விண்வெளி அதிவேக தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு…!!
புறாக்களைக் கொண்டு தகவல்களை அனுப்பியதிலிருந்து, தற்போதைய மிகை வேகத்தில் தரவுகளைக் கடத்தும் ஒளியிழைக்கடத்திகள் வரை, மனிதனின் தகவல் பரிமாற்ற யுகம் புவி மேற்பரப்பில் பரிணாம வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. இதற்கும் அப்பால், செய்மதிகளுக்கும் புவி அலைவாங்கிகளுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனைகள், வேறு கோள்களில் ஆய்வு செய்யும் உபகரணங்களின் தரவுகளை புவிக்கும் பரிமாற்றுதல் போன்றவற்றிற்கும் விண்வெளியிலான தகவல் பரிமாற்றப் பொறிமுறை அவசியமாகின்றது. ஆய்வு முயற்சிகள் மட்டுமல்லாமல், விண்வெளியில் குடியேறுதல், விண்வெளிக்குச் சுற்றுலா செல்லுதல் தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எதிர்காலத்தில் விண்வெளிக்கும் புவிக்குமிடையிலான தகவல் வலையமைப்பு விரைவானதாகக் கட்டமைக்கப்படுவது அத்தியாவசியமானதாகும்.
விண்வெளியிலான தகவல் பரிமாற்றத்திற்கு தற்போது பயன்பட்டுவரும் முறைமை மந்தகதியிலேயே செயற்படுவதாக அமைகின்றது. எடுத்துக்காட்டாக, கடந்த வருடம் புளுட்டோ கோளினை அண்மித்துப் பயணித்த “நியூ ஹொரிஸோன்” செய்மதி சேகரித்த தரவுகள் அனைத்தையும் புவிக்குத் தரவிறக்கம் செய்ய 13 மாதங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்வெளியில் பல்வேறு முயற்சிகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் விரைவான தகவல் பரிமாற்ற கட்டமைப்பினை விண்வெளியில் கட்டமைக்க ஆய்வாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஐரோப்பியக் கூட்டமைப்பின் விண்வெளி ஆய்வுமையம் ESA ஆனது. விண்வெளியில் லேசர் (கதிர்களை உபயோகித்து தரவுகள் மற்றும் தகவல்களை விரைவில் நகர்த்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் 10 ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டுவந்தது. இந்த ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெறப்பட்டதையடுத்து, இப்புதிய வழிமுறையிலான விண்வெளித் தகவல் பரிவர்த்தனைக்கான முதலாவது செய்மதி EDRS-A கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பல செய்மதிகள் புவியை வலம் வந்துகொண்டிருக்கின்றன. தகவல் தொடர்பாடல், ஆய்வு, உளவு என அவற்றின் பணிகள் வெவ்வேறானவையாக அமைகின்றன. இதுதவிர, புவி மேற்பரப்பினை அவதானித்துத் தகவல் தருவதற்கான செய்மதிகளும் அண்மையில் ஏவப்பட்டுள்ளன. புவியின் ஒருபகுதியில் அனர்த்தம் ஏற்படுகையில் அதனை அவதானிக்கும் செய்மதிகளால் அதுதொடர்பான தகவல்கள் உடனடியாகக் கிடைக்கப்பெற்றால், முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு மதிப்பு மிக்க மனித உயிர்களைக் காப்பாற்ற இயலும்.
தற்போதைய நிலையில் புவி தொடர்பாக செய்மதியால் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்று புவிக்கு வந்தடைய சில மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு ( (European Data Relay System – EDRS) செயற்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் சில நிமிடங்களிலேயே புவியை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆய்வுகளின் பிரகாரம், 1.8Gbps (1.8 gigabits per second) என்ற வீதத்தில் தரவுகள் புதிய கட்டமைப்பின் வழியே பரிமாற்றப்பட வழியேற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவல் பரிமாற்றக் கட்டமைப்பில் இணைக்கப்படும் செய்மதிகள் புவிசார் நிலை ஒழுக்கில் (Geostationary orbit) நிறுத்தப்பட்டு புவியை வலம்வர அனுமதிக்கப்படும். இந்த ஒழுக்கில் பயணிக்கும் செய்மதி எப்போதுமே புவியின் ஒரு புள்ளியில் நிலையாக இருக்கும் வகையில் அமையும். அச்செய்மதிகள் லேசர் கதிர் வழியேயான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தின் வழி புவித்தாழ் ஒழுக்கில் விரைந்து புவியை வலம்வரும் செய்மதிகளிலிருந்து தகவல்களைச் சேகரிக்கும்,
பின்னர் பெறப்பட்ட தரவுகள் அதேதொழில்நுட்பத்தின் வாயிலாக புவிக்கு விரைவாக அனுப்பப்படும்.
இக்கட்டமைப்பின் முதலாவது செய்மதி EDRS-Aஎனப் பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்மதியில் லேசர் கதிரினால் தரவுகள் அனுப்பப்படத்தக்கதான உபகரணம் ஜேர்மனிய நிறுவமொன்றினால் உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 40,000 கிலோமீற்றர் தொலைவில் பயணிக்கும் மற்றுமொரு செய்மதி ஒன்றுடன் லேசர் கதிர் வழியே தரவுகளை பரிமாறும் வகையில் புதிய தொடர்பாடல் நுட்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இச்செய்மதி சுமார் 15 வருடங்கள் செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய தகவல் பரிமாற்ற வலையமைப்பிற்கான மற்றுமொரு செய்மதி 2017 ஆம் ஆண்டிலும், இன்னுமொரு செய்மதி 2020 ஆம் ஆண்டிலும் விண்ணிற்கு ஏவப்பட்ட பின்னரே இந்த வலையமைப்பு முழுமை பெற்றுச் செயற்பட ஆரம்பிக்கும்.
இந்த வலையமைப்பிற்கான புவி மேற்பரப்பிலான தரை அலைவாங்கி நிலையங்கள் ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. அனுப்பப்பட்டுள்ள செய்மதிக்கும் தரை அலைவாங்கி நிலையங்களுக்கும் இடையிலான தகவல் பரிவர்த்தனை பரீட்சிப்புக்கள் எதிர்வரும் மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
Average Rating