தியாளர் கேட்ட போது,
“இது தொடர்பில் எமது கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழரசுக் கட்சி பங்காளிக் கட்சிகளை பலவீனப்படுத்தி உடைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளோம். தற்போதைக்கு இது தொடர்பில் கருத்துக்கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
Average Rating