யாழ் நகரில் நடந்த இயக்க -ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள்- மோதல்!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 61) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”
‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இயக்கங்கள் ஒன்றாதல் கண்டே’ என்று 1986 இல் பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
1986 இல் யாழ்-குடாநாட்டுக்குள் படையினரின் பிரவேசத்தை தடுப்பதில் சகல் இயக்கங்களும் ஒரு புரிந்துணர்வோடு செயற்பட்டன.
யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம், வசாவிளான் இராணுவ முகாம், நாவற்குழி இராணுவ முகாம் போன்றவற்றிலிருந்து படையினர் முன்னேற முயற்சி செய்வார்கள்.
முகாம்களுக்கு அண்மையில் இயக்கங்களின் காவல் அரண்கள் அமைந்திருக்கும்.
இராணுவத்தினர் முன்னேறுவதாகத் தகவல் கிடைத்ததும் ஒவ்வொரு இயக்கமும் தமது உறுப்பினர்களை அங்கே அனுப்பிவிடும்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் மேற்கொள்ளும் மோட்டார் ஷெல் தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருந்தது. அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் மட்டும் தான் மோட்டார் வைத்திருந்தது.
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பல தடவைகள் ஷெல் மேல் எழாமல் மோட்டாருக்குள்ளேயே வெடித்துவிடும். அவ்வாறு பல உறுப்பினர்களை ஈ.பி.ஆர்.எல்.எப் பறி கொடுத்திருக்கிறது.
எனினும் மோட்டார் n~ல் தாக்குதல் இராணுவத்தினரை அச்சுறுத்தும் விதமாக அமைந்திருந்தமையால், இழப்புக்கள் மத்தியிலும் மோட்டார் தொடர்ந்து பாவிக்கப்பட்டது.
முகாமுக்குள் பிரசுரம்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் திட்டப்படி மோட்டார் ஷெல் லில் துண்டுப் பிரசுரங்களை வைத்து யாழ் கோட்டை முகாமுக்குள் ஏவி விட்டார்கள்.
பிரசுரங்கள் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டிருந்தன. பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இதுதான்:
“படைவீரர்களே! நீங்கள் யாருக்காகப் போராடுகிறீர்கள்?
உங்களையும், எங்களையும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அரசுக்கு எதற்காக சேவகம் செய்கிறீர்கள்?
நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகப் போராடவில்லை!
சிங்கள-தமிழ் பாட்டாளிகளது பொது எதிரியான சிறீலங்கா நவபாசிச அரசுக்கு எதிராகவே போராடுகிறோம்.
ஈழமக்களது விடுதலை சிங்கள பாட்டாளிகளினதும், உழைக்கும் மக்களதும் விடுதலைக்கு முதற்படியாக அமையப்போகிறது.
இலங்கையில் சோசலிசப் புரட்சிக்கான முதலாவது போர் முனையை நாம் ஈழத்தில் திறந்திருக்கிறோம். இரண்டாவது போர்முனையை நீங்கள் சிறீலங்காவில் திறக்க வேண்டும்.
நீங்கள் எமது எதிரிகளல்ல: நாங்கள் உங்கள் விரோதிகளுமல்ல.
நமது பொது எதிரி சிறீலங்கா அரசுதான்.
எனவே திரும்பிச் செல்லுங்கள். நாம் அனைவரும் சோசலிசப் புரட்சியின் பங்காளர்களாக மாறுவோம்.” என்று பிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.
பாரிய இழப்பு
ஈ.பி.ஆர்.எல்.எப் மோட்டார் உற்பத்தி செய்வதைப் பார்த்துவிட்டு, தாமும் மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டது தமிழீழ இராணுவம்-(TEA).
தமது உற்பத்தியை ஒரு வெட்ட வெளியில் பரிசோதித்துப் பார்த்தார்கள். ஷெல் உயர எழுந்து வெடித்தது.
யாழ்- கோட்டை இராணுவ முகாமில் இருந்து விமானப்படை உதவியோடு இராணுவத்தினர் முன்னேறிவர முயன்று கொண்டிருந்தனர்.
புலிகள் அமைப்பினரும், ரெலோ அமைப்பினரும் பதிலடி நடவடிக்கைளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஒரு முனையில் இருந்து மோட்டார் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் கொட்டடிச்சந்திக்கு மிகப் பெரிய மோட்டார்களோடு வந்து சேர்ந்தது தமிழீழ இராணுவம்.
மோட்டாருக்குள் ஷெல் லைப் போட்டார் ஒருவர்.
அடுத்த நொடியே விபரீதம் நிகழ்ந்தது. மோட்டாருக்குள் போடப்பட்ட ஷெல் மோட்டாருக்குள்ளேயே வெடித்துச் சிதறியபோது,
அதன் அருகில் நின்ற தமிழீழ இராணுவ உறுப்பினர்கள் ஆறுபேர்வரை காணாமல் போனார்கள்.
அங்கங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததால் எந்த உடலும் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருக்கவில்லை.
மிகக்கோர வெடிவிபத்து அது, முதலாவது பெரிய வெடிவிபத்தும் அதுதான்.
அலார அறிவிப்பு
யாழ்-கோட்டை இராணுவமுகாமில் இருந்து அடிக்கடி ஷெல் தாக்குதல்கள் நடாத்தப்படும். ஏவப்படும் ஷெல் கள் யாழ் நகருக்குள் விழுந்து வெடிக்கும்.
யாழ் பொது மருத்துவ மனைக்கு முன்பாகவெல்லாம் ஷெல்கள் வந்து விழுவதுண்டு.
ஷெல் தாக்குதலால் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுக்க புளொட் அமைப்பினர் ஒரு திட்டம் போட்டனர்.
யாழ் கோட்டை முகாமுக்குள் இருந்து ஷெல் ஏவப்படும் சத்தம் கேட்டதும், கோட்டை முகாமுக்கு அருகில் உள்ள புளொட் கண்காணிப்பு நிலையில் இருந்து ஒரு சுவிட்சை அமுக்க வேண்டியது தான்.
யாழ் நகரில் பிரதான இடங்களில் மண்மூட்டைகள் அடுக்கி பங்கர்கள் அமைத்து வைத்திருந்தது புளொட்.
அலாரம் அடித்ததும் மக்கள் ஓடிப்போய் பங்கருக்குள் மறைந்துகொள்ள வேண்டியதுதான்.
மிகவும் திட்டமிட்டு, கோட்டை முகாமுக்கு அருகில் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்து “புளொட்” மேற்கொண்ட அந்த நடவடிக்கைக்கு பலத்த வரவேற்பு இருந்தது.
தவறுதல்தானா?
1986 இல் புலிகளுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் மோதல் ஏற்பட்டது.
யாழ்-கோட்டை இராணுவ முகாமுக்கு அருகில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் காவலரணுக்கு அந்த இயக்க உறுப்பினர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இரவு நேரமாக இருந்தாலும் கோட்டை இராணுவ முகாமின் அதிக் சக்திவாய்ந்த மின்சார லைட்டுக்கள் அந்தப் பகுதியை பகலாக்கி வைத்திருந்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களை நோக்கி திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
ஓர் உறுப்பினர்மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துவிட்டது.
அவரையும் தூக்கிக்கொண்டு ஏனைய உறுப்பினர்கள் பாதுகாப்பு நிலை எடுத்த போது, சுட்டுக் கொண்டிருப்பது இராணுவத்தினர் அல்ல என்பது தெரிந்தது.
கோட்டை முகாமுக்கு அருகில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள்தான் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்திவிட்டு ஓடிவந்த புலிகள் இயக்கத்தினர் தாம் தவறுதலாக நினைத்து சுட்டுவிட்டதாகக் கூறினர்.
“இராணுவத்தினர் என்று நினைத்துத்தான் சுட்டோம்.” என்று விளக்கம் சொன்னார்கள்.
புலிகளது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர் அமீன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர். லெபனானின் டாக்டர் ஜோஜ் ஹபாஷ் தலைமையிலான பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியிடம் பயிற்சி பெற்றவர்.
முன்னர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்ட றேகனும் அமீனுடன் பயிற்சி எடுத்தவர்தான்.
லெபனானில் பயிற்சி பெற்றவர்களை குறிவைத்து புலிகள் இயக்கத்தினர் தீர்த்துக்கட்டி வருகின்றனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்குள் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
சந்தேகங்கள்
“தவறுதலாக நடந்துவிட்டது” என்று புலிகள் சொன்னதை மறுத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் பின்வரும் சந்தேகங்களை எழுப்பியிருந்தது.
‘நகர்ப் பக்கமிருந்து கோட்டை முகாம் நோக்கிச் சென்றவர்களை இராணுவத்தினர் என்று எப்படி சந்தேகப்பட்டிருக்க முடியும்? கோட்டை முகாம் இருந்த பக்கமிருந்து வந்திருந்தால் சந்தேகப்பட்டிருக்கலாம்.
பகல் போல வெளிச்சம் இருந்த நிலையில் அடையாளம் காண முடியாமல் போனது எவ்வாறு
எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது ஏன்?’
என்பன போன்ற கேள்விகளை ஈ.பி.ஆர்.எல்.எஃப் தொடுத்திருந்தது.
கிட்டு விளக்கம்
புலிகள் இயக்க யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவுத் தளபதி டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
“வேண்டுமென்றே திட்டமிட்டு நடக்கவில்லை. தவறுதலாக நடந்தது என்பதுதான் உண்மை” என்று கிட்டு வலியுறுத்திக் கூறினார்.
புலிகள் இயக்கத்தில் ஒருவரையாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் கோபப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயளாலர் நாயகம் பத்மநாபாவும் அப்போது யாழ்ப்பாணத்தில் தங்கி நின்றிருந்தார்.
புலிகள் அமைப்பினர் வருத்தம் தெரிவித்துவிட்டமையால் மோதலைத் தூண்டும் வகையில் எவ்விதமான பதில் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று பத்மநாபாவும், டகளஸ் தேவானந்தாவும் உத்தரவிட்டிருந்தனர்.
அதற்கிடையே கோபப்பட்ட சில உறுப்பினர்கள் கோட்டை முகாமிற்கு அருகில் இருந்த புலிகளது காவலரணுக்குச் சென்று அமீனைச் சுட்ட உறுப்பினர்களை தேடினார்கள்.
ஆனால் சம்பவம் நடைபெற்ற உடன் குறிப்பிட்ட உறுப்பினர்களை கிட்டு அழைத்துச் சென்று விட்டார்.
இறுதிச்சடங்கு
சாவகச்சேரியில் அமீனின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
சாவகச்சேரியில் கடைகளை மூடுமாறு ஈ.பி.ஆர்.எல்.எஃப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடைகள் மூடப்பட்டன.
புலிகளது தீவிர ஆதரவாளர்கள் சிலரது கடைகள் மட்டும் திறந்திருந்தன. அக் கடைகளுக்கு முன்பாக வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.
ஒரு சிறுவன் காயமடைந்தான். வெடி குண்டை வெடிக்கவைத்த உறுப்பினர், இராணுவப் பிரிவில் முக்கியமானவர். அவரை அழைத்து கடுமையாகக் கண்டித்தார் டக்ளஸ் தேவானந்தா.
மீண்டும் மோதல்
முதலாவது சம்பவம் மோதல் இல்லாமல் முடிந்தபோதும், மற்றுமொரு சம்பவத்தால் மோதல் வெடித்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமைச் செயலகம் இருந்தது.
தலைமைச் செயலகத்தின் பின்புறமிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
காவல்பணியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்ப்பதற்கிடையில் துப்பாக்கிக் பிரயோகம் செய்தவர்கள் தப்பிச் சென்று விட்டார்கள்.
அருகிலிருந்த ரெலோ முகாமில் விசாரித்தபோது, கிட்டுவின் கார் அவ்வழியாகச் சென்றதைப் பார்த்ததாகக் கூறினார்கள்.
அதனால் புலிகள் மீது ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
புலிகள் அமைப்பினது பிரதான முகாம் யாழ்ப்பாணம் தட்டாதெருச் சந்திக்கு அருகாமையில் இருந்தது.
நல்லூர் சம்பவம் நடைபெற்று முடிந்த கையோடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதி டக்ளஸ் தேவானந்தாவும், மத்திய குழு உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தட்டாதெருச் சந்தி வழியாக மானிப்பாய் நோக்கி ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.
வேனுக்கு முன்பாக டக்ளஸ் தேவானந்தாவின் மெய்யப்பாதுகாலர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தட்டாதெரு சந்திக்கருகில் பாவல்பணியில் ஈ.டுபட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் மோட்டார் சைக்கிளை மறித்தார்.
மறித்தபடியே பிஸ்டலை எடுத்து நெற்றிக்கு எதிராக நீட்டினார். மோட்டார் சைக்கிளில் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர், பிஸ்டலை எட்டிப்பிடித்துக் கொண்டு பிஸ்டலை நீட்டியவரை கீழே வீழ்த்திவிட்டார்.
டக்ளஸ் தேவானந்தாவின் வேனில் இருந்தவர்களும் தமது ஆயுதங்களோடு கீழே குதித்தபோது புலிகளது முகாமில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தது.
இரு தரப்பினரும் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.டுபட்டுக்கொண்டிருக்க, முதலில் பிஸ்டலை காட்டிய புலிகள் இயக்க உறுப்பினரான ரிச்சாட்டை அவரது பிஸ்டலாலேயே டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலரான ரமணன் சுட்டுவிட்டார்.
ரிச்சாட் சாகவில்லை: உயிர் இருந்தது. மீண்டும் அவரைச் சுடமுயன்றபோது டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரான பரேம் குறுக்கே விழுந்து தடுத்துவிட்டார். அவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்.
துப்பாக்கிச் சமர் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ரிச்சாட்டை தூக்கி வேன் ஒன்றில் போட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார் பிரேம்.
அதேநேரம் டக்ளஸ் தேவானந்தாவையும், சுரேஸ் பிரேமச்சந்திரனையும் பாதுகாப்பாக வெளியேற்றி அனுப்பி விட்டார்கள்.
அரைமணிநேர சமரின் பின்னர் துப்பாக்கி முழக்கங்கள் ஓய்ந்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் நால்வரை புலிகள் பிடித்து வைத்துக் கொண்டார்கள்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை தூக்கிக் கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் சென்று விட்டார்கள்.
அதனையடுத்து தம்மிடம் பிடிபட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரை புலிகள் சுட்டுக்கொன்றார்கள்.
சமரசம்
இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் யாழ்ப்பாணம் எங்கும் ஒரே பதட்டமாக இருந்தது. புலிகள் இயக்க மானிப்பாய் பொறுப்பாளர் ஐயர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களால் தாக்கப்பட்டார்.
“புலிகள் வசமுள்ள நான்கு போரையும் உடனடியாக விடுவிக்காவிட்டால் தட்டாதெரு முகாம்மீது மோட்டார் ஷெல் தாக்குதல் நடத்தப்படும். அருகிலுள்ளவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
யாழ் நகர முன்னால் மேயர் விசுவநாதன் சமரசம் செய்ய முன்வந்தார். அவரது வீடும் தட்டாதெருப்பகுதியில்தான் இருந்தது.
யாழ்-பல்கலைக் கழகத்தில் இரு தரப்பும் சந்தித்துப் பேசுவதாக முடிவு செய்யப்பட்டது.
ஒரு புறம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மறுபுறம் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஆயுதம் ஏந்தி வரிசையாக நின்றார்கள்.
புலிகளது சார்பாக கிட்டுவும், திலீபனும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பாலா ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
நல்லூர் அலுவலகம் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது தாம் அல்லவென்று கிட்டு உறுதியாக தெரிவித்தார்.
“நம் இரு அமைப்புக்கிடையேயும் மோதல் ஏற்படுத்த விரும்பும் இயக்கமொன்றுதான் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு, பழியை எங்கள் மீது போட்டடிருக்கிறது” என்று கூறினார் கிட்டு.
(பின்னர் விசாரித்துப் பார்த்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.: கிட்டு சொன்னதில் பொய்யில்லை என்று தெரிந்தது.)
மேற்கொண்டு எந்தப் பிரச்சனை வந்தாலும் இரு தரப்பும் நேரடியாகப் பேசித்தீர்ப்பது என்ற முடிவோடு இரு தரப்பினரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்களது உடல்களையும் இராணுவ மரியாதையோடு திரும்பி ஒப்படைத்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
புலிகளும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினரது உடலை ஒப்படைத்தனர்.
Average Rating