கும்மிடிப்பூண்டியில் பூட்டிய வீட்டில் இரும்பு கம்பியால் கழுத்தை இறுக்கி பிளஸ்-2 மாணவி கொலை..!!
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள திப்பன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அம்பிகா. இவரது கணவர் இறந்து விட்டார். அம்பிகா ரெயிலில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மகள் ரோசம்மாள் (17) தலையாரிப்பாளையத்தில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 12–ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு அம்பிகா வழக்கம் போல் புறநகர் ரெயிலில் பழ வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். ஆனால் வீட்டில் இருந்த ரோசம்மாள் கதவை திறக்கவில்லை.
சந்தேகம் அடைந்த அம்பிகா, வீட்டின் ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்த கட்டிலில் மகள் ரோசம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அம்பிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
துணை போலீஸ் துணை சூப்பிரண்டு சிவலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் சுடலை மணி, டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி ரோசம்மாளின் கழுத்தில் கம்பியால் இறுக்கியதற்கான ரத்த காயம் காணப்பட்டது. மேலும் அவரது உள்ளாடைகள் கிழிந்து இருந்தன.
வீட்டிற்கு வெளியே அவரது செருப்பு அறுந்த நிலையில் காணப்பட்டது. உடைந்த ஜன்னல் வழியாக மர்ம வாலிபர் ஒருவர் தப்பி ஓடியதை பார்த்ததாக அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
எனவே மாணவி ரோசம்மாள் தனியாக வெளியில் சென்று திரும்பிய போது மர்ம வாலிபர் அவரை விரட்டி வந்து இருக்கலாம் என்று தெரிகிறது. பயந்து போன அவர் வீட்டை பூட்டி அறையில் பதுங்கிய போது கொலையாளி ஜன்னலை உடைத்து புகுந்து கற்பழிப்பு முயற்சியில் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அம்பிகாவின் வீட்டின் அருகே அதிக அளவு குடியிருப்புகள் இல்லை. எனவே கொலை நடந்த போது மாணவி ரோசம்மாளின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவில்லை. இதனால் கொலையாளி எளிதாக தப்பி சென்று உள்ளான்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. கொலையுண்ட மாணவி ரோசம்மாளை கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் அந்த லாரி டிரைவர் குடி பழக்கத்தை கொண்டு உள்ளார் என்பது தெரிந்ததும் மாணவியை திருமணம் செய்து கொடுக்க குடும்பத்தினர் மறுத்து உள்ளனர்.
இருப்பினும் லாரி டிரைவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து ரோசம்மாளை திருமணம் செய்து கொடுக்கும்படி அவரது தாய் அம்பிகாவிடம் தகராறு செய்தார். மேலும் மாலையில் பள்ளி முடிந்து ரோசம்மாள் வீட்டுக்கு திரும்பும் போது பலமுறை அவரை பின் தொடர்ந்து வந்து தொல்லையும் கொடுத்து இருக்கிறார்.
எனவே மாணவியை, லாரி டிரைவர் கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது ‘‘மாணவி ரோசம்மாள் என்னை போன் செய்து பேச வருமாறு கூறினார். நான் சென்ற போது அவர் இறந்து கிடந்தார். உடனே நான் பயந்து சென்று விட்டேன்’’ என்று கூறி உள்ளார்.
பூட்டிய வீட்டிற்குள் எப்படி லாரி டிரைவர் சென்றார்? எப்படி வெளியேறினார் என்பது குறித்து முன்னுக்கு பின் முரணாக கூறி வருகிறார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை குறித்து ரோசம்மாவின் தாய் அம்பிகா கூறும்போது, இரவு வியாபாரம் முடிந்து வந்தபோது பூட்டிய வீட்டிற்குள் ரோசம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கஷ்டப்பட்டு ரெயிலில் பழ வியாபாரம் செய்து படிக்க வைத்தேன். அவள் மிகவும் தைரியமானவள்.
அவளை கொலை செய்தவரை கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். எனது ஒரே மகளும் போய் விட்டாள் என்று கண்ணீர் மல்க கூறினார்.
பூட்டிய வீட்டிற்குள் பிளஸ்–2 மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating