சென்னையில் உலா வரும் சீரியல் கில்லர் – பெண்களை மட்டும் கொல்வதால் பீதி!
சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொல்லும் தொடர் கொலைகாரர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். நேற்று முன்தினம் 4வதாக ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறார்.சென்னை நகரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மட்டும் குறி வைத்து கொலை செய்யும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7 மாதங்களில் இதுபோல 3 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். மே மாதத்தில் திருமங்கலத்தில் கலைச்செல்வி என்பவரும், ஜூன் மாதம் கொரட்டூரில் தமிழ்செல்வி என்ற பெண்ணும், அதே மாதத்தில் மடிப்பாக்கத்தில் ஒருவரும் இதுபோல கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களில் கொலை மட்டுமே நடந்துள்ளது, நகை, பணம், பொருட்கள் கொள்ளை போகவில்லை என்பதால் பெண்களைக் கொல்வதை மட்டுமே குறியாகக் கொண்டு இந்த பயங்கரம் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 4வதாக ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் சாப்ட்வேர் என்ஜீனியர் லட்சுமிநாராயணன். இவரது மனைவி ஜெயமாலா (31). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் லட்சுமி நாராயணனின் வீடு உள்ளது. நேற்று காலை லட்சுமி நாராயணன் வேலைக்குப் போய் விட்டார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றனர். மாலை 3 மணிக்கு வீடு திரும்பிய அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
மாலை 4 மணியளவில் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீடு திறந்து கிடந்தது. அம்மாவைக் கூப்பிட்டபடி இருவரும் உளளே சென்றனர். ஆனால் சத்தம் எதுவும் வரவில்லை. இதனால் ஒவ்வொரு அறையாகப் போய் பார்த்தனர். அப்போது குளியலறையில், ஜெயமாலா கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து குழந்தைகள் இருவரும் அலறினர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்போர் விரைந்து வந்தனர். போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து லட்சுமி நாராயணனும் விரைந்து வந்தார்.
ஜெயமாலாவைக் கொலை செய்த நபர், வீட்டில் எதையும் திருடவில்லை. எனவே இதற்கு முன்பு நடந்த 3 கொலைகளிலும் தொடர்புடைய அதே நபர்தான் ஜெயமாலாவையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆந்திராவில் இதுபோல சமீபத்தில் தொடர் கொலைகள் நடந்தன. அதே பாணியில் சென்னையிலும் நடந்திருப்பதால் அந்தக் குற்றவாளிகளுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாருக்கு வந்துள்ளது.
ஜெயமாலா கொலை தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தனிப்படை ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்துக் கொலைகள் நடப்பது சென்னை நகர பெண்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.